எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 30 - பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் பச்சையாக பார்ப்பனிய காவி வெறியாட்டங்கள் நிர்வாணமாக நடைபெற்று வருவதை ஆதாரத்துடன் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ (26.3.2017) அம்பலப்படுத்தியுள்ளது. சேட்டன் சவுகான் என்ப வரால் அக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வெட்டும், சட்டப்படி உரிமம் பெறாத தொட்டிகள் மீதான தாக்குதல்களை உத்தரப் பிரதேசத்தில் புதிதாக அமைந்துள்ள பா.ஜ.க. அரசு தொடங்கி இருப்பது,   ரோமியோக்கள் என்று அறியப்பட்டுள்ள சில்லறை இந்து குழுக்களில் உள்ள வன்முறையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது.

மத வன்முறைச் செயல்கள் சிறிதளவிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். ஆனால், கோரக்நாத் கோயிலின் தலைமைப் பூசாரி முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பதே, இந்துத்துவச் செயல்பாட்டை இம் மாநிலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான் என்று பலரும் கூறுகின்றனர். எதிர்க் கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸ் கட்சி சரியாகக் குற்றம் சாட்டுவது போலவே,  ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தைப் பிரச்சாரம் செய் வதற்கு ஏற்றபடியாக, தங்களது கொள்கைகளை சரியாகவே இந்த மாநில அரசுகள் மாற்றிக் கொண்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்திலோ அல்லது பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலோ  நடந்து கொண்டிருப்பவை வியப்பளிப்பவை அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து இதனைத்தான் ஒருவரால் எதிர்பார்க்க இயலும். ‘‘கடந்த 65 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட நியாயமான, பகுத்தறிவு கொண்ட அனைத்தையும் மாற்றவே அவர்கள் விரும்புவார்கள்’’ என்று டில்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் டி.என்.ஜா கூறுகிறார்.

அது போன்ற ஏதேனும் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடை பெறுமா என்று கூறுவதற்கான காலம் இன்னமும் வரவில்லை என்ற போதிலும், பா.ஜ.க. ஆட்சி செய்து வரும்  இதர மாநிலங்களில் காவி முத்திரை பதிக்கப்படுவது வளர்ந்து வருகிறது என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

பாடநூல்கள் மாற்றம்: கலாச்சார சீர்திருத்தம் என்ற பெயரில்,  ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலை ஆகியன பாடங்கள் பள்ளி பாடநூல்களில் இருந்து நீக்கப்பட்டதுடன், நாட்டில் நெருக்கடி நிலை பிரகட னப்படுத்தப்பட்டது பற்றியும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டாளர் தீனதயாள் உபாத்யாயா பற்றியும் புதிய பாடங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

புதிய பள்ளி சீருடை: அடுத்த கல்வி ஆண்டு முதல், பள்ளி மாணவர்கள் காக்கி நிற கால்சட்டைகளுக்கு பதிலாக காவி நிற கால்சட்டைகளையே அணிந்து வரவேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

சூரிய வணக்கம்:  அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வழிபாட்டின் ஒரு பகுதியாக சூரிய வணக்கம் என்னும் இந்த இந்து மத சடங்கு இருக்கும். சந்திர வழிபாட்டை மேற்கொள்ளும் சமூகத்தினர் (முஸ்லிம்கள்) சூரியனை அவமதிக்க இயலாது என்று இம்மாநிலக் கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார்.

பசுபாதுகாப்பு :  பசு பாதுகாப்புக்கு என்று ஒரு தனிப்பட்ட துறையையே கொண்டிருக்கும் மாநிலம் இந்த ராஜஸ்தான் மாநிலம் ஒன்றுதான்.  பசுபாதுகாப்பு அமைப்பின் பெயரால்,  அதன் உறுப்பினர்களான பசுபாதுகாவலர்கள் என்று அழைக்கப்படும் வன்முறையாளர்கள், 2016 ஜூன் மாதத்தில் பிரதாப்கரில், பசு இறைச்சியைக் கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பல இளைஞர்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். ஜெய்ப்பூரில் இருந்த முஸ்லிமுக்கு சொந்தமான ஒரு உணவு விடுதியை சாத்வி கர்னல் மூடச் செய்தார்.

மத்திய பிரதேசம்

பசுவதைக்கு கடுமையான தண்டனை :  பசுவதை தடுப்புச் சட்டத்திற்கு, பசுக் கொலைக்கான தண்டனையை மூன்று ஆண்டுகளில் இருந்து ஏழு ஆண்டுகளுக்கு உயர்த்தி,  2010 ஆம் ஆண்டில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்தான் குற்றவாளி என்று அரசு தரப்பில் மெய்ப்பிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, தான் குற்றம் அற்றவர் என்பதை குற்றம் சாட்டப்பட்டவரே மெய்ப்பிக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மய்யங்கள் மீதான தடை நீக்கம்:  ஆர்.எஸ்.எஸ்.சின் பயிற்சி வகுப்புகளில் அரசு ஊழியர்கள் பங்கெடுத்துக் கொள்வதன் மீது இருந்த தடையை அரசு நீக்கியது. இதுபற்றி அரசின் கண்ணோட்டம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பு அல்ல என்பதால் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக அவற்றில் பங்கேற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.

உடைவிதிகள்:  அடுத்த கல்வி ஆண்டு முதல், கல்லூரியில் பயிலும் பெண்கள் சல்வாரும், குர்தாவும் கட்டாயமாக அணிந்து வரவேண்டும்.

புனித யாத்திரை :  இறைவழிபாட்டுத் தலங்களுக்கு புனித யாத்திரை செல்வதற்கு,  அரசு நிதி உதவி வழங்கும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்துக்கள் அல்லாத சமூகத்தினரும் இந்த உதவியை பெற முடியும் என்றாலும், இதனை ஒரு இந்துத்துவ செயல் திட்டமாகவே எதிர் கட்சிகள் பார்க்கின்றன.

யோகாவும், சூரிய வணக்கமும்:  கல்வி  கற்கும் மாணவர்களின் ஆற்றல் குறைவாக உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், யோகா ஒரு கட்டாய பாடமாக இருக்கும். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சூரிய வணக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரியானா

பசு பாதுகாப்பு:  பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு எடுத்துச் செல்பவர்களை பிடிப்பதற்கு அகில இந்திய காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ஒரு பசுவைக் கொண்டு வரவேண்டும் என்றால், அரசிடமிருந்து உரிமம் பெறப்படவேண்டியது அவசியமானது ஆகும்.

சரஸ்வதி நதியைத் தேடுதல்:  ரிக் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சரஸ்வதி நதியை புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு செயல்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இமயமலை சுற்றுச்  சூழல் பற்றி ஆய்வு செய்யும் வாடியா நிறுவனத்திடம், சரஸ்வதி நதியைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பெயர்மாற்றம் :  குர்கான் என்ற பெயர் குருகிராமம் என்று மாற்றப்பட்டுள்ளது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் துரோணாச்சாரியார் இந்த இடத்தில்தான் பயிற்சி அளித்தார் என்று மகாபாரதம் கூறுவதுதான் இதன் காரணம். யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள முஸ்தபாபாத் என்ற பெயர், சரஸ்வதி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது. இதிகாச புகழ் பெற்ற சரஸ்வதி நதியுடன் அது தொடர்புடையது என்பதுதான் இதன் காரணம்.

பாடதிட்ட மாற்றம் :  பகவத் கீதையைப் பாட திட்டத்தில் சேர்ப்பதற்கான ஒரு கருத்தை அரசு வெளிப்படுத்தியது. ஆனால் அதற்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, நீதிநெறி பாட புத்தகத்தில் கீதையும் மற்ற இந்து மத புனித நூல்களும் சேர்க்கப்பட்டன.

குஜராத்

பாடநூல்களில் மாற்றம்:  ஆர்.எஸ்.எஸ்.சின் கல்விப் பிரிவு உறுப்பினர் தீனநாத் பாத்ராவின் நூல்களே பள்ளி பாடநூல்களாக இருக்கும் என்று 2014 ஆம் ஆண்டில் அரசு ஆணையிட்டது. பண்டைய இந்தியாவில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப் பட்டன என்று தெரிவிக்கும் இந்த நூல்கள் அனைத்து அரசு ஆரம்ப, இடைநிலை பள்ளிகளில் பாடநூல்களாக இருக்கும்.

பசுவதைக்கான கடுமையான தண்டனை:  பசுக்களும், கன்று களும் இறைச்சிக்காக கொல்லப்படுவதையும், இறைச்சியை மற்ற இடங்களுக்கு அனுப்புவதும் சட்டப்படியான குற்றங்கள் என்று அறிவிக்கும் சட்டம் ஒன்றை 2011 இல் மாநில அரசு இயற்றியது. இக்குற்றத்தை இழைப்பவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டு காலம் வரை சிறை தண்டனை வழங்க இச்சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்த இப்போது அரசு உத்தேசித்துள்ளது.

பசுபாதுகாப்பு :  பசு பாதுகாப்பு செயல்பாடுகளில் அதிக அளவில் செயல்படுபவருக்கு ரொக்க ஊக்கப் பரிசு வழங்கி வரும் ஒரே மாநிலம் குஜராத் மாநிலம்தான். இதில் முதல் இடம் பிடிப்பவருக்கு 3.75 லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது.

ஜார்கண்ட்

பசுக்கொலை தடுப்பு சட்டம்:  அர்ஜூன் முண்டா தலை மையிலான முந்தைய பா.ஜ.க. அரசால் பசுக்கொலைத் தடுப்புக் காக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை மாநில அரசு கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துகிறது. பசுக் கொலையை பிணையில் வெளிவரமுடியாத ஒரு குற்றமாக ஆக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் மாற்றம் :  புகழ் பெற்ற ராஞ்சி கல்லூரியின் பெயரை, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்வதற்கான ஒரு திட்டத்தை அண்மையில் ராஞ்சி பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்த முனைந்தது. இப்போது அந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதமாற்ற சட்டத்தில் திருத்தம்  :  இந்துக்களை கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்யும் குற்றம் இழைக்கும் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு அபராதம் விதிப்பதற்கான ஒரு சட்டம் இயற்றப்படும் என்றும், அது போன்ற கட்டாய மத மாற்றங்களை  பதிவு செய்பவருக்கு உதவி செய்வதற்காக ஒரு கணினி வலைதளம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் ரகுபர் தாஸ் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner