எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டில் நடப்பது ‘‘கார்ப்பரேட் - சாமியார் ராஜ்ஜியமா?’’ குடிஅரசா?

யமுனைக் கரையில் சுற்றுச்சூழலைப் பாழடித்த

சிறீ சிறீ ரவிசங்கர் அரசையே மிரட்டுகிற ஆணவம் பாரீர்!

ரூ.120 கோடி இழப்பை வசூல் செய்யவேண்டும்

நாடு தழுவிய பிரச்சாரப் பாய்ச்சல் நடந்தாகவேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலகவேண்டாமா? ஊருக்குத்தான் உபதேசமா? பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

யமுனை நதிக்கரையில் வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர்  நடத்திய நிகழ்ச்சியின் காரணமாக மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.120 கோடிக்குமேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகை அந்த கார்ப்பரேட் சாமியாரிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் - சாமியார்களின் சாம்ராஜ்ஜியமாகி விட்ட மோடி ஆட்சியை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றாக வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

டில்லியில் யமுனை நதிக்கரையில், வாழும் கலை அமைப்பினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று நாள்கள் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மிகப்பெரிய விழா ஒன்றை நடத்தினர். இந்த விழா நடத்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போதே யமுனை நதிக்கரைக்குக் கடுமையான மாசுகேட்டை உருவாக்கினர். இதனை கண்டித்தும் சிறீ சிறீ ரவிசங்கருக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்த அபராதத் தொகையை கொடுக்காமல் ‘‘நான் சிறை செல்வேன்’’ என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார். மத்திய அரசு ஆதரவு இருந்ததால், வெறும் 5 கோடி ரூபாய் மட்டும் கட்டிவிட்டு, நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். மத்திய அரசின் அரவணைப்போடு. இந்த நிகழ்ச்சியில் பிரமதர் மோடி கலந்துகொண்டார்.  வெளிநாட்டவர் உட்பட சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனராம்!

இந்த நிகழ்ச்சிக்கான ஆயத்தப் பணிகளில் இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டதும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. ஆனால், எது குறித்தும் கவலைப்படாமல் நிகழ்ச்சிகளை பிரதமர்  மோடி துணையுடன் ரவிசங்கர் என்ற பார்ப்பனர் நடத்தி முடித்தார். (இவர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சார்ந்தவர்).

நுண்ணுயிர்களை மடிய வைத்த

வேதிப் பொருள்கள்!

இவர்கள் யமுனை நதியில் இருந்து நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு நறுமணம் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வேதிப் பொருட்களை யமுனை நதியிலும், கரையிலும் லட்சக்கணக்கான லிட்டர் பேரல்களைத் தெளித்தனர். அப்போதே  அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதவை இவை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நுண்ணுயிர்கள் மடிந்துபோகும்; அப்படி மடிந்துபோனால் நதிக்கரையில் பசுமைச் சுழற்சி முற்றிலும் நின்றுபோகும் என்று புகார் கூறப்பட்டது. ஆனால், இது குறித்து  ரவிசங்கர் சற்றும் பொருட்படுத்தவில்லை.  அரசும் அலட்டிக் கொள்ளவில்லை.

பசுமைத் தீர்ப்பாயமும், இயற்கை ஆர்வலர்களும் மத்திய அரசின் மிரட்டலால் அடங்கிப் போனார்கள். நிகழ்ச்சி 3 நாள்கள் அவர்கள் நினைத்த திட்டப்படி நடந்து முடிந்தன.

இதுகுறித்துப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது.

யமுனைக் கரையில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விசாரணை நடத்த 4  பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, 47 பக்க விசாரணை அறிக்கை ஒன்றை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது, அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சிக்குரியவை.

ரூ.120 கோடி வரை இழப்பு

இந்த நிகழ்ச்சியால் கரைகள் முற்றிலும் சேதமடைந்ததுள்ளன. சேதமடைந்த கரையை மறுசீரமைக்க வாழும் கலை அமைப்பு ரூ.100-120 கோடி ரூபாய் வழங்க வேண்டும், இக்கரையில் பசுமைச் சுழற்சியை உருவாக்கும் நுண்ணுயிர்கள் விழாவின் போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிதைந்துவிட்டன. இனி இந்த நுண்ணுயிர்கள் இந்த பகுதியில் தோன்றாது, அப்படியே செயற்கையாக நுண்ணுயிரிகளை இங்கு கொண்டுவந்து வளர்த்தாலும் குறைந்த பட்சம் இந்த சூழலுக்கு அவைகள் வளர்ந்து பரவுவதற்கு 10 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் ஆகும். மேலும் நாணல்கள், அதைச் சார்ந்துள்ள சிறு உயிர்கள் போன்றவைகளும் முற்றிலும் அழிந்துள்ளன. இதனால், இந்தப் பகுதியில் உயிர்வாயுவான ஆக்ஸிஜன் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்த கரைப்பகுதி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒன்றாக மாறிவிட்டது.

சில இடங்களில் அவர்கள் தெளித்த ரசாயனங்களின் பாதிப்பு அகல 20 ஆண்டுகள் ஆகலாம். மேலும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கழிவுகளை அகற்றாமல் சென்றுவிட்டனர். இவைகள் அனைத்தும் கரையில் புதைந்துவிட்டன. இவற்றை அகற்றுவதற்கு 10 கோடி ரூபாய்வரை செலவாகும். அப்படியே அகற்றினாலும் மண்ணின் தன்மை பழையைபடி மாறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே! பல நூற்றாண்டுகளாக பசுமையான அழகான சுற்றுப்புறச்சூழல் கொண்ட யமுனைக் கரை மூன்று நாள் நிகழ்ச்சியில் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு விட்டது.

ரவி சங்கரின் ஆணவக் கொக்கரிப்பு

இது தொடர்பாக வாழும் கலை ரவிசங்கர் தெரிவித்துள்ளதாவது:

‘‘யமுனை நிகழ்ச்சிக்கு மத்திய அரசும், பசுமைத் தீர்ப் பாயமும்தான் அனுமதி அளித்தன. அதன்படியே நிகழ்ச்சி களும் நடந்தன. யமுனை நதிக்கரையில் ஏதாவது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு மத்திய அரசும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும்தான் பொறுப்பு. நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டியதுதானே?’’ என்று அடாவடித் தனமாக, திமிரடியாக, ‘பேட்டைத் தாதா’போல ஆணவம் கொப் பளிக்கப் பதில் அளித்துள்ளார். அவர் பேச்சு முகநூலிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி ஒலித்துக் கொண்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்!

இதுகுறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு கடுமையாக விமர்சித்துள்ளது.

‘‘ரவிசங்கரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது; கொஞ்சம்கூடப் பொறுப்பற்ற பேச்சு. இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறாரா?’’ என்று நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

யார் அதிகாரம் கொடுத்தது என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாய அமர்வு வினா எழுப்பியுள்ளது. இதற்குப் பெரிய ஆராய்ச்சி தேவையில்லை. பிரதமர் நரேந்திர மோடிதான் இதற்கு முழுப் பொறுப்பு.

சட்ட விரோதமான முறையில் யமுனைக் கரையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தார். இராணுவமே வெளிப்படையாக பாலம் அமைத்ததும் எல்லாம் பிரதமர் தயவு இல்லாமல், அதிகாரம் இல்லாமல் வேறு எப்படி நடந்திருக்க முடியும்? சாய்பாபா பாணியில் (?) கையசைப்பில் நடந்தது என்று சொல்லப் போகிறார்களா?

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நட்டத் தொகையை வசூலிக்கவேண்டும்!

ஏற்பட்டு இருக்கும் இழப்புக்கான பெருந்தொகையை ரவிசங்கரிடமிருந்து கண்டிப்பாக வசூலிக்க தீர்ப்பாயம் உத்தரவிடவேண்டும் - இது அவசியமாகும்.

அதேநேரத்தில், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

சாமியார்கள் கையில் நாடு

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு, நாடு சாமியார்கள் கையிலும், கார்ப்பரேட்டுகளின் கையிலும் சரணடைந்து விட்டது. அவர்கள் வைத்ததுதான் சட்டம்! உ.பி.யில் ஒரு சாமியாரே முதலமைச்சராகி நாட்டை ரணகளப்படுத்திக் கொண்டுள்ளார். ராம்தேவ் என்ற சாமியார் தனக்குள்ள யோகா கலைத் திறமையைக் கொண்டு மத்திய அரசையே தன் காவித் தூண்டில் முடிச்சுப் போட்டு விட்டாரே! அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றால், சாதாரணமா? இவ்வளவுக்கும் வருமான வரியைச் செலுத்தாத காரணத்தால், அவர்மீது பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவருக்காகவே அறக்கட்டளை சட்டமும் வளைக்கப்பட்டது!

அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஜக்கி வாசுதேவ் அழைப்பை ஏற்று

கோவை வந்த பிரதமர் மோடி

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மய்யத்தில் 112 அடி உயர சிவன் சிலையைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அந்த மய்யத்தின் சாமியார் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதில் மனைவியைக் கொன்றார் என்பதும் ஒன்றாகும்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் எந்தவித அனுமதியையும் பெறாமல் 44 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களைக் கட்டிய ஆசாமி அந்த ஜக்கி. அதனை இடிக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில்,  ஒரு பிரதமர் அந்த ஜக்கி சாமியாரின் அழைப்பினை ஏற்று ஒரு இந்து சாமியின் சிலையைத் திறக்க வந்தார் என்றால், நாட்டில் சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும் என்னதான் மரியாதை விஞ்சும்?

மானக்கேடு - தலைக்குனிவு!

இதைவிட மானக்கேடு, தலைக்குனிவு, சட்ட விரோத நீதிமன்ற அவமதிப்புக்கும் ஆளாக வேண்டிய - ஏற்கெனவே மனைவியைக் கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ள ஜக்கி வாசுதேவுக்கு குடியரசுத் தலைவர் பத்ம விபூஷன் பட்டம் அளித்தார் என்றால், இது வெட்கப்படவேண்டிய நிலையல்லவா!

எந்த ரகத்தில் - தரத்தில் மோடி ஆட்சி?

நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பி.ஜே.பி. ஆட்சி எந்தத் தரத்தில், ரகத்தில் உள்ளது என்பதற்கு இதற்குமேல் என்ன வேண்டும்?

நீதி, நிர்வாகம், சட்டம் எல்லாமே சீர்குலைந்து போன நிலைதான் இன்று.

நாடெங்கும் எதிர்ப்புப் பிரச்சார அலை!

சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் குறித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சார அலையை ஏற்படுத்திட ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது (27.3.2017).

விரைந்து செயல்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

 

கி.வீரமணி 
தலைவர்,     திராவிடர் கழகம்.

 

சென்னை
22.4.2017  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner