எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டாஸ் மாக்கை எதிர்த்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனை அடக்குவதாக நினைத்துக்கொண்டு காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துத் தீர்த்துள்ளனர். ஆண் - பெண் என்ற வேறுபாடின்றிக் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார் காவல்துறை உயரதிகாரி.

காவல்துறையினரின் கையில் கொடுக் கப்பட்டுள்ள தடி - அச்சுறுத்தலுக்குத்தானே தவிர - கண்மூடித்தனமானத் தாக்குதலுக்காக அல்ல.

தமிழ்நாடு அரசின் மதுவிலக்குக் கொள்கை என்ற கொள்கை மண்டையின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று இதனைக் கருதலாமா?

முருகன் கோவில் எலுமிச்சை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 9 எலுமிச்சைப் பழங்கள் ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம் போயுள்ளது.

ரத்தினவேல் முருகன் கோவிலில் உள்ள சூலத்தில் சொருகப்பட்டிருந்த எலுமிச்சைப் பழங்கள்தான் இவை.

ஏலத்துக்கு விடப்பட்டபோது பக்தக் கோடிகள் பணத்தை வாரி இறைத்து இப் பழங்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்தப் பழங்களை சாப்பிட்டால் குழந்தைப் பேறு கிட்டுமாமாம்!

என்னே மூடநம்பிக்கை! பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு கணந்தோறும் கணந்தோறும் நிரூபிக்கப்பட்டு வருகிறதல்லவா?

குழந்தைப் பேறு இல்லாததற்கு என்ன காரணம்? மருத்துவ ரீதியாகக் கண்டு பிடிக்கப்பட வேண்டியவை அல்லவா! கருத் தரிப்பு நிலையங்கள் ஊர்தோறும் ஊர்தோறும் காணப்படுகின்றனவே!

அவர்கள்கூட அவைகளை மூடிவிட்டு - அந்த இடங்களில் எல்லாம் அவை ஒரு சூலத்தை நட்டு வைத்து எலுமிச்சைப் பழங்களைச் சொருகினால் நல்லா கல்லாக் கட்டலாமோ!

தூக்குக்குத் தேவை தூக்கு!

தூக்குத் தண்டனை கூடாது - அது மனிதத் தன்மைக்கு எதிரான - அரசே கொலை செய்யும் போக்கு என்ற கருத்து உலகம் முழுவதும் மனித உரிமையாளர்களால் ஓங்கி ஒலித்துச் சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தூக்குத்தண்டனை விதிப்பு கடந்த ஆண்டில் 81 விழுக்காடு அதிகம் என்றாலும், யாருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மரணதண்டனை தொடர்பாக பன்னாட்டு ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் ஆம்னஸ்டி அறிவித்துள்ளது (இவ்வாண்டுக்கானது) 2016 இல் இந்தியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை 136; 2015 இல் 75, ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை 2016 இல் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை 73. உலகம் முழுவதும் 2016 இல் 23 நாடுகளில் நிறைவேற்றப்பட்ட தூக்குத்தண்டனை 1032. 2015 இல் 25 நாடுகளில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை 1634. இதில் இரண்டு நாடுகள் 2016 இல் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, ஈரான், சவுதி  அரேபியா, ஈராக், பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிகமாக மரண தண்டனை எகிறியுள்ளது.

‘பொதுவுடைமை’ பேசும் சீனா இதில் முதல் இடத்தில் இருப்பது சரியானதுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner