எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பணப்பட்டுவாடாவைக் காட்டி ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதா?

தேர்தல் ஆணையத்தின் செயலின்மைதானே இதற்குக் காரணம்?

தள்ளி வைப்பது தீர்வாகுமா? - வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

தேர்தல் முறையில் தேவை அடிப்படை சீர்திருத்தம்!

தமிழர் தலைவர் ஆசிரியர்  முக்கிய அறிக்கை

 தருண் விஜயின் நாகரிகமற்ற பேச்சு  தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் என்று  சொல்லுவதன் பின்னணி என்ன?

பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது தவறு; பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையமே முழுப் பொறுப்பு; தேர்தல் முறையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் (ஏப்ரல்) 12ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல்  -தேர்தலுக்கு இரண்டே நாள்கள் இடைவெளி இருக்கும் நிலையில் - ரத்து செய்யப்பட்டது என்று டில்லியிலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பினை நள்ளிரவு  12 மணி அளவில் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே இதே போல தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது (சென்ற ஆண்டு மே மாதத்தில்) தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இதே குற்றச்சாட்டைக் கூறி, கடைசி நேரத்தில் அங்கு தேர்தலை ரத்து செய்தனர். பிறகு சில மாதங்கள் கழித்து அவ்விடங்களிலும் (வேட்பாளர் மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதியிலும்) தேர்தல் நடைபெற்றது!

வெட்கம், வேதனை, தலைக் குனிவு!

ஆர்.கே. நகர் தொகுதியில் ஏராளமாகப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தேர்தல் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது!

இதைவிட தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும், மக்களும் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண் டிய அவமானம், தலைக்குனிவு வேறு இருக்க முடியாது.

பணப்பட்டுவாடாவை வெகு மிக நூதன முறையில் - 'ஆம்புலன்ஸ்' வாகனங்களையும், அரசு வாகனங்களையும் பயன்படுத்தி நடத்திடும் முறை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த காலத்திலேயே நடைபெற்றதை எவரும் மறுக்கவே முடியாது. தேர்தல் ஆணையம் அப்போது தடுத்திருந்தால் இப்போது இது  திரும்புமா?

திருப்பூர், கண்டெய்னர் லாரி பிடிபட்டது என்னாயிற்று?

அது மட்டுமல்ல; திருப்பூர் அருகில் பிடிபட்ட கண்டெய்னர் லாரிகளில் கடத்திச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய்  அரசு வங்கிகளுக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி தப்பிக்க முயன்றது; எவ்வளவு பெரிய முறை கேடு!  கேள்விகளுக்கு மேல் கேள்விகள் எழுந்த நிலைக்கு மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கிகள், நிதித்துறை உட்பட யாரிடமிருந்தும், திருப்திகரமான விளக்கமோ, விடையோ இன்று வரை கிடைக்கவே இல்லை.

மத்திய பிஜேபி அரசின் யோக்கியதை

இன்றைக்கு பொது ஒழுக்கத் தத்துவம் பேசும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும்,  அதன் நிதித்துறை மேலிடமும் ஒத்துழைப்பு தந்திருந்தால் ஒழிய சம்பந்தப்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டிருக்க முடியுமா? அப்படி அன்று பிடிபட் டவைகளுக்கு சரியான விளக்கந்தான் இதுவரை வெளி வந்துள்ளதா?

பொது மக்களின் மறதிதான்  ஒரே லாபமா? எனவே இப்போது குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டிய புத்தசாலித்தனம் (?)  போல இப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு தேர்தலை ரத்து செய்துள்ளது!

இவ்வளவு பணம் பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று ஆளும் அதிமுக - அதன் மற்றொரு பிரிவின் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாக  அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. (அதிமுகவின் இரண்டு அணிகள் பற்றியே குறிப்பிட்டுள்ளனர்)

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்ப தற்காகத் தானே தேர்தல் ஆணையம்? அது தனது கடமையிலிருந்து தவறியது; சரியான அளவுக்குச் செயல்படவில்லை என்றுதானே பொருள்?

முதல் குற்றவாளி யார்?

எனவே இதில் முதல் குற்றவாளி பணங்கொடுத்த வேட்பாளர்களைவிட, அதனைக் கண்டுபிடிக்காததற்கு யார் பொறுப்பு? வருமான வரித்துறை கண்டுபிடித்த பின்னரே தாங்கள் விழித்துக் கொண்டதாகக் காட்டுவதும், தேர்தலை ரத்து செய்வதும் எந்த அளவு ஜனநாயகப் பாதுகாப்பு ஆகும்?

வருமுன்னர் காத்து, தடுத்து, நிறுத்தத் தவறியது ஏன்? எனவே முழுப் பொறுப்பும் தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மைதானே முதன்மையானது?

எனவே, முதலில் தமிழக தேர்தல் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

காவல் துறையினர் யாராவது கைதிகளைத் தப்பிக்க விட்டால் அந்த காவல்துறை அதிகாரிகள்தானே அதற்குப் பொறுப்பு?

அதே நியாயம்தானே இங்கும் பொருந்தும்? ஆணையத்தின் "கையாலாகாத்தனத்தையே" இது காட்டுகிறது!

இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டியவர்கள் அத்தனை அதிகாரிகளும்தான்!

அடுத்து, பணப்பட்டுவாடாவை எந்த ரூபத்தில் செய்தாலும் அதனைக் கண்டறிந்த நிமிடத்திலேயே வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்

அடுத்து இதற்குப் பொறுப்பானவர்களை, அவர்கள் ஆளுங் கட்சியானாலும் தயவு தாட்சண்யம் இன்றித் தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும்.

மக்கள் வரிப் பணம் பல மடங்கு வீணாகியுள்ளது.

தேர்தல் ரத்து என்பது சரியான தீர்வாகாது. மீண்டும் இதே முறை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தேர்தல் முறையில் அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து ஊழலை, ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை அறவே வேரறுக்க வேண்டும்.

தேர்தல் செலவை நாணயமாகக் காட்டும் வேட் பாளர்கள் அரிதினும் அரிதல்லவா? - தேர்தல் சீர்திருத்தம் இன்றியமையாதது.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
10-4-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner