எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலகவேண்டாமா?

ஊருக்குத்தான் உபதேசமா? பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி மத்திய அமைச்சராகத் தொடரலாமா? கல்யாண்சிங் ஆளுநராக நீடிக்கலாமா? அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் ஏன் கூறவில்லை? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு:

1992 இல் பாபர் மசூதி இடித்த வழக்கில் குற்றவாளிகளான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், செல்வி உமாபாரதி, வினய் கட்டியார், வி.எச்.டால்மியா, சாத்வி ரிதம்பரா முதலிய பலரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அக்கிரிமினல் வழக்கு லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு - இரண்டு ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 18.4.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே ஒரு ‘டெக்னிக்கல்’ குறைபாடு - என்ற சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் குறைபாட்டினைத் (2001 பிப்ரவரி 12) திருத்தி கூட்டு விசாரணையை நடத்தியிருக்கவேண்டும் அப்போதே; அதைச் செய்யவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள்

பெரும் பதவிகளில்...

25 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், ‘வெள்ளி விழா’ காணும் இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதான குற்றவாளிகளான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் மத்திய அமைச் சர்களாகவே இருந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர்,  துணைப் பிரதமர் பதவிகளில் அத்வானி இருந்துள்ளார். முரளிமனோகர் ஜோஷி மத்திய மனித வளத்துறை  அமைச்சராகவும், உமாபாரதி மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும்கூட இருந்துவிட்ட கூத்தும் நடந்திருக்கிறது. இப்பொழுதும் மத்திய அமைச்சராக இருக்கவும் செய்கிறார்.

இதில் மற்ற முக்கிய குற்றவாளிகளான விசுவ இந்துபரிஷத்  தலைவர் அசோக் சிங்கால், மகந்த் அவித்தியநாத், ராமச் சந்திரபரமான்ஸ்,கிரிராஜ்கிஷோர்போன்றவர்கள்இறந்து விட்ட காரணத்தினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக் கப்பட்டவர்களாகிறார்கள்!

பா.ஜ.க. பதவி விலகச் சொல்லாதது ஏன்?

மற்ற கட்சிகளை ஊழல்வாதிகள் என்று கூறி, பதவி விலகிடச் சொல்லும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., ஆளுநராக இருக்கும் கல்யாண் சிங், மத்திய நீர் வளத்துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி (இந்த அம்மையார், ‘ஆம்! நான்தான் இடித்தேன்’ என்று இப்போதும் உரக்கக் கூவுகிறார்!) இவர்களை பதவி விலகச் சொல்லவேண்டாமா?

இந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கினால் நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களில் இறந்தோர் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்கு என்பதை எவரே மறுத்திட முடியும்?

வெள்ளி விழா - பொன் விழா வழக்குகள்!

நம் நாட்டு சட்ட வழக்குகள் இப்படி வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா, முத்து விழா - நூற்றாண்டு விழா கொண்டாடும் அவல நிலைக்கு - நீதித்துறை ஒரு முற்றுப்புள்ளி வைக்க இனிமேலாவது முன்வரவேண்டாமா?

மற்ற பல நாடுகளில் வழக்குகளையும், மேல்முறையீடுகளையும் ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்கும்படி சட்டம், விதிமுறைகள் உள்ளனவே. அவைகளைப் பார்த்தாவது நாம் இந்த நத்தை வேக நீதி பரிபாலனத்தை மாற்றவேண்டாமா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா?

இந்த பாபர் மசூதி வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வு பெற்ற ஜஸ்டீஸ் லிபரான் தலைமையில் ஒரு கமிஷன் போடப்பட்டு, அதற்காக ரூ.30 கோடிக்குமேல் மக்கள் வரிப் பணம் தண்டச் செலவானதே தவிர, உருப்படியான பலன் உண்டா? (அந்தப் பட்டியலில் வாஜ்பேயி பெயரும்கூட உண்டு).

இப்போது இந்தக் கமிஷன் போட்டதே பலருக்கு மறந்துவிட்டதே - எவ்வளவு கொடுமை!
முதுமையைச் சுட்டிக்காட்டும் பரிதாபம்!

உச்சநீதிமன்றத்தில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் அவர்கள் தங்களது முதுமை காரணமாக 4 மாடிகள் ஏறி இறங்க முடியாது என்று ‘‘அய்யோ பரிதாபம்  ஆர்க்கியூமெண்டையும்‘’ செய்து பார்த்துள்ளனர், எடுபட வில்லை!

என்றாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கோஷ், ஜஸ்டீஸ் நாரிமன் - வழக்கினை இரண்டு ஆண்டுகளுக்குள் தொடர்ச்சியாக நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

மற்ற கட்சிகளுக்கு உபதேசம் செய்யும் பிரதமர், பா.ஜ.க. தலைவர்கள் கல்யாண்சிங்கையும், உமாபாரதியையும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்து பொது ஒழுக்கச் சிதைவுக்கு வழி ஏற்படாமல் தடுக்கவேண்டாமா?

நீதி மறுக்கப்படலாமா?

மனுதர்ம ஆட்சிதான் என்றால் இரட்டை அணுகுமுறை, இரட்டை அளவுகோல் எல்லாம் இருந்துதானே தீரும்!
நாடு கேட்கும் ஜனநாயகக் கேள்விகள் இவை.

பாபர் மசூதி இடிப்பு வீடியோ சாட்சியங்களோடு கடப்பாறை காட்சிகள் படங்களும் உள்ளனவே!
நீதி மறுக்கப்படலாமா? குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்ப விடலாமா?


சென்னை    தலைவர்
21.4.2017        திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner