எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் போட்ட இராமானுஜரின்

ஆயிரமாவது ஆண்டு விழாவைப் போற்றும் பிரதமர் மோடி அவர்களே!

‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை''க்கான அ.இ. அளவில் சட்டம் கொண்டுவந்து செயல்படுத்தலாமே!

தமிழ்நாட்டில் சட்டம் இருந்தும் செயல்படுத்தாதது ஏன்?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி, கல்யாண்சிங் பதவி விலகவேண்டாமா? ஊருக்குத்தான் உபதேசமா? பா.ஜ.க.வுக்குத் தமிழர் தலைவர் கேள்வி

இராமானுஜர் - தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பூணூல்  போட்டார், தீண்டாமை, ஜாதியை எதிர்த்தார் என்று பிரதமர் மோடி கூடப் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சு உண்மையாயின் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றி அகில இந்திய அளவில் செயல்படுத்த முன்வரலாமே! தமிழ்நாட்டில் சட்டம் இருந்து செயல்படுத்தாதது - ஏன்? என்று கேட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வருமாறு:

நாடெங்கும் வைணவப் பிரிவுகளில் ஒன்றான இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை மிகவும் விளம்பரப்படுத்தி பார்ப்பனர்களும், வைணவப் பக்தர்களும், ஆழ்வார் திருக்கூட்டத்தில் இணைந்த திராவிடர்களில் ஒரு பகுதியினரும்கூடக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இராமானுஜர்பற்றி பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி அவர்கள் நேற்று டில்லியில் மிக உருக்கமாகப் பேசியுள்ளார்.

‘‘இராமானுஜர் அமுல்படுத்திய சீர்திருத்தங்கள், இன்னும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளன. ஜாதிய வேறுபாடுகள் அதிகம் இருந்த அந்தக் காலத்தில், ஜாதிய வேறுபாடுகளை வேரறுக்க இராமானுஜர் மிகப்பெரும் பங்காற்றினார்.’’

‘‘சமுதாயத்திலிருந்த ஏற்றத் தாழ்வுகள் களையப் பட்டுள்ளன. முற்போக்குச் சிந்தனைகள் பெருகியுள்ளன. பிற்போக்குச் சிந்தனைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. ‘கட வுளின்’ முன் அனைவரும் சமம்; பக்தி அனைவருக்கும் பொதுவானது’’ என்ற இராமானுஜரின் சிந்தனை போற் றத்தக்கது.

இராமானுஜரின் வழிகாட்டுதலின்படி, ஏழைகள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் என சமுதாயத்தின் அனைத் துத் தரப்பினருக்கும் சமநீதி கிடைக்க நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.’’

‘‘இராமானுஜரின் கொள்கைகளை, வழிகாட்டுதலை, போதனைகளை, இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வது நம் கடமை!’’

- இவ்வாறு ‘முற்போக்கு முத்திரைகளை’ மொழிந்துள்ள  பிரதமர் மோடி அவர்களே, உங்களது சொந்த மாநிலமான குஜராத்தில் சென்ற ஆண்டு தாழ்த்தப்பட்ட ‘‘தலித்’’ சமு தாய  இளைஞர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது எடுத்த கடும் நடவடிக்கைதான் என்ன?

தங்களது பேச்சு தேன் கலந்த பேச்சுதான்! ஆனால், நடைமுறையில் ஜாதி, தீண்டாமையை ஒழிக்க பா.ஜ.க. ஆளும் பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள்தான் என்ன?

இராமானுஜரைப் போற்றுவோர் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்படுத்த முன்வருவார்களா?

இராமானுஜர் மதத்தில் புரட்சி செய்த மகான் மறுக்கவில்லை - தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பூணூல் போட்டு, மந்திரங்களை அனைவரும் அறிந்துகொள்ள பொது முழக்கம் செய்தவர் என்பது அவரது வாழ்க்கை நிகழ்வுகளானால், இன்று அவரைக் கொண்டாடுவோர் - ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி, கருவறைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஜாதியை - வருணாசிரமத்தை விரட்ட தந்தை பெரியார் அறிவித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இதற்கென இரண்டு முறை சட்டங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, உச்சநீதிமன்றம்வரை சென்ற வைதீக, சனாதன அர்ச்சக கனபாடிகள் தங்கள் முயற்சியில் தோற்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பு அளித்து, சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னமும் அது கிணற்றில் போடப்பட்ட ‘பாறாங்கல்லாகவே’ செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதே, அது சரிதானா?

இராமானுஜரைக் கொண்டாடும் பக்தர்கள் அவர் காட்டியதாகச் சொல்லப்படும் வழியையாவது பின்பற்றிச் செயலாற்ற இந்த ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தை அத்துணை ஆகமக் கோவில்

களிலும் நடைமுறைப்படுத்த, ஏற்கெனவே சிவாகமம், வைணவ ஆகமம் போன்றவைகளில் முறையான பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி பயிற்சியாளர்கள் இன்றும் 200 பேர்கள் தயார் நிலையில் வேலையின்றி பல ஆண்டுகளாக உள்ளார்களே அவர்களை நியமிக்க முன்வரவேண்டாமா? அகில இந்திய அளவில்கூட சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தலாமே!

அதுதானே இராமானுஜரின் லட்சியக் கனவுகளை அவரைப் பின்பற்றும் பிரதமர் மோடிமுதல் கடைசி பக்தர்வரை செயல்படுத்த அருமையான வாய்ப்பு.

ஏன் செய்யத் தயக்கம்?  தொடக்க விழாவிற்குப் பிரதமரை அழைக்கலாமே!

மனித உரிமைப் போராளிகளான திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளும்கூட உங்களைப் பாராட்டு வார்களே!

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையும், தமிழக அரசும் உடனடியாக, ஆகமப் பயிற்சி இல்லாமலே அர்ச்சகராக  கோவில்களில் உள்ள அர்ச்சகர்களை நீக்கிவிட்டு, பயிற்சி பெற்றவர்களை நியமித்து, பெருமைப் பெறலாமே! பிரபல கோவில்களில் அப்படி நியமனம்  செய்து, அதன் தொடக்க விழாவிற்குப் பிரதமர் மோடி போன்றவர்களையும், இராமானுஜர் விழாக் கொண்டாடும் முக்கிய பிரமுகர்களையும்கூட அழைக்கலாமே!

அதுதானே ஜாதி ஒழிப்புக்கான நல்ல தொடக்கமாக வழிகாட்டிய - தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் போட்ட இராமானுஜரின் வர்ண ஒழிப்பை நடைமுறைப்படுத்த செய்யப்படத் தக்க ஏற்பாடாக இருக்கும்?

வாய்ச் சொல்லால் பயன் ஏது?

இல்லையானால், அது வெறும் வாய்ச் சொல்லின் நீர் எழுத்துக்களாகவே ஆகிவிடும் - இல்லையா?

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
2.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner