எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்பேத்கர் அவர்களைப்  பரப்புவதைவிட - அதுதானே பரவுவது காலத்தின் கட்டாயம் - பாதுகாப்பதே - திரிபுவாதங்கள், திசை திருப்பல் களிலிருந்து காப்பதே அவசரமான,  அவசியமான பணியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் திகழ்ந்து ஒளி பாய்ச்சிய புரட்சியாளர் ‘பாபா சாகேப்’ அண்ணல் அம்பேத்கரின் 127 ஆவது பிறந்த நாள் இன்று (14.4.2017)!

அம்பேத்கரின் நிகழ்த்தப்படாத உரை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1934 ஆம் ஆண்டிலேயே டாக்டர் அம்பேத்கரை, தனது பச்சை அட்டை ‘குடிஅரசு’ வார ஏட்டின்மூலம் முதன்முதலில் மக்களுக்கு அறிமுகமாகும் வண்ணம் அவரது நிகழ்த்தப்படாத உரையான ‘‘ஜாதி ஒழிப்பினை’’ வெளியிட்டவர் தந்தை பெரியார்.

பஞ்சாப் ஜாட்பட் தோரக் மண்டல் என்ற அமைப்பு - அம்பேத்கர் அவர்களை ஜாதி ஒழிப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்க அழைத்தபோது, அவர் அந்த அழைப்பினை ஏற்றார். உரையை முன்கூட்டியே தந்தால், அச்சிட வசதியாக இருக்கும் என்று கூறியதால், அம்பேத்கர் அவர்களும் எழுதித் தந்தார்.

அதில் இந்து மதம், கீதை, கடவுள்கள், பார்ப்பனியத்தைக் கண்டித்து, ஜாதிக்கு ஆதாரமாக முட்டுக்கொடுக்கும் இவைகளையெல்லாம் வேரோடு பெயர்த்து எறிந்தால்தான் ஜாதி ஒழியும் என்று அறிவியல் பூர்வ வாதங்களோடு உரையைத் தயாரித்து அனுப்பினார்.

ஜாதியை ஒழிக்க வழி!

அதன் சில பகுதிகளை நீக்கி விடும்படி மாநாட்டினர் கேட்டனர்; டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, முதன்முதலில் தந்தை பெரியார் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்களிடம் அதைக் கேட்டுப் பெற்று தமிழாக்கம் செய்து பரப்பியதோடு, ‘‘ஜாதியை ஒழிக்க வழி’’ என்ற தலைப்பில் குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பினார்! முதல் அறிமுகம் அப்போதுதான்! அதன்பின் இரு புரட்சியாளரும் மேலும் 3, 4 தடவை நேரில் சந்தித்தும் உரையாடினர்.

பெரியாரும் - அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

உலக பவுத்தர்கள் மாநாடு அன்றைய பர்மா (இன்றைய மியான்மாவில்) நடைபெற்றது. அழைப்பு பெற்று அய்யா அந்த மாநாட்டிற்குச் சென்றார்; டாக்டர் அம்பேத்கர் அவர்களும் அழைப்பு பெற்று சென்று, பவுத்தத்தில் சேருவதுபற்றிய ஆலோசனையை கலந்து பேசினார்.

இப்படி பற்பல கொள்கைப் பிரகடனங்கள்- லட்சியப் போர்களில் - மனுதர்ம எரிப்பு உள்பட இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆயினர்!

வைக்கம் போராட்டம்தான், மகாராஷ்டிர மாநிலம் சவுதார் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுக்கும்  - அம்பேத்கர் நடத்திய போராட்டத் திற்கு முன்னோடி - முக்கிய ‘உற்சாக ஊக்கி’யாகவே டாக்டர் அம்பேத்கருக்கு அது அமைந்தது!

நவீன வேஷம் போடும் காவிகள்!

இத்தகைய அம்பேத்கரை இப்போது காவிகள் ஆக்கிரமித்து, தாழ்த்தப் பட்டோரின் வாக்கு வங்கியைப் பறிக்க நவீன வேஷம் போடுகின்றனர். மதவாதம் ஒப்பனைகளால் அம்பேத்கரை கபளிகரம் செய்யத் துடிக்கிறது. எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் இது!

எனவே, அம்பேத்கரைப் பரப்புதைவிட - அதுதானே பரவுவது காலத்தின் கட்டாயம் - பாதுகாப்பதே - திரிபுவாதங்கள், திசை திருப்பல்களிலிருந்து காப்பதே அவசரமான ,  அவசியப் பணியாகும்!

வாழ்க அம்பேத்கர்! வருக அவர் விரும்பிய புதிய சமுதாயம்!சென்னை                                                                                           தலைவர்
14.4.2017                                                                                     திராவிடர் கழகம்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner