எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புரிந்துகொள்ளுங்கள்!

‘‘சர்ச் லைட்’’

1. சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் சரத்குமார் வீடு போன்ற இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றபோது 7.4.2017 அன்று பல்வேறு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்த அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுகிறார்:

‘‘அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க - திட்டமிட்ட நடவடிக்கையில் மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்சின் ஆலோசனைப்படி நடக்க இரண்டு பழுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள்  (Hardcore RSS Leaders) தமிழ்நாட்டில் வந்து தங்கி, அவர்கள் அறிவுரை, மேற்காட்டல்வழிதான் பல நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.’’

***

2. ‘‘...தமிழகத்தில் இதுபோன்ற அசாதாரண சூழலைச் சமாளிக்க நிரந்தர கவர்னர் வேண்டும் என நினைக்கிறார்கள். முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் உள்ளிட்ட இரண்டு கறாரான நபர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ்காரரான பரத்வாஜ் ஏற்கெனவே கருநாடக மாநில கவர்னராக இருந்தவர். காங்கிரசுமீது அதிருப்தியில் இருக்கும் பரத்வாஜ், பி.ஜே.பி. பக்கம் சாய்ந்திருக்கிறார். அவரோ அல்லது வேறு யாரோ புது கவர்னராக வந்த பிறகு இந்த ஆட்டம் தொடங்கும்.’’

‘‘அ.தி.மு.க.வின் ஆட்டத்தை முடித்தாலும், இங்கு தி.மு.க. வலுவாக இருக்கிறதே!’’

‘‘பி.ஜே.பி.யின் தலைமை அதை யோசிக்காமல் இருக்குமா? அதற்கான வேலைகளும் எப்போதோ தொடங்கி விட்டன. தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் சிலரை, கடந்த மாதம் நாக்பூரில் வைத்து பி.ஜே.பி.யின் முக்கியத் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

தி.மு.க.வை உடைப்பதற்கு அவர்களிடம் பேரங்கள் பேசப்பட்டு விட்டன.

இந்தச் சந்திப்பில் தி.மு.க.வில் இருந்து ஏழு பேர் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலும் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் கொங்கு மண்டலத்தில் அழகிரியின் ஆதரவாளராக உள்ள ஒருவர்தான் இந்த சந்திப்புக்குத் தலைமை ஏற்றவர். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட மற்றொரு வி.அய்.பி. டில்லி பி.ஜே.பி. பிரமுகர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர்.

பி.ஜே.பி. தமிழகத்தில் நேரடியாகக் காலடி எடுத்து வைக்க முடியாது. அதனால், எல்லா குறுக்கு வழிகளிலும் முயற்சி செய்கிறது. பி.ஜே.பி.யின் முயற்சி வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்று கழுகார் சட்டெனப் பறந்தார்.’’

- 16.4.2017 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ ஏடு வெளியிட்டுள்ள தகவல் கட்டுரை ‘கழுகு’ பகுதியில்,

ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைப்புப்பற்றியும் அதே கட்டுரையில் உள்ள சில தகவல்கள்:

‘‘ஏப்ரல் 4, 5, 6 ஆம் தேதிகளில் வாரி இறைக்கப்பட்ட தொகையால், தினகரன் பக்கம் அலை அடிக்க ஆரம்பித்தது. இதையெல்லாம் தெளிவாக உளவுத்துறை ரிப்போர்ட்டாக அனுப்பியது. அதன் பிறகுதான், ‘இந்தத் தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது. தினகரன் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும், இனி அவர்தான் அ.தி.மு.க. என்ற பிம்பம் உருவாகிவிடும். அதன் பிறகு சமாளிப்பது கடினம்‘ என்று டில்லி தலைமைக்கு இங்கிருந்து சொல்லப்பட்டது. ரெய்டுக்கு அனுமதி அதன்பிறகே கிடைத்தது. அதேநேரம் தேர்தல் கமிஷனும் முனைப்பு காட்டிக் கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆவணங்கள் சிக்கின.’’

மற்றொரு தகவல் (ஜூ.வி.) கழுகார் கட்டுரை:

‘‘....ஓ.பி.எஸ். அணிக்கும், பி.ஜே.பி.-க்கும் பாலமாக இருப்பது ஆடிட்டர் ஒருவர். அவர் மூலம்தான் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுக்குத் தகவல்கள், ஆலோசனைகள் பரிமாறப்பட்டு வந்தன. ‘‘தேர்தல் ரத்து ஆகலாம், இப்போது எதுவும் செய்யவேண்டாம். காத்திருங்கள்’’ என்று அவர் மூலமாக தகவல் வந்தது. அதனால், பணப் பட்டுவாடாவை நிறுத்தி வைத்தார். ஜி.கே.வாசனுடன் இணைந்து செய்யும் தனது பிரச்சாரத்துக்குக்கூட நேரத்துக்குப் போகாமல் தள்ளிப் போட்டபடியே இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அன்று தேர்தல் ரத்து செய்யப்படவில்லை. இதற்குமேல் காத்திருப்பது ரிஸ்க் என, ஞாயிற்றுக்கிழமை இரவு பணப்பட்டுவாடாவை செய்யத் தீர்மானித்தனர். ஆனால், ‘‘மேலே பேசிவிட்டு வருகிறேன் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்‘’ என்று ஆடிட்டரிடமிருந்து சிக்னல் வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு பணப்பட்டுவாடா பணிகளைத் தொடங்கும் அந்த நொடியில், ‘‘வேண்டாம். நள்ளிரவில் தேர்தல் ரத்து அறிவிப்பு வரலாம். இந்த முறை தவறாது’’ என்று தகவல் வந்தது. அதனால், பன்னீருக்குச் செலவு மிச்சம்.

‘துக்ளக்‘ 19.4.2017 இதழில் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி....

‘‘இந்த நிலையில், அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், நாட்டின் நலன் கருதியும் ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்கள் என்ன செய்யவேண்டும்?

ஆர்.கே.நகர் தேர்தல் இப்போது நடந்தாலும் சரி, எப்போது நடந்தாலும் சரி, சசிகலா அணியை தீயசக்தி என்று வாக்காளர்கள் கருதி, அதை முழு மூச்சுடன் எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும். ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓ.பி.எஸ். அணியை வெற்றி பெறச் செய்து, தி.மு.க.வையும் தோற்கடித்தால், தமிழக அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும்.’’

(இது தேர்தல் ரத்துக்கு முன்பே வெளிவந்துவிட்ட ‘துக்ளக்‘ ஏட்டிலிருந்து).

****

14.4.2017 ‘விஜயபாரதம்‘ (ஆர்.எஸ்.எஸ். வார ஏடு)

‘‘புத்தாண்டில் நடைபெறும் சில முக்கிய நிகழ்வுகள்

மழை தேவைக்கேற்ப பொழியும். தாவர எண்ணெய், தானியம், கரும்பு, நிலக்கடலை உற்பத்தி அதிகரிக்கும். சர்க்கரை, வெல்லம் விலை குறையும். விலைவாசி குறையும். தேசப் பாதுகாப்பிற்கான நவீன ராணுவத் தளவாடங்கள் அமைக்கப்படும். எல்லைகளில் அந்நியர்களின் அக்கிரமங்கள் அடக்கப்படும். ஆவினங்கள் பாதுகாக்கப்படும், தங்கம், வெள்ளி விலை சற்று குறையும். தேசப் பொருளாதாரம் உயரும், கருப்புப் பணங்கள் மீண்டும் மீட்கப்படும். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல சலுகைகள் வழங்கும். மத்திய அரசு மேலும் மேலும் வலுப்படும். தமிழகம் திடீர் தேர்தலை சந்திக்கும்.’’

பி.ஜே.பி.யின் திருவிளையாடல்களை புரிந்துகொள்வீர் தமிழர்களே!தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner