எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசுக்கும் - நீதிமன்றத்துக்கும் ‘சமர்ப்பணம்!’

‘நீட்’ தேர்வின் குளறுபடிகள் - கெடுபிடிகள்

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கே சாதகம்

தேர்வு எழுதிய பெரும்பான்மை மாணவர்கள் குமுறல்

என்று மடியும் இந்தச் சமூக அநீதி?

சென்னை, மே 8 நேற்று (7.5.2017) நடைபெற்ற ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. முறையில் படித்த மாணவர்களுக்கே சாதகம்; மாநிலக் கல்வி முறையில் படித்தவர்களுக்குப் பெரும் பாதிப்பு என்று தேர்வு எழுதிய இருபால் மாணவர்களும் குமுறினர்.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகளில்12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப் பெண்களின்அடிப்படையில்தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்,அருந்ததியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட் டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட முசுலீம் சிறுபான்மையர் ஆகிய பிரிவுகளின்கீழ் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் வகைப்படுத்தப்பட்டு அவர்கள் பெறுகின்ற மதிப் பெண்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த கலந்தாய்வின்மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வின்மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு  நுழைவுத் தேர்வு இல்லாமல், 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வால் இடஒதுக்கீடு பாதிக்கும்

இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதற்கு நீட் நுழைவுத் தேர்வு பொருந்தாது என்று கல்வியாளர்கள், சமூக ஆர் வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தனிச் சட்டம் நிறைவேற்றம்

அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்ற நீட்  நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படியே நடத்தப்பட்டுவருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின்படி கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் நலன் கருதி, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கின்ற தனிச் சட்டம் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டத் துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்கிற நம்பிக் கையில் தமிழ்நாட்டில் அனைவரும் எதிர்ப் பார்த்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கே செல்லவில்லை என்கிற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களா? தீவிரவாதிகளா?

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய அளவிலான (நீட்) நுழைவுத் தேர்வு நேற்று (7.5.2017) தமிழ்நாட்டிலும் நடைபெற்றது.

இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுத வந்த மாணவர்களை தீவிரவாதிகளை நடத்து வதுபோன்று தேர்வுத் துறையினர் நடத்திய கொடுமைகள் நடந்துள்ளன.

தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால் குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதை யும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட விதிவிதமான தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.

ஹாப் ஸ்லீவ்ஸ் என்ற அரை கை உடை, மெல்லிய ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். பெரிய பொத்தான், பேட்ஜ், பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள், தலையில் அணியும் கிளிப்புகள், பூ போன்ற சிறப்பு அலங்கார ஆடைகளை அணிய கூடாது, சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வர வேண்டும்.

புடவை கட்டி வரும் பெண்கள், வளையல்கள், பர்தா, பைஜாமா குர்தா ஆகியவை அணிந்து வருபவர்களுக்கு அனு மதி மறுக்கப்படும். மாணவர்கள் ஷூ, சாக்ஸ் முழுக்கை சட்டை, டிசர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர்கண்ணாடி போன்றவை அணிய கூடாது. சாதாரண வகை பேண்ட், அரைக்கைசட்டை போன்ற ஆடைகளை மட்டும் அணிய வேண்டும் என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தன. அதிகப்படியான சோதனை நடவடிக்கையால் தேர்வு எழுதும் மய்யங்கள் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த சோதனையால் தேர்வு எழுதும் மய்யங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், சோதனை செய்பவர்களுக்கும் இடயே பல இடங்களில் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

நீட் தேர்வு சோதனைக்காக மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்னதால் அதிர்ச்சி

இந்நிலையில், கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழட்ட சொன்னதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த மாணவியின் தாயார் கூறுகையில், எனது மகள் தேர்வு மய்யத்திற்குள் சென்று திரும்பி வந்து தன்னுடைய மேல் ஆடையை என்னிடம் கொடுத்தாள் என்றார்.

நீட் தேர்வு வேண்டாம்: தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-, மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

ஹரிதா என்ற மாணவி கூறியதாவது:- நான் தமிழக அரசின் மாநில பாட திட்டத்தில் சென்னை திருவான்மியூர் சிறீசங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். நீட் தேர்வில் தாவரவியல், விலங்கியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதில் அளிக்கும் படி இருந்தன. ஆனால் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன. பல கேள்விகள் சிரமமாக இருந்தன. நீட் தேர்வு நடத்தினால், இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டமாக அறிவிக்க வேண்டும். என் போன்ற தமிழக பாடத் திட்டத்தில் படித்த மாணவ, -மாணவிகள் 90 சதவீதம் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு கடினமாகத்தான் இருந்து இருக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மய்யங்கள் நிறைய தோன்றிவிட்டன. அந்த பயிற்சி மய்யங்களில் சேர்ந்து படிக்க பொருளாதார வசதி தேவை. என் போன்றவர்களால் கூட பயிற்சி மய்யத்திற்கு பணம் கட்ட முடியவில்லை. ஏழை மக்கள் பணத்திற்கு எங்கே போவார்கள்? கிராமங்களில் பணவசதி இருந்தும், பயிற்சி மய்யங்கள் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தியா முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வந்து அதன் பிறகு நீட் நடத்தவேண்டும். எனவே வருகிற கல்வி ஆண்டில் நீட் தேர்வு வேண்டாம். இவ்வாறு ஹரிதா கூறினார்.

மாணவர் சம்பத் கூறியதாவது:- நான் தர்மபுரியை சேர்ந்தவன். அங்கு உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரியாக நடத்துவதில்லை. ஆனால் எங்கள் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை சரியாக நடத்தினார்கள். அதில் இருந்து பல கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. அதனால் தேர்வை சரியாக எழுதி உள்ளேன். இருப்பினும் இயற்பியல் பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை. கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தன. எப்படியும் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். அந்த அளவுக்கு நீட் தேர்வை நன்றாக எழுதி உள்ளேன்.

 

கடினமான இயற்பியல்,வேதியியல் பாட கேள்விகள்

பிரீத்தி என்ற மாணவி கூறியதாவது:- நான் சென்னை நங்கைநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தேன். நீட் தேர்வில் தாவரவியல், விலங்கியல் ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. வேதியியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதிலளிக்கும் வகையில் இருந்தன. இயற்பியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தன.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரத்தினாம்பிகா, திருநெல்வேலியைச் சேர்ந்த கவுசிகா, சென்னை கொரட்டூரை சேர்ந்த மிந்தியா, பெரம்பலூரை சேர்ந்த எஸ்.ஆர்த்தி ஆகியோரும் இயற்பியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன என்றனர்.

நீட் எழுத்து தேர்வு நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மய்யங்களில் நேற்று (7.5.2017) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கும் சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய தேர்வு மய்யங்களோடு வேலூர், திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் தேர்வு மய்யங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் எட்டு மய்யங்களில் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் அளிக்க2222ப்படும்.

தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் மட்டும் மிக சிரமமாக இருந்தன. கேள்விகள் பல கால்குலேசன் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியல் பிரிவில் பிளஸ்-1 வகுப்பில் இருந்து 24 கேள்விகளும், 12-வது வகுப்பில் இருந்து 21 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன.

வேதியியல் பிரிவில் 11- ஆவது வகுப்பில் இருந்து 21 கேள்விகளும், 12 ஆ-வது வகுப்பில் இருந்து 24 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பகுதியில் 112 ஆ-வது வகுப்பில் இருந்து 44 கேள்விகளும், 12- ஆவது வகுப்பில் இருந்து 46 கேள்விகளும் இடம் பெற்றிருந்தன.

--------------------------

 

சட்டையைக் கிழித்துக்கொண்டு

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள்

நீட் தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு கடுமையான சோதனைகள் செய்யப்பட்டதால் தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர்.

நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் நேற்று தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு சென்ற மாணவ, மாணவிகளுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர்.

மாணவர்கள் முழுக்கை சட்டையுடன் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று ஏற்கெனவே விதிமுறை இருந்துள்ளன. இது தெரியாத நிறைய மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மய்யத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் சட்டையின் கைப்பகுதியை வெட்டிவிட்டு தேர்வு எழுத அனுமதித்தனர். மேலும் மாணவிகள் கம்மல், ஹேர்பின், கொலுசு போன்றவற்றை அணிந்து கொண்டு தேர்வு எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் தேர்வு மய்யத்திற்கு முன் மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த கொலுசுகள், வளையல்கள், கம்மல்களை  தங்களது பெற்றோரிடம் கழட்டிக் கொடுத்து விட்டுச் சென்றனர். மேலும் தேர்வு எழுதுவ தற்கு ஒரு பாஸ்போர்ட் அளவில் ஒரு நிழற்படமும், அஞ்சலட்டை அளவில் ஒரு நிழற்படமும் தவிர இரண்டு நிழற்படங்கள் தேவைப்பட்டுள்ளது. தேவையான நிழற்படங்கள் இல்லாத சிலர் நிழற்படங்கள் எடுப்பதற்கு அலைந்து திரிந்து சிரமப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner