எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக அ.தி.மு.க. அரசு, மத்திய பி.ஜே.பி. ஆட்சியிடம் அடிபணிவதா?

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கலாமா?

இந்து அறநிலையத்துறையின் வேலை, வருண ஜெபம் செய்வதல்ல - இது தொடருமானால், கழகத்தின் சார்பில் போராட்டம் வெடிக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவையே! - கி.வீரமணி

சமூகநீதி கொள்கை, கூட்டாட்சித் தத்துவம் இவற்றை மறந்து அ.இஅ.தி.மு.க. அரசு மத்திய பி.ஜே.பி. ஆட்சியிடம் அடிபணியலாமா? இந்து அறநிலையத்துறை வருணஜெபம் நடத்தலாமா - மீறி நடத்தினால் அறப்போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிரித்தாண்டு, தாங்கள் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடல்நிலைபற்றி அறிந்த பா.ஜ.க.  அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கால் நுழைக்க அதற்குரிய திட்டத்தையும், வியூகத்தையும்,  அமைதியாகவும்,  ஆர்ப்பரிப்பு இல்லாமலும் செய்து வரத் தொடங்கியது - மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி.

இதனை லாவகமாக நடத்திடும் பொறுப்பு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல்...

அப்போலோ மருத்துவமனை முதல் ஜெயலலிதா அடக்கம் வரை அவர் காட்டிய பரிவும், பாவனைகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி, அ.தி.மு.க. இரண்டு அணிகளாக்கப்பட்டு, இப்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக்கப்பட்டுள்ள அணியின் கையே ஓங்கியுள்ளது; தாங்கள் பந்தயம் கட்டிய குதிரையான  ஓ.பன்னீர்செல்வம், தங்களுக்குப் பயன்பட அவருக்கு அக்கட்சியில் போதிய ஆதரவைத் திரட்ட முடியாது என்று புரிந்து, வலுத்த அணியை வளைத்தே, தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தங்களின் முக்கிய கருவிகளான வருமான வரித்துறை, சி.பி.அய். போன்றவைகளைக் காட்டி - இவர்களிடம் மடியில் கனம் உள்ளதற்கான விளம்பரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் - ‘சேகர் ரெட்டி டைரிகள்’ போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி, ‘தலைமைச் செயலகத்தில் ரெய்டு’ நடத்தியதோடு, முன்பு எப்போதும் கேட்டிராத, கண்டிராத அளவு மத்திய அமைச்சர் வெங்கய்யா (நாயுடு) முதலமைச்சர், அதிகாரிகளை அழைத்து ‘‘பேரரசர்கள், சிற்றரசர்களிடம் விசாரணை நடத்துவதுபோல'', சில நாள்களுக்கு முன்  தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது. இது மாநில உரிமைக்கும், அரசியல் சட்டம் கூறும் கூட்டாட்சித் தத்துவத்திற்குமே வேட்டு வைத்த நிகழ்வாகும்!

மத்திய உறவுக்குக் கைகொடுப்பது வேறு; மாநில உரிமைகளை அறவே அவர்கள் காலடியில் வைத்து சரணாகதி அடைவது வேறு - அதன்மூலம் ஆட்சி ‘சடகோபம்‘ தங்கள் தலையில் இருந்தால் போதும். இருக்கும் வரை லாபம் என்பது போன்ற ஒரு நிலை உருவாகி தமிழ்நாடு மிகப்பெரும் தலைகுனிவை - மற்ற மாநிலத்தவரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது!

சமூகநீதி கூட்டாட்சித்

தத்துவம் என்னவாயிற்று?

தமிழ்நாட்டு அமைச்சர்கள் - அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்ததையே அறவே மறந்துவிட்டு, அதன் கூட்டாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதி - இவைகளையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கும் வண்ணம் நடந்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது!

தமிழ்நாட்டில் கலைஞர் - ஜெயலலிதா  - இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாகளுக்கு - ஊர்வலங்களுக்கு - அனுமதியே கொடுத்தது கிடையாது. இப்போது எல்லா மாவட்டங்களிலும் அனுமதி மட்டுமல்ல, பள்ளிக்கூடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள்  நடைபெறுகின்றன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நடைபெறுவதில் அதன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் முகாமிட்டு, மாணவர் சமுதாயத்தில் மதக் கலவரம், ஜாதிக் கலவரம் ஏற்பட்டு தங்களது ‘ஏபிவிபி’ என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினை உருவாக்க பெருத்த நிதியை ஒதுக்கி, முழுநேர அமைப்பினரையும் உருவாக்கி, திட்டமிட்ட வகையில் திராவிட இயக்க ஆட்சியை  தி.மு.க. உள்பட சேற்றை வாரி இறைத்து, விவரம் தெரியாத - வரலாறு புரியாத மாணவர்கள் - இளைஞர்களை தங்கள் வயப்படுத்த பெருத்த (மறைமுக) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது!

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில்

மாநில அமைச்சரா?

தர்மபுரி பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’ - ஊர்வலங்களில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டுள்ளது மிகமிக கண்டனத்திற்குரியது; திராவிடர் இயக்கக் கொள்கை தத்துவத்திற்கு விரோதமானது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம், இவர்கள் (ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்) டில்லியில் எப்படி மோசமாக நடந்துகொண்டனர் என்பதற்கு நண்பர் பண்ருட்டி இராமச்சந்திரனே சாட்சியாகும்!

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு இருப்பது வேறு; அதற்காக அவர்களது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் - கூட்டத்தில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கலந்துகொள்வது எவ்வகையில் நியாயம்?

வருணஜெபம் நடத்துவதுதான் இந்து அறநிலையத் துறையின் வேலையா?

தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை, மழை வேண்டி அதிகாரப்பூர்வமாக ‘‘யாகங்கள்’’ நடத்துவதும், அதனால் பார்ப்பனருக்கு கொழுத்த வருமானம் - (ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும், ஆட்சி நிலைக்கவேண்டுமென்றாலும், ‘‘யாகங்கள்’’ புதுப்புதுப் பெயரில் என்ற கோமாளித்தன பக்தி வேஷம் பார்ப்பனருக்கு லாபம் என்பது வெளிப்படை) அதோடு மதச்சார்பின்மைத் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது!

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) 51-A(h) பிரிவுப்படி ஒவ்வொரு குடிமகன் - மகளுக்கு - அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்டு ஆராயும் உரிமை, மனிதநேயம், சீர்திருத்தம் இவைகளை உண்டாக்கவேண்டும் என்பதற்கு நேர்முரண் அல்லவா?

இந்து அறநிலையத் துறை சட்டம் - பக்தியைப் பரப்பவோ, மூடநம்பிக்கைகளை மக்கள் மனதில் ஆணி அடிக்கவோ அல்ல. வெறும் தணிக்கைக்குத்தான் ஒழுங்குமுறைபடுத்தத்தானே ஒழிய, அதன் அதிகாரம் கோவிலில் சென்று பூஜை - புனஸ்காரம் செய்து மணியடிக்கும் பணி செய்வதற்காக அல்ல.

நிறுத்தாவிட்டால் போராட்டம்!

இதை அந்த அமைச்சரும், பிற அமைச்சர்களும் உணரவேண்டும். இதை நிறுத்தாவிட்டால், அறப்போராட்டங்களை நாம் தொடங்கிட வேண்டியிருக்கும்.

விண்வெளி - செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செல்லும் விஞ்ஞான யுகத்தில், மழை வேண்டி யாகமா?

எப்படி சிரிப்பது - மானக்கேடு!

 


கி.வீரமணி

தலைவர்,      திராவிடர் கழகம்.


சென்னை 
18.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner