எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மானுட குலத்திற்கு மகத்தான புதியதோர் விடியலைத் தந்த மாமேதை பிறந்து, மனித குலம் உய்ய அருமையான புது ஒளியை-புதியஉலகம் உருவாக்க வழிகாட்டிய காரல் மார்க்ஸ் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (5.5.2017).

பேதமிலாப் பெருவாழ்வை விரும்பும் அனைவரும் கொண் டாடுவர்.

வர்க்கப் பேதம் நிலவிய ஒரு சமுதாயத்தினை அவர் முக்கிய மய்யமாகக் கொண்டார்!

வருண பேதக் கொடுமை தனது ‘ஆக்டோபஸ்’ கொடுங்கரங்களை நீட்டிய சமுதாயம்பற்றி அவர் ஓரளவு குறிப்பிட்டுள்ளார்!

மனுதர்மத்தின் கொடுமைபற்றி அவரால் குறிப்பிட முடிந்தது; ‘குரங் கைக் கடவுளாக்கிக் கொண்டாடும் குறைமதியோர்' இந்திய சமூகத்தில் உள்ளனர் என்பதையும் அவர் தமது எழுத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்!

வெளிநாடுகளில் பேதம் என்றால், வர்க்க (Class) பேதம்தான்.

ஆனால், நமது பரந்து விரிந்த இந்த இந்தியாவில் வர்க்க பேதமும் உண்டு; அதற்கு ‘‘அப்பனாக’’ வருணபேதமும் (Caste) நிலைத்து வாழுகிறதே!

வருணத்திற்கும், வர்க்கத்திற்கும் மூல நம்பிக்கையாக கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை, எல்லாம் என் தலைவிதி, ‘தலையெழுத்து’ என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கே மயக்க மருந்து தந்து, புரட்சி வெடிக்காமல் செய்ய புல்லறிவாளர்களின் சூழ்ச்சி அவை என்று அவைகளைப்பற்றிய அடிப்படை உண்மைகளை - ‘நோய் முதல் நாடி’ ஆய்வு செய்தால் ஒழிய, பேதமிலாப் பெருவாழ்வு சம வாய்ப்புச் சமுதாயம் ஒருபோதும் நிறைவேறாது!

நேற்றைய பணக்காரர் இன்றைய ஏழை ஆகலாம்!

இன்றைய ஏழை நாளைய பணக்கார முதலாளி ஆகலாம்!

ஆனால், ஜாதி.... வர்ணாஸ்ரமம் அப்படியா? நேற்றைய உயர் ஜாதிப் பார்ப்பான், இன்றும் உயர்ஜாதிப் பார்ப்பான் - என்றும் உயர்ஜாதி பார்ப்பான் - சுடுகாட்டில்கூட அவனுக்கென்று தனி இடமே கூட ஒதுக்கப்பட்டுள்ளது!

இது பிறவிக் கூறு! இதை இந்நாட்டு தர்ம சாஸ்திரங்களிலிருந்து அரசியல் சட்டத்தை அமல்படுத்தும் உச்சநீதிமன்றம்வரை உறுதி செய்கின்றன!

எனவே, நம் நாட்டைப் பொறுத்தவரை சமுதாய, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் வரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, மார்க்சியமும் - பெரியாரியமும் இணைந்த ஒன்றுதான் விடியலுக்கான ஒரே  வழியாகும்!

எனவே, இக்கருத்தாளர்கள் கைகோத்து பீடுநடை போட்டு, மதவெறி சக்திகளை விரட்டி - சமூகநீதிக் கொடியை பறக்கவிட்டு ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’, ‘‘எல்லார்க்கும் எல்லாமும்‘’ கிட்ட எப்போதும் சூளுரைப்போம்!

வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

சென்னை
5.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner