எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘சமூகநீதி சம்பூகனின்’ தலையை வெட்டும் ‘ராமராஜ்ஜியம்‘ நடக்கிறது!

தேர்வு எழுத வந்த மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள்மீது நடவடிக்கை தேவை!

சமூகநீதி என்னும் சம்பூகனின் தலையை வெட்டும் பி.ஜே.பி.யின் ராமராஜ்ஜியம் நடக்கிறது; தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் - செயல்படுத்த வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிறு அன்று இந்தியா முழுமையும் நடந்தேறியுள்ளது.

மக்கள் உணர்வை மதிக்காத
மத்திய பி.ஜே.பி. அரசு

இந்தத் தேர்வு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங் களைச் சேர்ந்த முதல் தலைமுறையினரைக் கடுமையாகப் பாதிக்கச் செய்யும் என்று எச்சரித்திருந்தும் தமிழ்நாட்டில் பல போராட்டங்களையும், கருத்தரங்கங்களை நடத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று ஒரு சட்டத்தை ஒரு மனதாக நிறைவேற்றியும் அவற்றை எல்லாம் சற்றுப் பொருட்படுத்தாமல் ஜனநாயக விரோதமாக மத்திய பி.ஜே.பி. அரசு மிகவும் பிடிவாதமாக ‘நீட்’ தேர்வை நடத்தியே முடித்துள்ளது.

மிகப்பெரிய கொடுமை - தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்டத்தை, மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பவில்லைஎன்பது எத்தகைய கொடுமையானது -  மாநில அரசைத் துச்சமாக மதிக்கும் துஷ்டத்தனமானது என்பதல்லாமல் வேறு என்னவாம்?

அன்று உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

2013 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் விக்ரம் ஜித்சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு மருத்துவக் கவுன்சிலுக்கு, தேர்வு நடத்தும் உரிமை இல்லை என்று திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியவர் ஏ.ஆர்.தவே.

அதே தவேதான்.... அதே தவேதான்...

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிப் பதற்காக அமைக்கப்பட்ட அமர்வுக்குத் தலைமை வகித்தவர் - முன்பு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஏ.ஆர்.தவே என்றால், அத்தீர்ப்பு எப்படி இருக்கும்?

நீதித்துறையிலும் தேவை இட ஒதுக்கீடு!

‘நீட்’ தேர்வு நடத்தப்படவேண்டும் என்று எதிர்ப்பார்த்தபடியே தீர்ப்பும் அமைந்தது. நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படாதவரை சமூகநீதி என்னும் சம்பூகனின் தலை வெட்டப் பட்டே தீரும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

‘நீட்’ தேர்வு எழுதிய இருபால் மாணவர்களும் மிக வெளிப் படையாகவே தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் குமுறல்!

தேர்வு மிகவும் கடினமாகவே இருந்தது; சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் சாதகமாக இருந்தது என்று கண்ணீரும், கம்பலையுமாக  இருபால் மாணவர்களும்  சொன்னதைத் தொலைக்காட்சிமூலம் காண முடிந்தது.

‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்ததன் நோக்கமே அதுதானே! இந்தாண்டு நடத்தப்பட்டு விட்டதால், ‘நீட்’ தொடரும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்!

இந்தத் தேர்வின் முடிவுகள் கண்டிப்பாக நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.

தந்தை பெரியாரின் சமூகநீதி மண் கந்தக எரிமலையாக வெடித்தே தீரும் என்று எச்சரிக்கின்றோம்.

மாணவர்களை
மன உளைச்சலுக்கு ஆளாக்குவதா?

‘நீட்’ தேர்வை எழுத வந்த இருபால் மாணவர்களை அதிகாரிகள் நடத்திய விதம் வெட்கப்படத்தக்கதாகும் - கடும் கண்டனத்துக்கும் உரியதாகும்.

கேரளாவில் பெண்களின் உள்ளாடைவரை சோதித்தனர் என்றால், இதன் பொருள் என்ன?

காதுகளில் அணிந்திருந்த நகைகளைக் கழற்றச் சொன்னதோடு நில்லாமல், காதுக்குள்ளும் குடைந்து பார்த்தனர் என்பதெல்லாம் அருவருப்பானதல்லவா? தேர்வு எழுதும் இருபால் மாணவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?

தேர்வு எழுதுவதற்குமுன் மாணவர்களை மன  உளைச்சலுக்கு ஆளாக்கிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதன் பின்னணியில் இருக்கக்கூடும்.

பழி தீர்க்கும் நோக்கம்!

நுழைவுத் தேர்வு நடைபெறாமல் பிளஸ் டூ தேர்வு அடிப் படையில் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு நடைபெற்றபோது 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த ஒரே ஒரு மாணவருக்குக்கூட இடம் கிடைக்கவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், பழி தீர்க்கும் கபட எண்ணத்தோடு ‘நீட்’ தேர்வு என்னும் காய் நகர்த்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது!

மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள்மீது விசாரணை நடத்தப்படவேண்டும்.

மண்டல் குழுப் பரிந்துரையின்  அடிப்படையில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை  9 மாதங்களில் கவிழ்த்த பி.ஜே.பி.யின்  தலைமையில்தானே இப்பொழுது ஆட்சி நடக்கிறது?

எந்த எல்லைக்கும் சென்று சமூகநீதியின் கழுத்தை வெட்டு வார்கள் - அதனைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
சிறப்பு மருத்துவப் படிப்பும் கபளீகரம்

இன்னொரு மிகப்பெரிய இழப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவப் படிப்பிற்கு (DM, Mch) 192 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவில் பத்து மாநிலங்களில் ஒரு இடம்கூட கிடையாது. நமது மாநில அரசு செலவில், நிர்வாகத்தில் உள்ள இடங்கள் அனைத்தும் அகில இந்தியத் தொகுப்புக்குள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம் சாத்தப்படுகிறது!

அரசியல் ஆரவாரத்தை ஒரு பக்கம் தள்ளி, தமிழ் மண் ணின் அடித்தளத்தையே நொறுக்கும் மத்திய பி.ஜே.பி. அராஜ கத்தை எதிர்த்து முறியடிக்கவேண்டாமா? பெற்றோர்களே, புரிந்துகொள்ளுங்கள்!

ஓரணியில் திரள்வீர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு இன்னும் உயிர் இருக்கத்தான் செய்கிறது. அதனைச் செயல்படுத்த வைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் கிளர்ந்து எழவேண்டும் - ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும்; கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும்; இதற்கு ஒரே நிரந்தரத் தீர்வு இதுதான்!சென்னை                                                                                               தலைவர்
9.5.2017                                                                                              திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner