எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், மே 13- விவசாயிகள் போராட்டத்தை வென்றெடுக்க மக்கள் போராட்டமாக மாற்றவேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் சூளுரைத்தார்.

காவிரி நதிநீர் உரிமை மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினருக்கு தஞ்சையில் நேற்று (12.5.2017) மாலை நடைபெற்ற பாராட்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வி.சி.க., காங்கிரசு உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று உரையாற்றினர்.

நான் அய்யாவின் மாணவன், ஆசிரியர்தான் வழிகாட்டவேண்டும்...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு, விவசாய சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு உரையாற்றியதாவது:

டில்லியில் போராடிய எங்களை பல மாநில விவசாயிகளும், தலைவர்களும் வந்து பார்த்து துணை நின்றனர். நீதிபதிகள் வந்தனர். அவர்கள் பெரியார் இல்லை என்றால், உரிமை கிடைத்திருக்காது. நாங்கள் இந்நிலைக்கு வந்திருக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

விவசாயம் அழிந்து வருகிறது. இதை பேசுவதற்கும், கேட்பதற்கும் உரிமையில்லை. 41 நாள்கள் மிகுந்த இன்னல்களுக்கிடையே போராட்டம் நடத்தினோம். குருத்துவாரிலே பிச்சை எடுத்தோம். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எங்கள் சட்டையை, வேட்டியை கழற்றியது.

பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மோடி எங்களை பார்க்க அனுமதி வழங்கவில்லை. உலகம் இந்தியாவைப் பார்த்து, மோடியைப் பார்த்து சிரிக்கவேண்டும். விவசாயிகளின் நிலைமை உலகுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக நிர்வாணப் போராட்டம் நடத்தினோம்.

எங்களைப் பார்த்து தீவிரவாதிகள் என்கின்றனர். போராட்டம் நடத்தினால் தீவிரவாதிகளா? மாநில அரசிடம் போராடிப் பார்த்தோம்,  ஒன்றும் நடக்கவில்லை.

நதிகளை இணைப்பது, விவசாயப் பொருள்களை லாபகரமான விலைக்கு விற்பனை செய்ய அதிகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இதை யெல்லாம் செய்யவேண்டியது மத்திய அரசு தானே - அதனாலே டில்லியிலே போராட்டம் நடத்தினோம்.

அடுத்தகட்டப் போராட்டம் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  இதிலே 28 மாநில விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். எங்கள் சந்ததிகளைக் காக்கும் போராட்டம் இது - மத்திய அரசு பாராமுகமாகவே இருந்தால், சிறுநீர் குடிக்கும் போராட்டமும், மலம் உண்ணும் போராட்டமும் நடத்தப்படும்.

நான் அய்யாவின் மாணவன், ஆசிரியர் நேர்மையான, நடுநிலையான, எதையும் எதிர்பார்க்காத, அனுபவம் மிக்க பெருந்தலைவர். ஆசிரியர் அய்யா நீங்கள் வழிகாட்டுங்கள் எனத் தெரிவித்தார்.

மக்கள் போராட்டமாக மாறவேண்டும்...

மாபெரும் இப்பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு போராட்டமே வாழ்க்கை, வாழ்க்கையே போராட்டமாகக் கொண்டிருக்கிறார். போராட்டம் நடத்தும் பல்கலைக் கழகமாக விளங்குகிறார். 41 நாள்கள் பிறருக்கு தீங்கு செய்யாமல், தங்களையே வருத்திக் கொண்டு போராடியிருக்கின்றனர். அரை நிர்வாண பக்கிரி என்றழைக்கப்பட்ட காந்தியார் அவர்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கோட்சேவின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வினருக்கு மனிதநேயம் இருக்காது என்பதை அய்யாக்கண்ணு அவர்களின் போராட்டம் விளக்கியிருக்கிறது.

தி.க., தி.முக.., வி.சி.க., காங்கிரசு கட்சியினருக்கு விவசாயிகள்மீது உள்ள அக்கறையாலே பேசுகிறோம். ஆனால், ஆர்.எஸ்.எஸின் - பி.ஜே.பி. மோடி அரசு விவசாயிகளை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இந்தத் தேசம் யாருக்குச் சொந்தம் - 3 சதவிகிதம் உள்ள ஆடு மாடு ஓட்டிக்கொண்டு மேய்க்க வந்தவர்களுக்கு சொந்தமா? 97 சதவிகிதம் உழைக்கும் மக்களுக்குச் சொந்தமா? என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மாடு ஓட்டிக்கொண்டு வந்ததினாலே அவர்கள் மாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்குக் கொடுப்பதில்லை.

விவசாயம் பாவத் தொழில் என்கிறார்கள். 1919 ஆம் ஆண்டு வெளியிட்ட அசல் மனுதர்மத்திலே இப்படி கூறப்பட்டுள்ளது. ஆனால், உழவும் தொழிலும் திராவிடர் பண்பாடு. திருக்குறளும் இதையே காட்டுகிறது.

அவர்கள் நம் இனம் இல்லை. அதனாலே நமக்கு செய்ய மனம் இல்லை. காந்தியம், பெரியாரியம் தாண்டி இனமானம் காக்க டில்லியிலே நடத்தப்பட்டது இணையற்ற போராட்டம் ஆகும்.

விவசாயம் எப்படி அழிக்கப்பட்டதோ, விவசாயிகள் அவமதிக்கப்பட்டதுபோல, இன்றைக்கு விவசாயி வீட்டுப் பிள்ளைகள் ‘நீட்’ தேர்வு எனும் பெயராலே அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வாலே விவசாயப் பிள்ளைகளின் மருத்துவக் கனவு தளர்ந்து போயுள்ளது. நெடுவாசலிலே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களிலே மத்திய அரசுக்கு யார் சிறந்த அடிமையாக இருப்போம் என்பதில் போட்டி நடக்கிறது.

இந்த நிலையில், காலே இல்லாதவர்கள் கால் ஊன்றப் போகிறோம் என்கிறார்கள். அவர்கள் ஊன்றும் கால் ‘மிஸ்டு கால்’தான் என்றார்.

இறுதியாக, விவசாயிகள் போராட்டத்தை வென் றெடுக்க மக்கள் போராட்டமாக மாற்றவேண்டும். கட்சி, ஜாதி, மத பேதமின்றி மாநில உரிமையை, நாட்டை, ஜனநாயகத்தை, சமூகநீதியை காவியிடமிருந்து காக்கவேண்டும். சிவப்பு மண்ணாக, பச்சை மண்ணாக, புரட்சி மண்ணாக மாற்றவேண்டும் என்றார். (முழு உரை பின்னர்).

பெரியார் இல்லை என்றால்...

இந்நிகழ்வில், தி.மு.க. மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் எல்.கணேசன் உரையாற்றியதாவது:

தாய்க்கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் இந்த விழாவை நடத்துகிறார். எனக்கு 83 வயதாகிறது. அய்யாக்கண்ணுபோல விதவிதமான போராட்டம் நடத்தியவர்களை நான் பார்த்ததில்லை.

டில்லியில் 41 நாள்கள் விவசாயிகள் போராடினர். ஆனால், பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கவே இல்லை. அவரைப் போல் மனிதாபிமானமற்ற நபர் வேறு யாரும் இல்லை என சாடினார்.

மேலும், பெரியார் இல்லை என்றால் இந்த இனம் நிலைகுலைந்து போயிருக்கும். தந்தை பெரியாருக்குப் பின்னாலே அவரது தலைமாணாக்கர் அண்ணா, அவரது வழியிலே கலைஞர் வந்ததினாலே நாம் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்க பாடுபட்டவர் கலைஞர்; நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு துளி மையால் கையெழுத்திட்டு மனைப்பட்டா வழங்கினார்.

எனவே, விவசாயிகள் பிரச்சினை என்றால், நீங்கள் எந்தப் போராட்டம் நடத்தினாலும் முன்னோடியாக இருப் போம் - தியாகம் செய்வோம் என்று உரையாற்றினார்.

நாம் திராவிடர்கள் என்கிற

காரணத்தால்....

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி உரையாற்றியதாவது:

காவிரி நதிநீர் உரிமை, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும், தென்னிந்திய நதி களை இணைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புதுடில்லியில் விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு அவர்கள் 41 நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால், மோடி அவர்களை அழைத்துப் பேசவே இல்லை.

நாம் திராவிடர்கள் என்கிற காரணத்தினாலே இன்றைக்கு பி.ஜே.பி. அரசு நமது போராட்டங்களை அலட்சியப்படுத்துகிறது. நமது கோரிக்கைகளை புறந்தள்ளுகிறது; இந்நிலையில், தமிழர் தலைவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.

போராட்ட வடிவம் கண்டு...

தி.மு.க. தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் உரையாற்றியதாவது:

டில்லியில் 41 நாள்கள் தொடர்ந்து விதவிதமான போராட்டங்களை அய்யாக்கண்ணு அவர்கள் நடத்தினார். போராட்டத்தைத் தொடங்கியபோது, இவர் எப்படி நடத்தப் போகிறார் என்ற அலட்சியம் இருந்தது. ஆனால், நாள்கள் நகர நகர போராட்ட வடிவத்தை கண்டு திகைத்துப் போனோம். ஒரு நாள் பட்டினிப் போராட்டம் இருந்தாலே, எப்போது 5 மணியாகும் எனக் காத்திருக்கிறோம். ஆனால், அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 41 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பாராட்டுக்குரியது.

தஞ்சையில் தளபதி அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அய்யாக்கண்ணு அவர்கள் பங் கேற்று உரையாற்றியபோது ஆச்சரியப்பட்டோம். விவசாயிகளின் போராட்டத்திற்கு துணையாக நிற்போம் எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக...

காங்கிரசு கட்சி தஞ்சை மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.இராசேந்திரன் உரையாற்றியதாவது:

பெருந்தலைவர் காமராசர் வழிவந்தவர் அய்யாக் கண்ணு அவர்கள். அவர்கள் விவசாயிகளை காப்பாற்ற டில்லிக்குச் சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி னார். ஆனால், மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நேரத்திலே திராவிடர் கழகம் சார்பில் நடத்தக்கூடிய பாராட்டு சிறப்புக்குரியது. காங்கிரசு கட்சி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் என்றார்.

மோடி அரசு பாராமுகமாகவே...

தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திர சேகரன் உரையாற்றியதாவது:

இந்தியாவின் கவனத்தை ஈர்க்க 41 நாள்கள் நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை  விவசாய சங்கத் தலைவர் அய்யாக் கண்ணு அவர்கள் நடத்தினார். ஆனால், மோடி அரசு பாராமுகமாகவே இருந்தது வேதனைக்குரியது.

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 7000 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் பிரச்சினைக்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தமிழர் தலைவர் விவசாயிகளுக்குப் பாராட்டு விழா நடத்துவது சிறப்புக்குரியது. மாநில தேர்தல் பணிக்குழுத் தலைவர் எல்.கணேசன் அவர்கள் சொன்னதுபோல, விவசாயிகளின் போராட்டங்களில் முன்னிற்போம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner