எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத் தலைவரின் இரு அறிக்கைகள்

தென்னாட்டு மக்களைக் கறுப்பர் என்று அடையாளம் காட்டும் தருண் விஜய்க்குக் கண்டனம் - ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதா?  தேர்தல் ஆணையத்தின் செயலின்மைதானே இதற்குக் காரணம்?

பி.ஜே.பி. பிரமுகரும், மேனாள் நாடாளு மன்ற உறுப்பினருமான தருண்விஜய் தென்னாட்டவர்களைக் கறுப்பர்கள் என்று அடையாளம் காட்டும் வகையில் தெரிவித்துள்ள கருத்தினை எதிர்த்து கண்டனம் - ஆர்ப்பாட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான (ஏப்ரல் 14) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பி.ஜே.பி. பிரமுகரும், ஆர்.எஸ்.எஸ். இதழான ‘பஞ்சான்யா’வின் மேனாள் ஆசிரியருமான தருண்விஜய் - டில்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்தியாவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.

‘‘இந்தியர்கள் இன வெறியர்கள் அல்ல; நாங்கள் இனவெறியர்களாக இருந்தால், கறுப்பர்களாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ முடியும்?’’ என்று கூறியுள்ளார்.

இது நாடாளுமன்றம்வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சமூக வலைதளங்களிலும் அனல் பறக்கும் நிலையை உருவாக்கி விட்டது.

‘தென்னாடு பிரியும்!'

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜூனே கார்கே நறுக்கென்றும், சுருக்கென்றும் ஒரு கேள்வியை எழுப்பினார். ‘‘தென்னிந்தியாவில் வாழக்கூடிய நாங்கள் எல்லாம் இந்தியர்களா? இல்லையா?’’ என்ற கேள்வியோடு நிறுத்திடவில்லை; ‘‘இம்மாதிரியான பேச்சுகளைப் பி.ஜே.பி. அனுமதித்தால், தென்னாடு தனியாகப் பிரியும் நிலை ஏற்படும்‘’ என்று அனல் கக்கப் பேசியுள்ளார்.

அவரது பேச்சுக்குப் பெரும் ஆதரவும் இருந்தது. அவை மூன்றுமுறை ஒத்தி வைக்கவும்பட்டது.

நம்மைப் பார்த்து ‘பிரிவினைவாதிகள்’ என்று சொல்லக்கூடிய ‘தேசியத் திலகங்கள்’, பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தினர் தருண்விஜய் கருத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றனர்?

தருண் விஜய் பேச்சைக் கண்டித்து பி.ஜே.பி. தரப்பில் இதுவரை ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை? இதன்மூலம் வடநாடு - தென்னாடு, ஆரியர் - திராவிடர் என்ற வேறுபாட்டை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அவர்களின் மனதில் உள்ளதுதான் இப்படியொரு கருத்தாக வெளிவந்துள்ளது என்பது விளங்கிட வில்லையா?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவர் இவர்கள்?

தருண்விஜய் வேடம் கலைந்தது. ஒப்பனை இல்லா உண்மை உருவம் உலா வருகிறது இதன்மூலம்!

திராவிடர்களே, புரிந்துகொள்ளுங்கள் - உழைப்பவர் கறுப்பாக இல்லாமல் எப்படி ‘மஞ்சளாக’வா இருக்க முடியும்?

ஜாதி, மத உணர்வுள்ளவர்கள் சிந்தனை என்பது இப்படி எவரையும் பிரித்துப் பார்க்கும், பேதப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டதுதான் என்பதற்குத் தருண் விஜய் பேச்சே உதாரணமாகும்.

இதனைக் கண்டிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு  மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

--------------------

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி

திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

 

தமிழ்நாட்டு விவசாயிகள் வாழ்வா சாவா என்ற எல்லையில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். தண்ணீருக்குத் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தமிழக விவசாயம் தரை தட்டிய கப்பலாகி விட்டது. விவசாயிகளின் தற்கொலைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் பல வகைகளிலும் தங்களின் உணர்வினை வெளியிடும் வகையில் பல்வேறு போராட்டங்களிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகரமான டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் வரை நடத்தியுள்ளனர். ஆனா லும், ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்ற பொருத்தப் பாட்டுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமலேயே, விவசாயப் போராளிகளைச் சந்திக்க பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இது பெரிதும் கண்டிக்கத்தக்கதாகும்.

1. கூட்டுறவு விவசாயக் கடன்கள் மட்டுமல்ல, தேசிய வங்கிகளிலும் வாங்கப்பட்ட கடன்கள் ரத்து. (கந்து வட்டிக்காரர்களிடமும் விவசாயிகள் சிக்கியுள்ளனர்)

2. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைத்தல்.

3. மீனவர்களுக்கு வழங்குதல்போல விவசாயம் இல்லாத காலகட்டத்திற்கு நிவாரண உதவி. அறவே விவசாயம் பாதிக்கப்படும் காலகட்டங்களுக்குக் கூடுதல் நிதி உதவி அளித்தல்.

4. விவசாய உற்பத்திக்குக் கட்டுப்படியான விலை.

5. நூறு நாள் வேலைத் திட்டம் அன்றாட வாழ்க் கைக்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தது. அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.

6. விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களை செயல் படுத்தக்கூடாது.

இவற்றையெல்லாம் முன்னிறுத்தி மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்திடும் வகையில், வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் மானமிகு வீ.மோகன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தோழர்கள் பெருமளவில் பங்கேற்று விவசாயி களின் ‘‘கொதி நிலையை’’ வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner