எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்விகள் என்பது எப்படி பொதுத் தகுதி தேர்வாகும்?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு பொதுத் தகுதியின் அடிப்படையில் தேர்வு என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கம் வெவ்வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களின் அடிப்படையில் தேர்வை எழுதச் சொல்லுவது எப்படி சரியாகும்? அது எப்படி நேர்மையான அளவுகோலாகும்? என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு - தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி, பிடிவாதமாக மத்திய பி.ஜே.பி. அரசு அத்தேர்வை நடத்தி முடித்துள்ளது.

இந்தத் தேர்விலும் ஏகப்பட்ட குளறுபடிகள் - தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அநாகரிக அத்துமீறல்கள் ஒருபுறம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வினாக்கள் ஏன்?

இதில் மிகப்பெரிய மோசடி ஒன்று நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் தகுதித் தேர்வு என்று சொல்லிக் கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும்  வெவ்வேறு வகையான கேள்வித் தாள்களாம்!

இப்படி இருக்கும்பொழுது அகில இந்திய அளவில் மாணவர்களைப் பொதுத் தகுதியின் அடிப்படையில் தேர்வு என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? எல்லோருக்குமான பொது அளவுகோல் இருந்தால்தானே அவர்கள் கூறும் அந்தத் தகுதியை எடை போட முடியும்?

குஜராத்துக்கு மட்டும்
எளிமையான கேள்விகளா?

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வுக் கேள்வித் தாள்கள் மட்டும் மிக எளிதாக இருந்திருக்கின்றன. மற்ற மற்ற மாநிலங்களில் கடினமாக கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் குஜராத் மாநிலத்தில் இந்தத் தேர்வை எழுதியவர்கள் அதிக எண்ணிக்கையில் இடங்களைத் தட்டிப் பறிக்கும் திட்டமிட்ட மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

சரக்கு வைக்கும் இடத்திலே எடைக்கல்லைப் போட்டு நிறுத்துப் பார்க்கும் மோசடியல்லவா இது!

குஜராத் மாநிலம் என்றால் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் - அடுத்து சட்டமன்ற தேர்தல் அங்கு நடக்கவும் இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்றாலும், காவிரி நதிநீர்ப் பிரச்சினை என்றாலும், மோடி அரசின் பார்வை என்பது அரசியல் சுயநல நோக்கத்தில் கருத்தரிப்பவனாகவே உள்ளன.

தினமலரின் திசை திருப்பும் வேலை!

இன்றைய ‘தினமலர்’ ஏட்டில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ‘‘‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ‘ஜாக்பாட்’ - கூடுதல் இடங்கள் கிடைக்கும்‘’ என்பதுதான் தலைப்புச் செய்தி.

‘நீட்’ தேர்வு - சி.பி.எஸ்.இ. அடிப்படையில் என்கிறபோது, அதுவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபாடு இருக்கும்போது அகில இந்திய தொகுப்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் எப்படி அதிக இடங்களைப் பெறுவார்களாம்?

எதையும் திசை திருப்பிக் குட்டையைக் குழப்புவதுதான் பார்ப்பனர்களுக்கும், அவர்களின் ஏடுகளுக்குமே உரிய குயுக்தியான கைவந்த கலையாகும்.

சமூகநீதி ஒழிப்பு - மதச்சார்பின்மைக்குக் குழி பறிப்பு - இரண்டுமே இரு கண்கள் பி.ஜே.பி.,க்கு!

ஒன்று மட்டும் உறுதி! கல்லின்மேல் பொறிக்கப்பட்ட உண்மை அது! ஒன்று சமூகநீதியை ஒழிப்பது, இரண்டாவது மதச் சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பது; இவ்விரண்டும்தான் மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் கண்ணெ னத்தகும் கோட்பாடுகள் ஆகும்.

புரிந்துகொள்வீர்!

தேவை எச்சரிக்கையும் - போதிய விழிப்புணர்வுமே!

இந்த இரண்டையும் கோட்டைவிட்டால், அது ராம ராஜ்ஜியமே!சென்னை                                                                                    தலைவர்
11.5.2017                                                                                 திராவிடர் கழகம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner