எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க

முக்கிய கட்சிகள் ஒன்றுபடுகையில், சிலர் குறுக்குசால் ஓட்டுவதா?

தமிழக விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசுக்குப்

பொறுப்பில்லை என்று  பொறுப்பற்று கருத்து கூறுவது தேவையா?

மத்திய -மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க நாளை முழு அடைப்பை வெற்றிபெறச் செய்வீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

வெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலகவேண்டாமா? ஊருக்குத்தான் உபதேசமா? பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

பல் வகையிலும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நாளை நாடு தழுவிய அளவில் நடத்தப்படவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு, கட்சிகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

நாளை - ஏப்ரல் 25 - வஞ்சிக்கப்படும் விவசாயிகள் பிரச்சினை தொடங்கி, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விதி விலக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு ஒப்புதல் தராத அரசியல் சட்ட விரோத மாநில உரிமை பறிப்பு, காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே புறந்தள்ளிவிட்டு, நதிநீர்ப் பங்கீட்டுக்கான ஒற்றை விசாரணை ஆணைச் சட்டம் என்ற குறுக்குசால், அரசியல் சட்டத்தில் நேரு அளித்த வாக்குறுதியை - இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு, கட்டாய இந்தித் திணிப்பு (வானொலியில் தமிழ் மாநிலச் செய்திகளில்கூட இந்தியைத் திட்டமிட்டே திணிக்கும் ஊடுருவல் வித்தைகள் - நடக்கின்றன). சமஸ்கிருதத் திணிப்பு, விவசாயிகளின் வறட்சி நிவ ரணத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கேட்டால், வெறும் 2000 கோடி ரூபாய் தருதல், வர்தா புயல் பாதிப்புக்கு வெறும் 200 கோடி ரூபாய் பிச்சை போடும் நிலை, பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டு இட ஒதுக்கீடுபற்றி சட்டம் - ஆணை பிறப்பித்தால் அதனை மத்திய அரசுக்கே (குடியரசுத் தலைவருக்கே) அதிகாரம் இருக்கும் வண்ணம் ஒரு குயுக்தியான மாநில உரிமைகளை சமூகநீதித் துறையில் பறிப்பதுபோன்ற அதிகார ஆணவம்; 41 நாள்கள் அறப்போர் நடத்திய தமிழக விவசாயிகளைச் சந்தித்து ஆறுதலோ, தற்கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்தோ சில வார்த்தைகளைக் கூறக் கூட மனமில்லாத ஒரு பிரதமர்; கார்ப்பரேட் சாமியார்களின் கபட நாடகங்களைக் கண்டு களிக்க, ஊக்கப்படுத்தச் செல்லுகிற அக்கிரமமான போக்கு!

களத்தில் அணிவகுக்கின்றன

இப்படி வஞ்சிக்கப்படும் தமிழர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க கிளர்ந்தெழுந்து, ஒத்தக் கருத்துடையோர் ஓரணியில், அரசியலுக்கு அப்பாற்பட்டு - தேர்தல் அணிகள்பற்றிக் கவலைப்படாமல் - பற்றி எரியும் தீயை அணைக்கப் பதறி ஓடி, மணலும், தண்ணீரும் தூக்கிச் செல்லும் தொண்டறப் பணிபோல நாளை பல முக்கிய கட்சிகள், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்த முயற்சியின் முத்தாய்ப்பாக முன்னின்று களத்துக்கு வந்துள்ளனர்!

மாறாத சில கட்சிகள்!

தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. ஆட்சி - மக்கள் பிரச்சினைகளைப்பற்றிக் கவலைப்படாமல், பட்ஜெட் கூட்டத்தினைக்கூட 3, 4 நாள்களில் முடித்துவிட்டு, மானியக் கோரிக்கை விவாதமேகூட உண்டோ - இல்லையோ என்று அனைத்துக் கட்சியினரும் அய்யப்படும் காலகட்டம் இது!

அனைத்துக் கட்சி - அமைப்புகள் கூட்டத்தினை தமிழக அரசு கூட்டியிருக்கவேண்டாமா? பக்கத்து மாநில அரசுகள் எத்தனை முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, பிரதமரைச் சந்தித்து, தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் காட்சிகளைக் கண்ட பிறகும்கூட, வீண் வறட்டுப் பிடிவாதத்துடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன்? ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜனநாயகக் கடமையை ஆற்றிட முன்வந்து செய்துள்ளார். இதில் அனைத்துக் கட்சிகளும்  அவருக்கு ஒத்துழைப்புத் தரவேண்டாமா?

சிலர் விதண்டாவாத அறிக்கைகளை விடுத்து, தங்களின் அடையாளம் மாறவில்லை; எப்போதும் மாறாது என்று காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்குப் பறைசாற்றிப் பழியேற்கும் போக்கு சிறிதும் விரும்பத்தக்கதல்ல!

மத்திய அரசுக்குப்

பொறுப்பில்லையா?

பா.ஜ.க. என்ற மத்திய அரசின் பொறுப்புள்ள அமைச்சர், தமிழ்நாட்டு அரசியலுக்கு ‘வரைபடம்‘ வரைந்து வல்லாண்மை பெறத் துடிக்கும் ஒருவர், நேற்று (ஏப்.23) திருவாய் மலர்ந்துள்ளார்.

‘‘விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்கவேண் டியது மாநில அரசின் வேலை - கடமை’’ என்று மத்திய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்.

சில மேதாவிகள் மத்திய அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறுகின்றனர்!

1. நதிநீர் இணைப்புகள்மூலம் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கேட்கிறார்; போராடுகிறார் - இதை மாநில அரசு செய்ய முடியுமா?

2. காவிரி நதிநீர் ஆணையத்தை - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமல்படுத்த முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசா? மாநில அரசா?

3. விவசாயிகள் வாங்கிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மாநில அரசால் செய்ய முடியுமா? மத்திய நிதியமைச்சகத்துக்குத்தான்  பொறுப்பும், அதிகாரம் உண்டு என்பது மறுக்க முடியாதது அல்லவா? முன்பு மத்திய அரசு செய்யவில்லையா?

இப்படிப் பலப் பல! தமிழக மக்களை முட்டாள்கள் என்றும், எதிர்க்கத் தெரியாத ஏமாளிகள் என்றும் நினைத்து எகத்தாளம் போடுவோருக்கு எச்சரிக்கை மணியடிப்பதுதான் நாளை நடைபெறவிருக்கும் முழு அடைப்பு!

இதற்கு ஒத்துழைப்பு தர மனமில்லாதவர்களை - தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தாய்மார்கள், வணிகர்கள் புரிந்துகொள்ளுவர். தக்க தேர்தல் பாடம் கற்பிப்பர்.

எதிலும் ‘அரசியல் பார்வை’தானா? வாக்கு வங்கி அரசியல் கண்ணோட்டம்தானா? வீராப்பு வீரர்களே, ஒத்துழைக்க முடியாவிட்டால், ஒதுங்கி நிற்கவாவது பழகுங்கள்!

இன்றேல், தமிழ்நாடும், வரலாறும் உங்களை ஒதுக்கி வைத்து குப்பை போல் மூலையில் தள்ளிவிடுவார்கள்!

மற்ற மாநிலங்களில் எதிரும் புதிருமான கட்சிகள்கூட மாநில உரிமைப் பிரச்சினை என்று வரும்பொழுது, ஒருவருக்கொருவர் இணைந்து அவர்களுக்கான பொது எதிரி என்று கருதுவோரை  எதிர்த்துப் போர்க்குரல் தருவதைக் கண்ட பிறகும்கூட உங்களுக்குப் பாடம் கற்றுக் கொள்ளும் பயனறிவு ஏற்படாது தமிழ்நாட்டில் தனித்தனித்தான் என்று காட்டிக் கொள்ளலாமா?

‘‘தமிழன் என்றொரு இனம் உண்டு!

தனியே அவர்க்கொரு குணம் உண்டு’’ என்பதற்கு இப்படி புதுப் பொருள் காண்பது வேதனைக்குரியது!

குறுக்குசால் ஓட்டுவோரைப் புறந்தள்ளி, பொறுப்பற்ற மத்திய அரசின் பொறுப்பற்ற போக்குகள்  - தமிழக அரசின் செயலற்ற நிலை - இவற்றை முன்னிறுத்தி அவர்களைச் செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்கும் அறப்போராட்டமாம் - முழு அடைப்பினை வெற்றி பெறச் செய்வீர்! வெற்றி பெறச் செய்வீர்!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை  
24.4.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner