எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  ஆனால், பழைய ராமாயணம் இனி வராது!

இது கூட்டணியாக மாறினால் என்ன தவறு?

ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஏப்.23- இங்கே  சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது என்றும், இது அரசியல் கூட்டணிக்கான ஒன்றா என்று கேட்கிறார்கள் - ஏன் கூட்டணியாக மாறினால் அது என்ன பஞ்ச மாபாதகமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி, ஏப்ரல் 25 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள முழு அடைப்பை விளக்கி அனைத்துக் கட்சிகள் சார்பில் நேற்று (22.4.2017) மாலை, சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற விவசாயிகளின் துயர் துடைக்க - மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய தென்சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அருமைத் தோழர் ஜெ.அன்பழகன் அவர்களே,

மானம் காக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு!

இந்நிகழ்ச்சியில் இத்தனை மக்களுடைய உணர்வுகளையும் சரியான தருணத்தில், ஒன்றாக அத்துணை அமைப்புகளையும் அழைத்து, ஆளும் கட்சி செய்யத் தவறிய பணியை, ஜனநாயகத்தில் அடுத்தபடியாக செய்யக்கூடிய கடமையும், பொறுப்பும் அரசியல் சட்ட ரீதியாக எதிர்க்கட்சித் தலைவருக்குத்தான் உண்டு என்ற பெருமையை, தான் இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக மட்டும் இல்லை - ஆளும் பொறுப்பையும் நாங்கள் ஏற்று இருக்கிறோம் என்கிற அந்த உணர்வுக்கு முன்னோட்டமான பணி இந்தப் பணி. பதவிக்காக அல்ல - மக்களின் உணர்வுக்காக. மானம் பார்த்த பூமி என்று விவசாயிகள் ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால், தமிழகத்தில் இப்பொழுது, மானம் காக்கவேண்டிய கடமை நமக்கு  இங்கே குழுமியிருக்கக்கூடிய அத்துணை பேருக்கும் உண்டு.

தமிழகத்தைக் காப்பாற்றவேண்டிய

கடமை இருக்கிறது

எனக்கு முன் உரையாற்றிய அருமை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசிய அத்துணை கருத்துகளையும் அப்படியே நான் வழிமொழிகிறேன். இங்கே உள்ள அத்துணைத் தலைவர்களும் உருவத்தால் மாறுபட்டவர்கள் - வண்ணத்தால் மாறுபட்டவர்கள் - எண்ணத்தால் மாறுபட்டவர்கள் அல்ல - தமிழகம் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது  25 ஆம் தேதி நடைபெறக்கூடிய போராட்டத்திற்கான விளக்கக் கூட்டம் மட்டுமல்ல - அடுத்து தமிழகத்தைக் காப்பாற்றவேண்டிய கடமை இருக்கிறது என்கிற எச்சரிக்கையைத் தரவேண்டியவர்கள் - புரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அறிவிக்கவேண்டிய மிக முக்கியமான தருணம்.

நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் தளபதி

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆளும் கட்சி  செய்யத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர்தான் அந்தப் பொறுப்பை ஏற்று செய்வார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய நம்பிக்கையை நாங்கள் நிரந்தரப்படுத்துவோம் - நியாயப்படுத்துவோம் என்று காட்டக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய செயல்தலைவர் - செயல்படக் கூடிய தலைவர் - செயலை நிறைவேற்றி வெற்றிகரமாக நடப்பேன் என்கிற அளவிற்கு நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

டில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது

இந்த மேடையில் இருக்கக்கூடிய அத்துணைக் கட்சி தோழமைத் தலைவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற திராவிடப் பெருங்குடி மக்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான கடமை இங்கே ஒரு ஆட்சி இருக்கிறதா என்று தெரியாது! அதேநேரத்தில் இந்த ஆட்சியை ஏதோ ‘‘ராமா, ராமா ஆடு’’ என்று சொல்லுவதைப்போல, டில்லி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

நாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல

எந்த உரிமை பறி போனாலும் அவர்களுக்குத் தெரியவில்லை. முதலில் அவர்களுக்குள் இருக்கின்ற போட்டி நாற்காலியைப் பிடிக்கவேண்டும் என்பதுதான். இது வெறும் நாற்காலிக்காகப் போடப்பட்ட பொதுக்கூட்டம் அல்ல - தமிழர்களுடைய மானத்தை, உரிமையை, தமிழ்நாட்டினுடைய வளமையை நிலை நிறுத்தி மீட்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இன்றைக்கு எல்லாவற்றிலும் டில்லி வெளிப்படையாகவே இறங்கியிருக்கிறது. காவிரி பிரச்சினையா? நாங்கள் அலட்சியப்படுத்துவோம் - உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று சொன்னால், குறுக்குசால் ஒட்டுவதைப்போல, அதை அப்படியே தட்டிவிட்டு, வேறொரு ஆணையத்தை நாங்கள் உருவாக்குவோம் - இன்னொரு சட்டத்தின் மூலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் - தமிழகத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.

இது தேர்தலுக்கான  அச்சாரக் கூட்டணியா?

தமிழனின் மானத்தை அவர்கள் அறைகூவல் விட்டுப் பார்க்கிறார்கள். எனவே, அந்த சவாலை  தமிழகம் ஏற்கும்; அதனை ஏற்று சிறப்பாக செயல்படுவோம் என்று காட்டுவதற்குத்தான், இங்கே அத்துணைத் தலைவர்களும் வந்திருக்கிறார்கள். சில ஊடக நண்பர்கள் - தளபதி அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவுடன், அவர்களுக்கே உரிய அந்த விஷம பாணியில், இது என்ன தேர்தலுக்கான அச்சாரக் கூட்டணியா? என்று.

தேர்தல் கூட்டணியானா என்ன, பஞ்ச மாபாதகமா? அது என்ன பெரிய தவறா?

நான் அவர்களைத் திருப்பிக் கேட்கிறேன், பெரியார் தொண்டன், எதையும் மறைக்கத் தெரியாது. ஒப்பனைகள் இல்லாமல் பேசக்கூடியவர்கள் நாங்கள் - எனவே, அந்த வகையில் கேட்கிறேன் அப்படிப்பட்ட ஊடகக்கார்களைப் பார்த்து, இங்கே கூடியிருக்கிறவர்கள் ஒன்றாகி விட்டார்கள் என்று ஆதங்கத்தோடு எழுதுகிறார்களே, அவர்களைப் பார்த்து கேட்கிறேன், இதுவே தேர்தல் கூட்டணியானால் என்ன, பஞ்ச மாபாதகமா? அது என்ன பெரிய தவறா? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். மக்களுக்காகத்தானே ஜனநாயகம்.

இதுவரையில் நம்மை எது பிரிக்கிறது என்பது முக்கியமல்ல - தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், எது நம்மை இணைக்கிறது என்று பாருங்கள். எது நம்மை இணைக்கிறதோ, அதனை அகலப்படுத்துங்கள்; எது நம்மை பிரிக்கிறதோ, அதனை அலட்சியப்படுத்துங்கள் என்கிற உணர்வோடுதான், இங்கே இருக்கின்ற அத்துணை நண்பர்களும் இங்கே வந்திருக்கிறார்கள்.

21 ஆண்டுகள் போராடி பெற்றி உரிமை!

ஆகவே, தெளிவாகச் சொல்கிறோம், விவசாயிகளுடைய பிரச்சினைகள் மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமைகள், சமூகநீதி, நீட் என்கிற நுழைவுத் தேர்வினை எதிர்த்து - திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் - எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வினை கொண்டு வந்தபோது, 21 ஆண்டுகள் போராடி - பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அதற்குரிய சரியான சட்டம் அமைக்கப்பட்டு, நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு - கிராமத்துப் பிள்ளைகள் இன்றைக்கு படிக்கக்கூடிய வாய்ப்பு பெற்றார்கள்.

நீதிக்கட்சி வருவதற்கு முன்னால், மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மனு போட முடியும் என்கிற வரலாறு இன்றைய மருத்துவர்களில் பல பேருக்குத் தெரியாது. அந்தப் பழைய வரலாற்றை, பழைய மனுதர்மத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு டில்லி முயற்சிக்கிறது. அதற்கு இங்கே சில  தந்திரங்களைக் கையாளுகிறது - வருமான வரித்துறையைப் பயன்படுத்துகிறது - அவரவர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம்

ஆனால், நெருக்கடி காலத்திலேயே அதனை எதிர்த்து நின்ற மாபெரும் அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

கலைஞர் அவர்கள் தீர்மானம் போட்டார் - கலைஞர் அவர்களுக்கு டில்லியிலிருந்து நெருக்கடி கொடுத்தார்கள் - அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை. அப்படிப்பட்ட பழைய வரலாறு உள்ள மாநிலம் தமிழ்நாடு. எனவே, டில்லிக்கு சொல்லிக் கொள்கிறோம்,  நீங்கள் சொந்தக் காலை ஊன்ற முடியாதவர்கள் - மிஸ்டு காலிலேயே கட்சியை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கின்றவர்கள். இங்கே கூடியிருப்பவர்கள் சொந்தக் கால்கள் மட்டுமல்ல, அந்தக் கால்களை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரலாறு படைத்திருக்கின்ற ஓர் இயக்கம் இந்த கூட்டியக்கம். எனவே, இந்த இயக்கத்தை சீண்டிப் பார்க்காதீர்கள்.

இந்த உணர்வு படைத்தவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் - மாநில உரிமைகளைப் பறிக்கிறீர்கள் - விவசாயிகளை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் -அதுபோலவே, மருத்துவர்களைப் படிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் - கல்வி வாசலை மூடுகிறீர்கள்.

இது முடிவல்ல - இதுதான் தொடக்கம்

எங்களுக்கு அரசியல் சட்ட ரீதியாக இருக்கின்ற உரிமைகளைக் கேட்கின்றோம். அந்த அரசியல் சட்டத்தில் இருக்கின்ற உரிமைப்படி, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து - எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புதல் கொடுத்தால், அதனை வலியுறுத்தக் கூடிய தெம்பும், திராணியும் ஒரு அரசுக்கு இருக்கிறதா? காரணம், அவர்கள் நடுங்கிப் போயிருக்கிறார்கள். எனவே, அந்தப் பணியை செய்வதற்கு இந்தக் கூட்டுத் தலைமைதான், கூட்டியக்கம்தான் சிறப்பான முறையில் இது ஒரு நல்ல தொடக்கம். காலத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்கம். எனவே, இது முடிவல்ல - இதுதான் தொடக்கம். வேடிக்கையல்ல - கேளிக்கையல்ல.

ஃபேஸ்புக் இளைஞர்களே, டுவிட்டர் இளைஞர்களே, வாட்ஸ்அப்பிலேயே தங்களுடைய காலத்தைக் கழித்து வேடிக்கைப் பார்க்கக்கூடிய இளைஞர்களே, நீங்கள், உங்களை மறந்தீர்களேயானால், உங்கள் முதுகைப் பாதுகாப்பதற்கு திராவிட இயக்கத்தைத் தவிர, இந்த இயக்கத்தைத் தவிர, இந்த அணியை தவிர வேறு கிடையாது என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

இது மனித தர்மத்திற்கானப் போராட்டம் - மனுதர்மத்தினை வீழ்த்துகின்ற போராட்டம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், காவிகளோ அல்லது காலித்தனம் செய்தோ அரசைப் பிடிப்போம்  என்று நினைக்க முடியாது.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லக்கூடிய அந்த மறைந்த நிலையை உருவாக்குவோம் -

25 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற முழு அடைப்புப் போராட்டம் இருக்கிறதே, அது தடுப்புப் போராட்டம் - ஒரு எச்சரிக்கை - ஒரு முன்னோட்டம் - அதுமட்டுமல்ல, அந்தப் போராட்டத்திற்குப் பிறகு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக் கூடியவர்!

நண்பர்களே, இந்த இயக்கம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியாரால், அறிஞர் அண்ணாவால், கலைஞரால் - இப்படி வாடிக்கையாகக் கொண்டு, இன்றைக்கு அந்தத் தலைவர்களின் பங்கையும் இந்த அணி எடுத்துக் கொண்டிருக்கிறது - இந்த அணிக்குத் தளபதி சரியானவர் - பொருத்தமானவர் - செயல்படக்கூடியவர் - தலைமை தாங்குகிறார். எனவே, தமிழகம் திரளட்டும். நமக்குள் என்ன வேறுபாடு என்று நினைக்காதீர்கள் - நமக்குள் எதை எதிர்க்கவேண்டும் என்று நினைக்கவேண்டும். ஆபத்து நெருங்கி விட்டது - போர்க்களத்தில் இருந்து குரல் கொடுக்கவேண்டிய நேரமிது - கேளிக்கைக்கு அல்ல.

டில்லியினுடைய சதித்திட்டத்தை முறியடிப்போம்!

ஆகவேதான், முழுக்க முழுக்க டில்லியினுடைய சதித்திட்டத்தை முறியடிப்போம், முறியடிப்போம், முறியடிப்போம் என்கிற உணர்வோடு திரளுங்கள் என்று கேட்டு,

25 ஆம் தேதிமட்டுமல்ல, அதற்குப் பிறகு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அத்தனை உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.

எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது

எனவே, இந்த அணி தமிழ்நாட்டில் உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய உரிமைப் பாதுகாப்புப் பேரணியாகும் - எனவே, இந்த அணியினுடைய ஒற்றுமைதான் - எதிரிகளுக்குப் பாடமாகத் திகழவேண்டும். நேரிடையாக வந்தாலும் சரி, கொல்லைப்புற வழியாக வந்தாலும் இந்த மண்ணை எந்தக் கொம்பனும் காவி மயமாக்கிவிட முடியாது என்று எச்சரிக்கின்றோம். 50 ஆண்டுகள் அல்ல - பல நூறாண்டுகள் தலைகீழாக நின்றாலும்கூட தமிழகத்தை உங்களால் தொட்டுப் பார்க்க முடியாது- விஷமம் செய்து பார்க்கலாம் - தடுத்துப் பார்க்கலாம் - ஒரு  அய்யாக்கண்ணு அல்ல - நம்மில் ஆயிரம் அய்யாக்கண்ணுகளாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எரிமலை எப்பொழுது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள் - புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.

இந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம்

எனவே, இந்தக் கூட்டம் விளக்கக் கூட்டமல்ல - எச்சரிக்கைக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு முன்னோட்டக் கூட்டம் - இந்தக் கூட்டம் ஒரு ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டம் - இந்தக் கூட்டத்திற்கு - ஒத்தக் கருத்துள்ளவர்கள் இன்னும் ஏராளம் வரவிருக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம் என்று சொல்லி, பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கின்ற காரணத்தால், என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.

வெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல!

திராவிடர் இயக்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் அடிபட்டுப் போகாது - இது ஆயிரங்காலத்துப் பயிர் - இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது - அந்த வேரையே கண்டுபிடிக்க முடியாத நீங்கள் - இங்கே  சதித்திட்டம் போட்டால், சில விபீஷணர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் -  சில அனுமார்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் - ஆனால், பழைய ராமாயணம் இனி வராது. வெற்றி பெறுவது இராவணன்தான் - ராமனல்ல, ராமனல்ல, ராமனல்ல என்று கூறி முடிக்கிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க தமிழின உணர்வு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner