எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது!

எதிர்ப்பு கண்டு புற்றுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது இந்தித் திணிப்புப் பாம்பு!

எப்போதும் விழிப்புடன் இருத்தல் அவசியம்! தமிழர் தலைவர்

ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலகவேண்டாமா? ஊருக்குத்தான் உபதேசமா? பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

இன்று மத்திய அரசு தரப்பில் ஒரு விளக்கம் - இது வெறும் பரிந்துரைதானே ஒழிய, கட்டாயமானது அல்ல என்று கூறி, எதிர்ப்பு கண்டு புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது இந்தித் திணிப்பு பாம்பு! எப்போதும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

1. இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஆட்சி மொழியாக இந்தி - அதுவும் ‘தேவ்நகரி’ என்ற ‘தேவ பாஷையான’ சமஸ்கிருத எழுத்துகளைக் கொண்ட இந்தி தொடரும் என்ற விதியைப் புகுத்தியதுகூட மிகப்பெரும்பான்மை பலத்தினால் அல்ல.

Thoughts on Linguistic States

2. இந்த உண்மையை அம்பலப்படுத்தினார் அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் - பின்னாளில் மொழி வழி மாநிலங்கள் அமைந்தபோது, தனது சிந்தனைகளைத் தொகுத்து எழுதிய ஒரு நூலில்! (‘‘Thoughts on Linguistic States’’)

3. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்திபற்றிய ஒரு விதியினை இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்துவதுபற்றிய விவாதம் ஏற்பட்டு ஓட்டுக்கு விடப்பட்டது; அதன் முடிவு இரு பகுதியினருக்கு 78 - 78 என்ற சம அளவில் அதாவது இந்திதான் ஆட்சி மொழி (‘தேசிய மொழி’ என்ற சொற்றொடரை அம்பேத்கர் பயன்படுத்தியுள்ளார்!) பிறகு தலைவரின் ஓட்டுCasting Vote) போடப்பட்டு, அவ்விதி புகுத்தப்படுவது ஏற்கப்பட்டது!

4. அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் (8th Schedule) தொடக்கத்தில் 14 மொழிகள், பிறகு தற்போது - பல சட்ட திருத்தங்களுக்குப் பின் - 22 மொழிகள் - அதன் தலைப்பில் ‘தேசிய’   (National)  என்ற சொற்றொடர் இணைக்கப்படாமல் வெறும் ‘மொழிகள்’ என்றே குறிக்கப்பட்டுள்ளது!

ஆட்சி மாறினாலும் -

காட்சிகள் மட்டும் மாறவில்லை

முன்பிருந்த தேசியக் கட்சிகளின் ஆளுமையில் இந்தித் திணிப்புக்கும், செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கும் தனிச் சலுகை - முன்னுரிமை - நிதி ஒதுக்கீடு உள்படச் செய்து, விரைந்த முயற்சிகளை இந்தி வெறியர்கள் திட்டமிட்டே செய்கின்றனர்! ஆட்சிகள் மத்தியில் மாறினாலும், இந்தக் காட்சி மட்டும் மாறுவதாகத் தெரியவில்லை.

5. இந்தியைத் தமிழ்நாடு மட்டும் எதிர்க்கவில்லை; பஞ்சாப் எதிர்க்கிறது; மேற்கு வங்காளம் தமிழ்நாட்டைப் போலவே எதிர்த்து வருகிறது. கிழக்கே உள்ள மாநிலங்களில் பல, ஆங்கிலத்தையே ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளன - இந்தியை ஏற்காமல்!

இந்நிலையில், மத்தியில் ஏற்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடக்கும் அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. ஆட்சியான மோடி ஆட்சியில், சமஸ்கிருதம் - இந்தி வெளிப்படையாகவே வலிந்து நுழைக்கப்படுகிறது!

புகழுரை கூறியே, புறந்தள்ளும்

இரட்டை அணுகுமுறை

மற்ற தமிழ் போன்ற செம்மொழிகளைப் புகழுரை கூறியே, புறந்தள்ளும் இரட்டை அணுகுமுறை வேகமாக மத்திய ஆட்சி - பிரதமர் மோடி - ஆர்.எஸ்.எஸ். போன்றவைகளால் செய்து வரப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் போன்ற பெரும் பதவியில் இருப்போர் இந்தியில் மட்டும்தான் பேசவேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டு, ஆணைபோல் அறிவிக்கப்பட்டது சில நாள்களுக்கு முன்பு. இதற்கு தென்னாட்டிலிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; அதற்கு சில நாள் முன் தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் தமிழ் அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் இந்தி எழுதப்பட்டது - அதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது! (இதன்மூலம் இந்தி தெரிந்தவர்தான் குடியரசுத் தலைவராகவே வர முடியும் என்ற மறைமுக நிர்ப்பந்தமும் உள்ளதல்லவா?)

‘நொண்டிச் சமாதானம்‘ கூறி திசை திருப்புகின்றனர் காவிக் கட்சியினர்!

இதற்குச் சமாதானமாக முந்தைய (UPA) காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முன்னணி அரசுதான் பார்லிமெண்டரிக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது; அதை நாங்கள் இப்போது செயல்படுத்துகிறோம் என்று ‘நொண்டிச் சமாதானம்‘ கூறி திசை திருப்புகின்றனர் காவிக் கட்சியினர்!

கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில்...

இதுபற்றி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவும், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் தெளிவான மறுப்புகளைக் கூறியுள்ளதோடு, பெரிதும் இந்தியாளர்கள் குழுவான அதன் பரிந்துரைகள் செயல் படுத்தாமல் கிடப்பில் போட்டதை, இப்போது தூசிகளை எடுத்து அவசரக்கோலத்தை அள்ளித் தெளிக்கவேண்டியதன் அவசியம் என்னவென்று வினவியுள்ளார்கள். கடும் எதிர்ப்பு தமிழ்நாட்டில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கிளப்பியதும், பொதுவான அமைப்புகள், ஊடகங்களே போர்க்கொடி உயர்த்தி விட்டன!

இரு மொழித் திட்டம்

இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என்பதை 1967 இல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக சட்டமன்றத்தில் கொள்கை ரீதியாக ‘இரு மொழித் திட்டம்‘ என்று பிரகடனப்படுத்தியது - ஜீவ நதிபோல நீரோட்டம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது!

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் ‘‘மாநிலச் செய்திகளில்’’ ‘ஆகாஷ்வாணி’ மாற்றப்பட்டு, ஆல் இந்தியா ரேடியோ (அகில இந்திய வானொலி) ஒலித்ததே - மறந்துவிட்டதா?

1938 இல் தந்தை பெரியார், தமிழ் அறிஞர்கள் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் போன்றவர்கள் இணைந்து நடத்திய ‘தமிழன் தொடுத்தப் போர்’ ஊட்டிய உணர்வு சாகாமல் வாழ்ந்துகொண்டே கண்காணித்து வருகிறது என்பதை டில்லி துரைத்தனம் புரிந்துகொள்ளவேண்டும்!

எப்போதும் விழிப்புடன் இருத்தல் அவசியம்

இன்று மத்திய அரசு தரப்பில் ஒரு விளக்கம் - இது வெறும் பரிந்துரைதானே ஒழிய, கட்டாயமானது அல்ல என்று கூறி, எதிர்ப்புகண்டு புற்றுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது இந்தித் திணிப்புப் பாம்பு! எப்போதும் விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பதையே இந்த நிலைப்பாடு காட்டுகிறது!

இது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல; கூடுதலாக - பண்பாட்டுப் படையெடுப்பு.

இந்தியா - ஹிந்தியாக மாற,

மொழி - சமஸ்கிருத ஆரிய கலாச்சார வழக்கம்

ஹிந்து - ஒரே மதம் - ஹிந்துத்துவா ஆட்சி - இவைகளுக்காக ஆயத்தங்கள்.

இந்தியா - பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருப்பது. வேற்றுமையில் ஒற்றுமை. ஆனால், இத்திணிப்பு ஒற்றைக் கலாச்சாரத்தினை நிலை நிறுத்தச் செய்யும் அபாயம்.

எனவே, எப்போதும் எச்சரிக்கை தேவை! தேவை!!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை   
26.4.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner