எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகப் புத்தக நாள் சிந்தனை (ஏப்.23): புத்தகம் இல்லா வீடு புழுக்கம் நிறைந்த இருட்டறை

தந்தை பெரியார்போல எண்ணற்ற நூல்களை

வெளியிட்ட தலைவர் உலகில் யார்? இயக்கம் எது?

உலகப் புத்தக நாளில் உலகத் தலைவர் தந்தை பெரியார்பற்றி தமிழர் தலைவர் அறிக்கை

உலகப்  புத்தக நாளாகிய இன்று (ஏப்.23) தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட நூல்கள், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய உணர்வுகளை பட்டியலிடுகிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

இன்று உலகப் புத்தக நாள்! (ஏப்ரல் 23).

உலகெங்கும் உள்ள மக்கள் தமது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பயன்படுத்தி, அறிவுக்கூர்மையை - நுண்ணறிவைப் பெற அறிவாயுதங்களாகப் பயன்படும் புத்தகங்களை மக்கள் படித்துப் பயன்பெற பரப்புரை செய்யும் நாள்!

தேனீக்கள், தேனைச் சேகரிக்கின்றன; கூடு கட்டு கின்றன; அத்தேனை எடுத்து, நுகர்வோருக்கு, குப்பிகளில் அடைத்துத் தருகின்றனர்!

நவில்தோறும் நூல் நயம்!

ருசியின் உச்சத்தை விளக்க ‘தேனென இனித்தது’; ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே’, ‘தேனிசையாக எம் செவிகளில் ஒலித்தன’ என்பது போன்ற சொலவ டைகளும் சொல்லோவியங்களாகி, சொக்க வைக்க சொற்கோவைகளும் தேன் தேன் என்று கூறுகையில், புத்தகங்களைப் படித்தேன் என்பது ‘படி-தேன்’ என்றும் கொண்டு மகிழ்ச்சியால் அந்த ‘நவில்தொறும் நூல் நயத்தை’ சுவைத்த சுவைஞர்களுக்கு சொல்லொணா இன்பத்தை அதுதானே கொணர்ந்து சேர்க்கும்!

 

புத்தகம் - ஓர் இனிய நண்பன்!

புத்தகத்தைப் போன்ற இனிய நண்பன், அறிவுரை கூறும் ஆசான், கடலில் தத்தளித்த கலமாகிய நிலையில், கலங்கரை வெளிச்சத்தினால்

கரை கண்ட மீட்புபோல, புத்தக வாசிப்பும், நேசிப்பும் மனிதர்களை உயர்த்துகின்றன!

தந்தை பெரியார் போன்ற புத்தக வாசிப்பாளரை 95 வயதிலும் - நுண்ணாடி (லென்ஸ்) வைத்துப் படித்துப் படித்து, தம் சுய சிந்தனைக்குப் பக்க பலமாக ‘இதோ இவை’ என்று நான் கூறியதை பிறரும் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் என்று எடுத்துக்காட்டும் சான்றாண்மையை மற்றவர்கள், அய்யாபற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அரிய தகவலாகும்!

அண்ணாவுக்கு நூல்களை வாங்க ஊக்குவித்த அய்யா

ஈரோட்டில் ‘குடிஅரசு’ ஏடு (1940-1941)களில், ‘‘விடுதலை’’ நாளேடு நடந்து கொண்டிருந்த கட்டத்தில், விடுதலையின் பொறுப்பாசிரியராக இருந்து எழுதிக் குவித்த அறிஞர் அண்ணா, மாலை நேரங்களில் நடைபயிற்சியையும் இணைத்து நண்பர்கள் ப.சண்முக வேலாயுதன், எஸ்.ஆர்.சந்தானம் ஆகியோருடன் ஈரோடு சந்திப்புப் புகைவண்டி நிலையம் சென்று, கலகலப்புடன் உரையாடி, தேநீர் குடித்துவிட்டு, அங்கேயிருந்த ‘ஹிக்கின் பாதம்ஸ்’ புத்தகக் கடையில் பல புதிய புத்தகங்களை புரட்டுவதுபோல, பாதி படித்தே முடித்து விடுவார்.

வாங்குவதற்குப் பொருளாதார ‘பட்ஜெட்’ இடம் தராத நிலை! அய்யா அவர்களிடம் அப்படிப்பட்ட அரிய நூல் களைப்பற்றிக் கூறினால், அது பெரிய விலையுள்ள புத்தகம் என்றாலும், அய்யா உடனே ‘தயங்காமல்’, இந்தாங்க இரண்டு புத்தகங்களாக வாங்கி ஒன்று இங்கு ‘குடிஅரசு’ அலுவலகத்தில் இருக்கட்டும்; இன்னொன்றை நீங்கள் படித்துவிட்டு, கட்டுரை எழுதுங்கள் - என்ற தாராளத் தன்மையுடன் கூறுவதை அண்ணாவும், அவரது நடைபயிற்சி - தேநீர் விருந்து கூட்டாளிகளும் கூறிட, பலமுறை கேட்டு வியந்ததுண்டு!

உலக அறிஞர்கள் நூல்களையெல்லாம்...

தமிழ்நாட்டில் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகம் இல்லாத காலகட்டத்தில் 1925-1935 - 1940 காலகட்டங்களில், பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ பதிப்பகத்தின் பற்பல அரிய நூல்களை - அய்யா எழுதிய கருத்தோவியங்களையும், அதேபோல், உலக அறிஞர்கள் பகுத்தறிவாளர்கள், வரலாற்றுப் பெரியார்களின் அறிவியல் சிந்தனையைப் பரப்பிடும் அரிய நூல்களையெல்லாம், 2 அணா, 4 அணா என்று வெகுமக்கள் மத்தியில் பரப்பிய அமைப்பு! அய்யாவின் ‘குடிஅரசு பதிப்பகம்‘, ‘பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்‘, ‘உண்மை விளக்க அச்சகத்தின்’ சார்பில் அச்சிட்டு பரப்பினார்!

தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் சிறையில் எழுதிய ‘‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’’ என்ற அரிய ஆங்கில நூலை, அன்று அய்யாவின் அருஞ்சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்த தோழர் ‘ஜீவா’ என்று இன்று பலரும் பெருமையுடன் அழைக்கும் தோழர் ப.ஜீவானந்தம் மொழி பெயர்த்தார். அது தடை செய்யப்பட்டு, அப்புத்த கத்தின்மீதும், வெளியிட்டோர்மீதும் குற்றவியல் வழக்கு போடப்பட்ட வரலாறு இன்று எத்துணை இளைஞர்கட்குத் தெரியும்?

தந்தை பெரியார் அவர்கள் இளைஞர்களை புத்தகத் தைச் சுவாசிக்க இப்படிப்பட்ட நூற்களை துணிச்சலுடன் வெளியிட்டு பரப்பிய, வெஞ்சிறை தண்டம் (அபராதம்) கட்டும் அளவுக்கு புரட்சிகரமான பொழில்களாக அவை அமைந்தன!

டாக்டர் அம்பேத்கரின் ‘‘ஜாதியை ஒழிக்க வழி’’ எனும் நூல்!

டாக்டர் அம்பேத்கரின் ‘‘ஜாதியை ஒழிக்க வழி’’ என்ற ஆங்கில உரை - நிகழ்த்தப்படாத உரையை மொழியாக்கம் செய்து தமிழ் மக்களிடையே பரப்பியவர் தந்தை பெரியார் (1936).

எல்லாம் மலிவு விலையில்; ஆம்! காரணம், தந்தை பெரியாரே - புரட்சிக்கவிஞர் பாடியதுபோல், ‘‘மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்புதானே!’’

பொதுவுடைமைபற்றிய நூல்கள்

பொதுவுடைமைச் சிற்பி ம.சிங்காரவேலரின் அரிய அறிவியல் சிந்தனைக் கட்டுரைகளையும், புதிய சமுதாயத் தினை உருவாக்கிட செயலிகளான புத்தகங்களை தந்தை பெரியார் வெளியிட்டுப் பரப்பி மகிழ்ந்தாரே! அதைவிட அறிவுலகம் - புது உலகம் காண வேறு என்ன தொண்டு தேவை?

மேலை நாட்டு அறிஞர்கள் நூல்களையெல்லாம் 1930 - 1940 ஆம் ஆண்டுகளில், தந்தை பெரியார் ஆங்கில நூல்களை தமிழில் வெளியிட்டு செய்த தொண்டு என்ன எளிதானதா?

இலண்டன் ஆர்.பி.ஏ.  நூல்களையெல்லாம் மொழியாக் கம் செய்து வெளியிட்டார். ருசியா செல்லுவதற்கு முன்பாகவே மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையை மொழி பெயர்த்து ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார் (4.10.1931). இந்தியாவில், முதலில் வெளிவந்தது. இதுதான் - ருஷியாவின் அய்ந்தாண்டுத் திட்டத்தை வெளியிட்டார், லெனினும் - மதமும் எனும் நூலையும் அச்சிட்டார்.

அமெரிக்கச் சிந்தனையாளர் ராபர்ட் ஜி.இங்கர்சாலின் எழுத்தோவியங்கள், பெர்ட்ரண்ட் ரசல் போன்ற உயர் சிந்தனையாளர்களின் நூல்கள், குடும்பக் கட்டுப்பாட்டு முறை முன்னோடி இங்கிலாந்து நாட்டுப் பெண்மணி டாக்டர் மேரிஸ்டோப்ஸ் - ‘கர்ப்ப ஆட்சி’ என்ற தலைப்பில் - இப்படி எத்தனை எத்தனையோ வெளியீடுகள். சாமி கைவல்யம் (கலைக்கியானம்) அவர்களின் கட்டுரைகளும், சந்திரசேகரப் பாவலரின் (இ.மு.சுப்பிரமணியனார்) இராமாயணம் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை! கூட்டங்களில் உரையாற்றத் தொடங்குமுன் இயக்கம் வெளியிட்ட ஒவ்வொரு நூலைப் பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறுவதை வழமையாகக் கொண்டவர் தந்தை பெரியார்.

இன்றுள்ள இளைஞர் உலகம் அறிய வேண்டிய அறிந்திரா அரிய செய்திகள் இவை.

புத்தகம் இல்லா வீடு?

சுமார் 200-க்கும் மேற்பட்ட நூல்களை, உலகப் பகுத்தறிவாளர்களின் சிந்தனைக் கருவூலங்களை யெல்லாம் தமிழுக்குத் தந்தார் - இதைவிட பெரிய அளவில் நூல் பரப்பிய தமிழ்த் தொண்டு வேறு ஏது?

ஆனால், அவைபற்றி ஒரு பிஎச்.டி. அல்ல; பல பிஎச்.டிக்களை, ஆய்வுகளை செய்யலாமே!

இன்றும், நாளையும் என்றும் தந்தை பெரியார் பரப்பிய புத்தகம் பரப்பும் பணி தொடர்கிறது - தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

புத்தக நூலகம் இல்லா வீடு

புழுக்கம் நிறைந்த இருட்டறை!

எனவே, புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்!

 

 

கி.வீரமணி     
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
23.4.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner