எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் தந்தை பெரியார் இல்லையா?

‘இந்து’ (தமிழ்) நாளேட்டில் குத்தூசி குருசாமி ‘சுயமரியாதையின் அடையாளம்‘ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் எழுத்துச் சீர்திருத்தத்தை முதன் முதலாகப் பேசியவர் குருசாமி என்றும், அதனை ‘குடிஅரசில்’ முதன் முதலாகப் பயன்படுத்தவும் செய்தார் என்றும், குத்தூசி குருசாமிமுன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவிற்குப் பிறகு 1978 இல் எம்.ஜி.ஆர். அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது என்றும் ஒரு புதிய ஸ்தலப் புராணம் புனையப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித ஆதாரத்தையும் எடுத்துக்காட்டாமல் மனம் போன போக்கில் யாரோ கிறுக்குவதையெல்லாம் வெளியிடுவது சரியானதுதானா?

அதற்கான ஆதாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. மொட் டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பதுபோல ஒருவர் எழுது வதும், அதனை ஓர் ஏடு வெளியிடுவதும்தான் பத்திரிகா தர்மமா?

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றாலே அது பெரியார் கொண்டு வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி ‘பகுத்தறிவு’ இதழில் (30.12.1934) தந்தை பெரியார் அறிவித்து, 13.1.1935 ‘குடிஅரசு’ இதழில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையிலேயே (பொதுத் (செய்தி மக்கள் தொடர்பு) துறை செய்தி வெளியீடு எண்: 449 நாள்: 19.10.1978) - ஓர் உண்மை தெளிவாகவே திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு ஏற்று அதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது’’ என்று ஆணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் ‘இந்து’ ஏட்டில் வெளிவந்துள்ள கட்டுரையிலோ குத்தூசி குருசாமி முன்வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவிற்குப் பிறகு 1978 இல் எம்.ஜி.ஆர். அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது என்று எழுதுகிறது என்றால், இது எவ்வளவுப் பெரிய பொய் மூட்டை என்பது எளிதில் விளங்கும்.

யார் மூளையிலோ உதித்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தானே கொண்டு வந்தது போல ஆக்கிக் கொள்ளும் அவசியம் தந்தை பெரியாருக்குக் கிடையாது - அந்தத் தன்மை உடையவரல்ல தந்தை பெரியார் என்பது நாடு அறிந்த ஒன்று.

ஒரு மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்;  அவர் தொடர்பான கருத்தை வெளியிடும் போது யோக்கியமான அணுகுமுறையும், பொறுப்புணர்ச்சியும் இருக்கவேண்டாமா?


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை
26.4.2017     

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner