எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிளஸ் 2 ரேங்க் பட்டியல் தவிர்ப்பு வரவேற்கத்தக்கதே!

பிள்ளைகளை சீரழிக்கும் கைப்பேசிகள் - பெற்றோர்களே எச்சரிக்கை!

தேவநேயப் பாவாணர் அரங்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருக!

கலைவாணர் அரங்கு  - குறைந்த வாடகை நிர்ணயம் செய்க!!

கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவையே!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

வந்தே மாதர ஆட்சியின் வக்கணை இதுதானா?

பிளஸ் டூ தேர்வு முடிவில் தகுதி (ரேங்க்) பட்டியல் தவிர்த்தது வரவேற்கத்தக்கது. கல்வியை வியாபாரமாக்கும் போக்கு இதன் மூலம் தடுக்கப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கை வரவேற்கத்தக்கது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பள்ளித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இவ்வாண்டு செய்த மாற்றம், மாநிலத்தில் முதல் மதிப்பெண் என்று மூன்று இடங்கள் எடுத்தவர்களையும், பள்ளிகளையும் விளம் பரப்படுத்தாதற்கு முக்கிய காரணம், அதை வைத்து பலர் வியாபாரம், கல்விக் கொள்ளை நடத்துகிறார்கள் என்பதாலேயே; இது மிகவும் வரவேற்கத்தக்கதே!

பட்டியல், பெயர், படங்கள் போடுவது வணிக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தாலேயே இந்த முடிவு என்பது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வாதம்; இது பசையுள்ளது - இது தேவையானது என்பது எதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது தெரியுமா?

இந்த முறை ‘‘கோச்சிங் சென்டர்’’ என்ற கல்வி வணிக நிறுவனங்களுக்கு - விளம்பரத் தடையை தமிழக அரசு நீடிக்கவேண்டும்.

கல்வித் துறைப்

புதிய செயலாளர்

புதிதாகப் பொறுப்பேற்ற பள்ளிக் கல்வித் துறை செயலாளரான திரு.உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ்.அவர்கள் தமிழ்நாட்டின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவராவார். இவரைப் போன்றவர்களும், திரு.சகாயம் அய்.ஏ.எஸ். போன்றவர்களும், தமிழினம் பெருமைப்படத்தக்க அதிகாரிகளாவர். இன்னும் பலர் உண்டு. அவர்களை தமிழ்நாடு அரசு முக்கியப் பொறுப்புக்களில் அமர்த்தினால், அரசுக்கு அவர்களது செயல்பாடே ‘‘நல்ல’’ பெயரைச் சம்பாதித்துத் தரும்!

ஒரு பள்ளியில் 12 மதிப்பெண் குறைவாக (முதல் மதிப்பெண்ணை ஒப்பிடும்போது) தான் பெறத் தவறிவிட்டேன் என்று கூறி, ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட செய்தியும், மற்றொரு மாணவன், தன்னை ஆசிரியர்கள், ‘நீ அதிக மதிப்பெண் வாங்கத் தவறிவிட்டாய்’ என்று அடிக்கடி கடிந்து அவமானப்படுத்துகின்றனர். அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளுகிறேன்’ என்று குறிப்பில் எழுதி வைத்துவிட்டு, தற்கொலைக்கு ஆளாகின்றான்!

‘கடிதோச்சி மெல்ல எறிக!’

ஆசிரியர்கள் கடிந்துகொள்வதும், ‘கடிதோச்சி மெல்ல எறியும்‘ தன்மையில் இருப்பதும் நல்லது; கண்டிப்புத் தேவைதான். ஆனால், அது ஒரு அளவோடு நின்றால் இளம் பயிர்கள் சிறந்து விளங்கும்!

பெற்றோர்களுக்கும் நமது அன்பான வேண்டு கோள்; பிள்ளைகளுக்கு போதிய  சுதந்திரமும், ஓய்வும், விடுமுறையில் விளையாட்டும், சுற்று லாவும் தேவைதான்!

இளைஞர்களைச் சீரழிக்கும் கைப்பேசி!

அண்மையில் மாணவ இளைஞர்களை இந்த கைப்பேசிகள் - ‘செல்போன்’ பாடாய்ப் படுத்துவது வேதனைக்குரிய காட்சிகளாகும்!

மைக்ரோ சாஃப்ட் என்ற பிரபலமான கணினி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் அவர்களின் இரண்டு  பிள்ளைகளுக்கு அவர்கள் 12 வயது, 10 வயது உள்ளவர்கள்- செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளையே விதித்துள்ளார்!

அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், நம் இளைஞர்கள் பாழ்பட்டுப் போய்விடுவார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் செல்போன் பயன் பாட்டை மிகவும் ஒழுங்குபடுத்தி, அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்தால் நல்லது!

பள்ளிக் கல்வித் துறை இதுபோன்ற பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நடை முறைப்படுத்துவதோடு, தக்க வகையில் கண் காணிக்கவும் வேண்டும்!

பாவாணர் அரங்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருக!

சென்னை அண்ணா நூலகம் பராமரிப் பின்மைக்கு அ.தி.மு.க. ஆட்சி  (முதலமைச்சர் ஜெயலலிதா) வெறும் அரசியல் காழ்ப்புணர்வுடன் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்தார் என்பதுதான் காரணமாகவிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை தலையிட்டு, அதைக் காப்பாற்றக் கட்டளைப் பிறப்பித்தது!

இப்போது 8 கோடி ரூபாய் ஒதுக்கி, அதை பழைய சிறப்புடன் மிளிருகின்ற வகையில் செய்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதே!

அதுபோலவே, எளிய அமைப்புகள் குறைந்த செலவில் கூட்டங்கள், நூல் வெளியீடுகள், ஆய்வுரைகள் - நிகழ்வுகள் நடத்தப் பெரிதும் வசதியாகப் பயன்பட்ட அண்ணா சாலையில் உள்ள மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம் பயன்பாடு இல்லாமல் உள் ளதை பழையபடி நடைமுறைக்கு - குறைந்த வாடகைக்குத் தர, பள்ளிக் கல்வித் துறை உடனடியாக ஆவன செய்யவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு குறை பாடுகள் இருந்தாலும், கடுமையான முறையில் எதிர்ப்புகளை நாம் பதிவு செய்திருந்தாலும், பள்ளிக் கல்வித் துறை - அதன் அமைச்சர், செயலாளர் ஆகியோரின் செயல்பாடுகள் தனித்துவத்தோடு விளங்குவது வரவேற்கத்தக்கதே!

நூலகங்களுக்கு நூல்களை வாங்குக!

செய்தி மக்கள் தொடர்புத் துறையின்கீழ் உள்ள புதிதாகக் கட்டமைக்கப்பட்ட கலைவாணர் அரங்கத்திற்கும் நியாயமான வாடகைக் கட்டணத்தை நிர்ணயித்து, நிறைய நிகழ்வுகள் நடத்திட ஏதுவான வாய்ப்புகளை உருவாக்குவது அவசர அவசியமாகும்!

அதுபோலவே, நூல்களை நூலகங்களுக்கு வாங்கிட முன்வரவேண்டும். அதில் குறுக்கே ‘‘திருவிளையாடல்கள்’’ இடம் இல்லாமல் செய் வதும் அவசியம்!

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
17.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner