எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர் எழுப்பும் வினா

தென்னிந்தியர்கள் கறுப்பர்களாக இருந்தும் அவர்களை நாங்கள் வெறுக்கவில்லையே என்று தருண் விஜய் கூறுவதன் பின்னணி என்ன என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

நொய்டாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர்களுள் முக்கியமானவர் என்று கூறப்படும் தருண் விஜய், இந்தியர்கள் இன பாகுபாடு பார்த்தால் எப்படி கறுப்பான தென் இந்தியர்களுடன் சேர்ந்து வாழ முடியும் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம் எழுப்பும் கேள்வி

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் தெரிவித்த கருத்து முக்கியமானது. 'நாங்கள் கறுப்பர்களுடன் வாழ்கிறோம்!' என தருண் விஜய் கூறுகிறார், நான் அவரிடம் ஒன்று கேட்கிறேன்? "நாங்கள்" என்றால் யார்? "பாஜக, ஆர்எஸ்எஸ்-காரர்கள் மட்டும்தான் இந்தியர்களா?" என்ற மிகச் சரியான கேள்விக்கு நாணயமான விடை தேவை.

யார் இந்தத் தருண்விஜய்?

தருண் விஜயைப் பொறுத்த வரையில் திருக் குறளையும், திருவள்ளுவரையும் மய்யப்படுத்தி தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே மயக்க பிஸ்கட்டுகள் கொடுத்து தமது அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பிஜேபியை காலூன்றச் செய்யும் தந்திர வழியில் ஈடுபட்டவர்.

'பஞ்சான்யா' எனும் ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் ஆசிரியராக இருந்தவர்தான் இந்தத் தருண் விஜய். தமிழர்களை ஏமாற்ற அவர் போட்ட முகமூடி இப்பொழுது கிழிந்து தொங்கி விட்டது. அவரை தூக்கிச் சுமந்து 'பராக்குப்' பாடிய தமிழ் 'மெய்யன்பர்கள்' காலங் கடந்தாவது சங்பரிவார்க் கூட்டத்தின் 'நிறத்தை' சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.

இந்தியா ஒரே நாடு அது இந்துத் தேசியம் என்றெல்லாம் சொல்லி வந்த வட்டாரத்திலிருந்து வட இந்தியர், தென் இந்தியர் என்று பிரித்துப் பார்க்கும் புத்தி அம்பலமாகி விட்டது.

தென்னிந்தியாவில் உள்ளவர்கள் எல்லாம் கறுப் பர்கள். வட இந்தியாவில் வாழ்பவர்கள் எல்லாம் சிகப்பர்களா? ஏனிந்த தோல் ஆராய்ச்சி? மனதில் உள்ளது, தானே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாரா விதமாக வெளியே வந்து விடும் - வந்தும் விழும்.

வேதங்களை எடுத்துக் கொண்டாலும், 'ஓ இந்திரனே எங்களைச் சுற்றிக் கறுப்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தலையில் இடியைப் போடு, நெருப்பைக் கக்கு என்பவை இடம் பெறவில்லையா? அந்த வேத காலத்தைக் கொண்டு வரத் துடிக்கும் காவிக் கூட்டத்தின் வாயிலிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

மத்திய அமைச்சரின் தரம் தாழ்ந்த பேச்சு

மத்திய அமைச்சராக இருக்கும் கிரிராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை இந்த இடத்தில் நினைவூட்டுவது சரியானதாக இருக்கும். ராஜீவ்காந்தி ஒரு நீக்ரோவைத் திருமணம் செய்து கொண்டிருந்தால், சோனியா இந்த  இடத்திற்கு வந்திருக்க முடியுமா என்று கேட்டதன் பொருள் என்ன?

கோவா முதல் அமைச்சர் இலட்சுமிகாந்த் பாரிக்கர், செவிலியர்களின் போராட்டத்தின்போது 'நீண்ட நேரம் வெயிலில் நிற்காதீர்கள்; உங்கள் அழகான நிறம் கறுப்பாக மாறி அழகை இழக்க நேரிடும் - பிறகு உங்களை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்' என்று பேசவில்லையா?

பிரியங்கா காந்தி அழகு பற்றி சர்ச்சை

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது பிரியங்கா காந்தியின் அழகைப் பற்றி பேசி சர்ச்சைக்குள்ளானவர் வினய் கட்டியார் என்ற பிஜேபி தலைவர் (பாபர் மசூதி இடிப்பிலும் முக்கிய குற்றவாளி!

சங்பரிவார் வகையறாக்களின் புத்தியே நாகரிக மற்றது - எதையும் குறுக்கு வழியில் குயுக்தியாக கீழ்த் தரமாகப் பார்ப்பது - வெறுப்பது - விமர்சிப்பது என்பது அவர்களின் ரத்தவோட்ட சுபாவமாகவே இருந்து வருகிறது.

சொல்லுவதும் வருத்தம்

தெரிவிப்பதும் வாடிக்கையே!

ஒன்றைச் சொல்லி விடுவது - எதிர்ப்பு வந்தால் வருத்தம் தெரிவிப்பது என்பதை வாடிக்கையான வழமையாகக் கொண்டவர்களும் இவர்கள்தான் என்பதும் நினைவிருக்கட்டும்.

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்

9-4-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner