எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகொல்கத்தா, ஏப்.21 காரக்பூர் அய்.அய்.டி.யில் போலி விஞ்ஞானமான (pseudo science) வாஸ்து ஜோதிடம் கற்பிக்கத் திட்டமாம்.

கட்டடக் கலை பயிலும் மாணவர்களுக்காக வாஸ்து சாஸ்திரப் பயிற்சியை அய்.அய்.டி காரக்பூர் இந்த ஆண்டிலிருந்து தொடங்க உள்ளது.  இந்தியாவின் ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்றவை மூடநம்பிக்கைகளின் உறைவிடம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் ஆய்வாளர்கள் அறிக்கை விட்ட போதிலும் கட்டடக்கலை பயிலும் மாணவர்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தை ஒரு பாடமாக வைக்க அய்.அய்.டி காரக்பூர் நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.

அய்.அய்.டி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கல்வியில் வாஸ்து சாஸ்திரம்  சேர்க்கப்பட்டுள்ளது இந்தியாவில் முதல் முறையாக கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் கல்வியில் வாஸ்து சாஸ்திரம்  சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்திய பாரம்பரிய கட்டட முறையான வாஸ்து முறைப்படி கட்டடம் கட்டுவது குறித்த படிப்பு சேர்க்கப்பட உள்ளது. இந்தப் படிப்பிற்குத் தேவைப்படும் பல்வேறு சிறந்த சாஸ்திர நூல்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் வீடியோ கேசட்டுகளும் சேகரித்து வைக்கப் பட்டிருக்கின்றன.

இந்த வாஸ்து சாஸ்திரம் எந்த ஒரு மதத்தையும் சார்ந்ததில்லை என்றாலும், பழங்கால இந்தியர்களின் கருத்துகள் விஞ்ஞான ரீதியில் கூறப்பட்டுள்ளதால், இதனை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, புதிய வியூகத்தை உண்டாக்கவிருக்கிறோம்.

இது குறித்து மாணவர்களுக்கு விளக்க கையடக்க செயல் விளக்க பொருட்கள் அய்.அய்.டி.யால் தயாரிக்கப்பட உள்ளன. மொபைல் வேன் மூலம் கண்காட்சியை உருவாக்கி பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் விரைவில் வரலாறு, வானிலை சாஸ்திரம்,மானிட வியல் சாஸ்திரம் போன்ற படிப்புகளையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

அய்.அய்.டியில் நடத்தப்படும் இந்த வாஸ்து சாஸ்திர படிப்பை கற்றுக் கொண்ட மாணவர்கள் இதில் பெறும் பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வுகள் நடத்தப்படும். மேலும், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க கருத்தரங்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்‘’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ்து ரிக் வேதத்தில் இருந்து துவங்குவதாகவும், வாஸ்து சாஸ்திரம் இயற்கை மற்றும் உள்கட்டமைப்புடன் ஆரோக்கியமான உறவை உண்டாக்கும் எனவும் அய்.அய்.டி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா என்றாலே - பார்ப்பன ஜனதா - பழைய பத்தாம் பசலித்தனத்திற்கு விஞ்ஞான முலாம் பூசும் மோசடி வேலையில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner