எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டுக்கு ஏன் நிரந்தர ஆளுநர் இல்லை?

‘‘கூடுதல் பொறுப்பு'' எப்படி நிரந்தர நியமனம் ஆகும்?

உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியானதுதானா?

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதா?  தேர்தல் ஆணையத்தின் செயலின்மைதானே இதற்குக் காரணம்?

தமிழ்நாட்டுக்கு நிரந்தர ஆளுநர் நியமனம் தேவை என்ற பொதுநல வழக்கில், தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கும் ஆளுநரே நிரந்தரமானவர்தான் என்று மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் கூறுவதும், அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் எப்படி சரியாகும்? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 6, 7 மாதங்களுக்குமேல் தமிழ்நாட்டிற்கென்று தனி ஆளுநர் (கவர்னர்) நியமனம் செய்யப்படாமலேயே மகாராஷ் டிரத்தில் ஆளுநராக உள்ள வித்யாசாகர ராவ் அவர்களே, தமிழ்நாட்டிற்கும் பொறுப்பு ஆளுநராக செயல்படுகிறார்.

மகாராஷ்டிரமும் சரி, தமிழ்நாடும் சரி இரண்டும் பெரிய மாநிலங்கள் ஆகும்!

அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளும், குழப்பங்களும், ஆளுநரிடம் பலர் முறையிடும் நிலையும், அரசியல் சட்டப்படியான அவசரப் பணிகள் ஆகும்!

அரசியல் நெருக்கடியான வேளையில் தமிழ்நாட்டிற்கென தனியான ஆளுநர் இருந்தால் சில அல்லது பல குழப்பங்களுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும்.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகருக்குச் (மும்பை) சென்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. ஆளுநரிடம் மனு கொடுக்கவேண்டிய அசாதாரண நிலை வேடிக்கை இல்லையா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு?

இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வந்த பொது நல வழக்கொன்றில், மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்,

‘‘...........சட்டத்தில் ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக பதவி வகிப்பதற்கும் வழிவகை உள்ளது. அதன்படி ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை கூடுதல் பொறுப்பாகக் கருதக்கூடாது’’ என்று வாதிட்டுள்ளார்!

அவ்வாதத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு, மனுதாரரின் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது!

இது சரியான வாதமா? சரியான தீர்ப்பா?

மகாராஷ்டிரா மாநிலத்திற்குத்தான் திரு.வித்யாசாகர் ராவ் அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு கூடுதல் பொறுப்பு (Additional incharge) தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டு அத்துணை அறிவிப்புகளிலும் ‘‘பொறுப்பு ஆளுநர்’’ என்றுதானே அறிவிக்கப்பட்டுள்ளது?

பொறுப்பு ஆளுநர் -

எப்படி நிரந்தர ஆளுநர் ஆவார்?

பொறுப்பு ஆளுநர் நியமனம் எப்படி சட்டப்படி  நிரந்தர கவர்னர் (முழுநேர)  நியமனம் ஆக முடியும்?

இதன்படி மும்பை - சென்னை இரு தலைநகரங்களில் முறையே மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் பிரச்சினைகள் ஏராளம் உள்ளனவே!

மாநில ஆளுநர் தமிழ்நாடு அரசின் பல பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராகவும் (Chancellor) உள்ளவர். சுமார்  ஒன்பது பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி ஆண்டுக்கணக்கில், மாதக் கணக்கில் காலியாக உள்ளன. பட்டமளிப்பு விழாக்களோ, அன்றாட சீரான நிர்வாகமோ இல்லை; ‘தலை இல்லா’ அமைப்புகளாகி யுள்ளன!

இதுபோல பலப் பணிகள் கிடப்பில் உள்ளன!

கூடுதல் பொறுப்பும் - தனி நியமனமும்!

சட்டப்படி - இவர் தமிழ்நாட்டின் நிரந்தர ஆளுநரா? இன்னமும் பொறுப்பு ஆளுநரா?

அரசியல் சட்டத்தின் பிரிவு 157 (3-ஏ) பிரிவின்படி இவரது நியமனம் தனி நியமனமாக செய்யப்பட்டுள்ளதா?

எனவே, எடுத்து வைக்கப்பட்ட வாதமும் தவறானது; காரணம் இவர் தமிழ்நாட்டிற்கு வந்ததே பொறுப்பு ஆளுநராகத்தான். பத்திரிகை வெளியீடுகளில் அப்படித்தானே போடப்பட்டது!

கூடுதல் பொறுப்பும், தனி நியமனமும் சட்டப்படி எப்படி ஒரே அதிகாரத்தன்மையதாகும்?

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது?

யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்யப் போகிறது மத்திய அரசு (அதுதானே பல மாநில ஆளுநர் நியமன நடவடிக்கை வழமை). அதைச் செய்வதற்குக்கூட என்ன தயக்கம்?

இதை வலியுறுத்தக்கூட முதுகெலும்பில்லாத மாநில அ.தி.மு.க. ஆட்சி - தமிழ்நாட்டில் என்றால், அதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

சென்னை  
19.4.2017 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner