எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘பாரத மாதாவின் புண்ணிய பூமி’ - இப்போது சாமியார்களின் சாம்ராஜ்யமாகி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது!

சாமியார்கள் என்றால் முற்றும் துறந்த முனிவர்கள் - துறவிகள் என்று முன்பெல்லாம் இருந்தது!

சமண, பவுத்த துறவிகள்தான் உண்மையான துறவறம் பூண்ட தூய வாழ்க்கை நடத்தினர்!

அடுத்த வேளை உணவுக்குக்கூட ‘பிச்சை’ எடுத்துத்தான் உண்ணவேண்டும், உறங்கவேண்டும் என்றிருந்த நிலை அது!

பள்ளி - குருகுலம் என்பதெல்லாம் குருவான துறவியின் ‘உபதேசத்தை’ சீடர்கள் கீழே கல் படுக்கைக்கு கீழே அமர்ந்து கேட்டு அவர்களும் அந்த மார்க்கத்தின் கொள்கைகளை பரப்புவர்களாக சுற்றித் திரிந்தவர்கள் ஆவார்கள்!

ஆனால், இப்போது ‘பாரத’ நாட்டுப் பழம்பெரும் வைதீக கலாச்சாரத்தை பரப்புவோர் அனைவரும் ஆட்சி, அதிகாரம், தொழில் இவைகளைக் கைப்பற்றி கொள்ளை லாபக் குபேரர்களாகி,  அய்-டெக் சாமியார்களாக மாறி, கோடிகளில் - அரசியல்வாதிகளையும் மிஞ்சி புரண்டு ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று ‘‘மஞ்சள் குளிக்கின்றனர்!’’

கார்ப்பரேட் சாமியார்கள் ஒருபுறம் ‘நானே கடவுள் அவதாரம்‘ என்று ஏய்த்து பல கோடி சுருட்டிய ஒடிசா சாமியார் ஒருவரது மடத்தில் வருமான வரி ‘ரெய்டு’ நடத்தி அந்த போலித்தனப் பேர்வழியைப் பிடித்துள்ளனர்! 110 கோடி கைப்பற்றல்.

ஆனால், அரசு நிலம், வனத்துறை முதலியவை களை கபளீகரம் செய்து, யானைகள் போன்ற காட்டில் நடமாடும் வன விலங்குகளுக்குக்கூட உலவ இடமில்லாததால் அவை ஊருக்குள் வந்து மக்களை அவதியுறச் செய்வதற்குக் காரணமான ஈஷாக்களும்,

பசுமைத் தீர்ப்பாயம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை 5 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரவி என்ற சுற்றுச்சூழல் நாசகாரர் - இப்போது ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி ஆகி, தன் குடும்ப உறவுகளுடன் ஜொலிக்கும் ஸ்டாராகி பல அரசின் தலைவர்களுக்கு ‘‘ராஜகுருவாக’’ பவனி வரும் நிலை!

அரியானாவில் ஒரு சாமியார் உள்ளே - பழைய பிரேமானந்தாக்களையும், புதிய நித்தி யானந்தாக்களையும்கூட மிஞ்சும் வகையில் உள்ளே கரு கலைக்க, சிதைக்க கருவி கருணாதிகளைக் கொண்டே மகப்பேறு மருத்துவமனை நடத்தியவர் கைது செய்யப்படவில்லையா?

என்றாலும், மக்களுக்குப் புத்தி வரவில்லை. தந்தை பெரியார் அவர்கள் சொன்னாரே,

‘‘பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்!’’

என்பதற்கிணங்க திரும்பவும் இந்த ‘420’ மோசடி சாமியார்களால் ஈர்க்கப்பட்டு, ஏமாற்றப்படுகின்றனர்.

இன்று காலை எல்லா ஏடுகளிலும் வந்துள்ள ஒரு செய்தி:

கூடுவாஞ்சேரி அருகில் அங்கேயே பல ஆண்டு களுக்குமுன் தொழில்  - இரு சக்கர வாகனம் ரிப்பேர் செய்தவர் - இன்று குறுக்கு வழியில் சாமியாராகி விட்டார்.

24 வயது பெண்மணி  திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். அவரை வற்புறுத்தியும், பயமுறுத்தியும் தனது  இச்சைக்கு இணங்க வைத்துள்ளார். சில நாள் மன அழுத்தம், பிறகே உண்மை வெளியே வர (செய்தி தனியே காண்க) ஊராரே சென்று நையப் புடைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மோசடிப் பிரிவு - குற்றப் பிரிவு - கியூ பிரிவு - சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு மாதிரி  சாமியார் மோசடி தடுப்புப் பிரிவு ஒன்றையும் காவல்துறையில் மத்திய - மாநில அரசுகள் உருவாக்கிட வேண்டாமா?

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட் டிலே என்று பாடிப் பொழுதைக் கழித்தால் போதுமா?

நாட்டின் பொது ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டாமா?

அரசுகள் சிந்தித்து ஆவன செய்யட்டும்!

- ஊசிமிளகாய்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner