எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உடனடி உதவிகளை அரசு செய்யட்டும்!!

கழகத் தோழர்களே களப் பணியில் ஈடுபடுவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

இராசபாளையம் அடுத்த கே.தொட்டியபட்டி யில் வாழும் அருந்ததியினர் மீது ஜாதி வெறியினர் நடத்திய கொடூர தாக்குதலைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இராசபாளையம் அருகே கே.தொட்டியபட்டியில் நானூறுக்கும் மேற்பட்ட கம்பளத்து நாயக்கர் குடும்பங் களும், அய்ம்பதுக்கும் மேற்பட்ட அருந்ததியின மக்களும் அருகருகே வசித்து வருகின்றனர்.

நாயக்கர் ஜாதி மக்கள் அருந்ததியின மக்களை அரசு பொதுநலக் கூடத்தைப் பயன்படுத்த அனுமதிக்காமலும், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க குறைந்த நேரமே அனுமதித்தும் அவர்களை தீண்டாமைக் கண்ணோட் டத்தோடு புறக்கணித்து வந்தனர்.

இதை அவர்கள் மாற்றிக் கொண்டு சகோதரத்துவ உணர்வுடன் வாழ முயலவேண்டும்.

பாதிக்கப்பட்ட அருந்ததியினர்

அருந்ததியின மக்கள் தங்கள் உரிமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைப் பொறுக்காமல் கடந்த 30.3.2017 அன்று மாலை 200-க்கும் மேற்பட்ட நாயக்கர் ஜாதியினர் திட்டமிட்டு அருந்ததியினர் குடியிருப்பில் புகுந்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை உடைத்து உள்ளே இறங்கி பொருட்களை சேதப்படுத்தியும், குடிசைகளை அடியோடு கொளுத் தியும், மக்களை அடித்துக் காயப்படுத்தியும், சுமார் ஒன்றரை மணிநேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே குடும்பத்திற்கு 2000 ரூபாய் வரை வரி போட்டு, பணம் வசூலித்து இந்த வன்முறை வெறியாட்டத்தை திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

உள்ளிருப்புப் போராட்டம்!

உடைக்கப்பட்ட வீடுகளுக்கு, எரிக்கப்பட்ட வீடு களுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரக் கோரியும், அடிப்படை வசதிகளும், காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் பெற்றுத்தரக் கோரியும், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியக் கோரியும்  அருந்ததியின மக்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

துப்புரவுப் பணியாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவுமே அந்த மக்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு இவ்வளவு தொல்லை நியாயமா?

திராவிடர் கழகத்தின் சார்பில்...

திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, அமைப்பாளர் இரா.பாண்டி முருகன், செயலாளர் பூ.சிவக்குமார், மா.முருகன், த.இசக்கிபாண்டியன், அரிராம் சேட், இரா.கோவிந்தன் ஆகியோர் சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தனர். வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் கழகத்தின் களப்பணிகள் தொடரும்!

2012 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி பகுதி களில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளைக் கொளுத்தி, பொருள்களைச் சூறையாடியதற்குப் பின்னர் நிகழ்ந்தி ருக்கிற கேவலமான வெறியாட்டம் இது!

அவசர அவசரமாக குற்றவாளிகள்மீது நடவடிக்கைகள் தேவை!

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யக்கூடும், செய்யவும் வேண்டும். அதைவிட முக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சூறையாடும் கொடியவர்கள்மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறவேண்டும்.

அரசு நிர்வாகம், நீதித்துறை நடவடிக்கைகள் வழமை யான எறும்பு ஊரும் மெத்தன நடவடிக்கைகளாலும், சட்டத்தின் சந்துப் பொந்துகளில் நுழைந்து குற்றவாளிகள் தப்பிவிடுவதாலும், ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற பாணியில் தீர்ப்புகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகும் நிலைதான் தொடர்கிறது.

இந்த நடைமுறையை மாற்றி, உடனுக்குடன் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதற்கு மாநில அரசு வேகத் தடைகளையுடைத்து விரைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முற்போக்கு அமைப்புகள் கூட்டாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருங்கி¬ணைந்து உரிய உதவிகளைச் செய்வது அவசியம்.

அரசு செய்யவேண்டியது என்ன?

கொளுத்தப்பட்ட, இடிக்கப்பட்ட வீடுகளைப் புதிதாகக் கட்டவும், நட்ட ஈட்டைத் தாராளமாக வழங்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற இன்றியமையா ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும்வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கழகத்தின் பிரச்சார நடவடிக்கைகள்

மக்கள் மனதில் வேர்ப் பிடித்து வெறியூட்டிக் கொண்டி ருக்கும் தீண்டாமை, ஜாதி உணர்வுகளைக் கெல்லி எறிந்திட கழகம் தனது பிரச்சாரப் பயணத்தை அந்த வட்டாரங்களில் மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

திராவிடர் கழகம் என்ன செய்கிறது என்று வெறும் குற்றப் பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிராமல், அதன் சமூகப் பணிகளுக்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும் - வெறும் வார்த்தை உபதேசிகள்!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.


4.4.2017
சென்னை

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner