எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, மே 6-  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தாக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் பசுவை தத்தெடுத்து அதை வணங்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் அச்சுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரின் இந்த நேரடி மிரட்டல் கருத்து மீண்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மாட்டிறைச்சிபற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதனால் பல இடங்களில் சர்ச்சைகள் வெடித்தன.

இந்த நிலையில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். இந்த விவாதத்தைக் கையிலெடுத்துள்ளது ஆபத் தானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நாட்டு வளர்ச்சிக்கு நிறைய செய்யப்படவேண்டிய நேரங்களில் இதுபோன்ற விஷயங்களில் மக்க ளின் கவனத்தைத் திசை திருப்புவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கள் எச்சரிக்கிறார்கள். மத இணக்கமும், தேச ஒற்றுமையும் உள்ள நாட்டில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதுபோல பேசுவதுதான் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமைந்துவிடுகிறது என்று கூறும் சமூக ஆர்வலர்கள், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைக் கடைபிடிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

மாட்டிறைச்சித் தொடர்பாக, ஏஎன்அய் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள இந்தி ரேஷ் குமார், ‘‘இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்கூட, மாட்டிறைச்சி அதிகம் உண்ணப்படவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் பலரும் பசுக்களைப் புனித மாக வழிபட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.

‘‘தத்தெடுங்கள் பசுவை!’’

மேலும் இந்திரேஷ் குமார், ‘’தற்போது பலர் மாட்டிறைச்சி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் வேதனை தருகிறது. இந்த வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்‘’ என்றார். அத்துடன் குறிப்பாக இஸ்லாமிய மக்கள், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக பசு மாடுகளை தத்தெடுத்து, அவர்கள் வளர்த்தார்கள் எனில், அவர்களை யாரும் தாக்கமாட்டார்கள். மாடுகளின்மீது இஸ்லாமிய மக்கள், பரிவும், பாசமும் காட்ட வேண்டும். தற்போது பசுக்களை இஸ்லாமியர்கள் புனிதமாக பார்க்காமல் அதை ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்கின்றனர். இதனால்தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவில் பசுப் பாதுகாவலர்கள் பசுக்களைப் பாதுகாக்க சில நடவடிக்கைகள் எடுக்கத்தான் செய்வார்கள்'' என்று இந்திரேஷ் குமார் கூறினார்.

கடந்த மாதம் அரியானாவில் இருந்து பால் பண்ணைக்காக பால் மாடுகளை வாங்கி வந்த இஸ்லாமியர்களை ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து அடித்தே கொலை செய்தனர் பசுப் பாதுகாவலர்கள். இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை கைது செய்த ராஜஸ்தான் மாநில காவல்துறை அவர்கள்மீது சாதாரண வழக்குப் பிரிவின்கீழ் பதிவு செய்து பிணையில் அவர்கள் அனைவரும் வெளிவந்துவிட்டனர்.  அல்வர் மாவட்ட பாஜக பிரமுகரும், பெண் சாமியாருமான கமலா என்பவர் இக்கொலை செய்தவர்களை பகத்சிங், சுக்தேவ் போன்ற சுதந்திர வீரர்களுக்கு இணையாக பார்க்கவேண்டும் என்று கூறியதுமல்லாமல், அவர்களுக்குப் பாராட்டுவிழாவையும் நடத்திக் காண்பித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner