எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வு: தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும்; தமிழக அரசும் வற்புறுத்தவேண்டும்

காவிரி நீர் - விவசாயிகள் பிரச்சினை - வறட்சி நிதி முதலியவைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் நிலை

முற்றிலும் தோல்வி கண்ட மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் மூன்றாண்டுகள்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம்: செயல்படுத்திட நீதிமன்றம்மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை, மே 26- காவிரி நீர் உரிமைப்பறிப்பு, சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வு, மூன்றாண்டு பி.ஜே.பி. ஆட்சியின் தோல்வி மயம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நீதிமன்றத்தின் வாயிலாக செயல்பட வைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இன்று (26.5.2017) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

தீர்மானம் 2:

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - செயல்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்ட மான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படியும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படியும் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தும், இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் தக்க விளக்கத்துடன் கடிதம் எழுதியும்கூட - இதுவரை, தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையில் ஆர்வம் காட்டாது - முடங்கிய நிலையில் இருப்பது கண்டனத்திற்குரியது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக - ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான தேர்வில் வெற்றி  பெற்று அர்ச்சகர்ப் பணியாற்றுவதற்குத் தகுதி பெற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முன்வருகின்ற நிலையில், சட்ட உதவி முதல் அதற்கு எல்லா வகைகளிலும் திராவிடர் கழகம் உறுதுணையாக இருப்பது என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3:

‘நீட்’ என்னும்

நுழைவுத் தேர்வு கூடாது

2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில், பி.ஜே.பி. தலைமையிலான மத்திய ஆட்சி ‘நீட்’ எனும் பெயரில் அகில இந்திய அளவில் மருத்துவர்களுக்கான நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டிருப்பது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள், முதல் தலைமுறையாக பள்ளி செல்லும் வாய்ப்பு பெற்றவர்களையும் குறிப்பாகக் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களையும் மிகக் கடுமை யாகப் பாதிக்கச் செய்யக்கூடியதாகும். மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் தடைக்கல்லாகும்.

இந்திய அளவில் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் இல்லாத நிலையில், அகில இந்திய அளவில் ‘நீட்’ நடத்துவது பொருத்த மற்றதும்- ஒரு சார்பு நிலை உடையதுமாகும் என்று இச்செயற்குழு திட்டவட்டமாக அறிவிக்கிறது. அதிலும் சி.பி.எஸ்.இ. கல்விப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தேர்வு இருப்பதால் - சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்களுக்கே பெரிய அளவில் சாதகமானது என்பது வெளிப்படை.

தகுதிப் போட்டியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்துவது என்பது _ சம அளவு கோளில் நடத்தப்படும் சமப் போட்டி என்ற நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பாடேயாகும்.

மேலும் அகில இந்திய அளவில், ஒரே மாதிரியான கேள்விகள் அடங்கிய தேர்வாக அமையாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்விகள் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தியதும் - ஒரே மாநிலத்திற்குள்ளேயே தாய்மொழியில் எழுதுவோருக்கு ஒரு வகையான கேள்வித்தாளும், ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு வேறு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளும் என்பது அறிவு நாணயமற்ற, உள்நோக்கம் கொண்ட, மாணவர்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தக் கூடிய சமவாய்ப்புக்கு எதிரான வஞ்சக செயல் என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் சி.பி.எஸ்.இ. முறையில் ‘நீட்’ தேர்வு என்பதால் மாணவர் களை சி.பி.எஸ்.இ. முறையில் படிக்கத் தூண்டுவதும், அதன் மூலம் இந்தி, சமஸ்கிருதம் படித்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இதன் பின்னணியில் உள்ள பார்ப்பனீய சதி என்பதை இச்செயற்குழு உறுதியாகவே தெரிவித்துக்கொள்கிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் ஆர்.எஸ்.எஸின் கொள்கைக்கான முன்னோட்டம்தான் இந்த ‘நீட்’ தேர்வு என்பதால் இதனை நிராகரிக்குமாறு பொதுமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றிய நிலையில், மத்திய அரசு அதனை குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல் முடக்கியிருப்பது - மாநில அரசின் உரிமையை அலட்சியப்படுத்தும் தன்மையைக் கொண்டது என்பதில் அய்யமில்லை. தமிழ்நாடு அரசும் இப்பிரச்சினையில் போதிய அளவு அழுத்தமும் நடவடிக்கையும் கொடுக்காததும் கண்டிக்கத் தக்கதேயாகும்.

மத்திய அரசு தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவை குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி, ஒப்புதல் பெறுவதில் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்திட அனைத்துக் கட்சியினரும், சமூகநீதியாளர்களும் ஆயத்தப்படவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கல்வியை மாநிலப் பட்டியிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ளதால், கல்வியில் அடிக்கடி மத்திய அரசின் குறுக்கீடுகளும், ஆதிக்கப்போக்கும் நிலவுவதால் அந்த நிலைப்பாடு மாநில உரிமைகளைப் பாதிக்கக்கூடியதாகவும் இருப்பதால், கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.

மாநில அரசுகள் இந்த வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி வற்புறுத்துமாறு இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

காவிரி நதிநீர் மற்றும் தமிழக விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு தேவை!

காவிரி நடுவர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்கிற உயர்மட்ட அதிகாரம் படைத்த அமைப்புகள் தீர்ப்புக் கூறியும் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி நியாயப்படி சேரவேண்டிய காவிரி நீர் கிடைக்காததால் தமிழ்நாட்டின் உயிர்நாடித் தொழிலான விவசாயமும், அதனைச் சார்ந்து வாழும் கோடானுகோடி விவசாயிகளும், பொதுமக்களும் பெருந்துன்பத்திற்கும், வறுமைக்கும் தற்கொலைக்கும்கூட ஆட் படும் பெரும் அவலம், துயரம் தொடர்கதையாகி விட்டது.

கருநாடக அரசு எந்த நியதிக்கும் கட்டுப்படாமல் நடந்துகொள் வது ஒருபுறம் என்றால், மத்திய பி.ஜே.பி. அரசு அரசியல் உள்நோக்கத்தோடு கருநாடகத்தின் பக்கம் நின்று தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்துள்ளது.

நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பைப் புறந்தள்ளுவதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலத்தையே தகர்க்கும் ஒரு வேலையில் மத்திய அரசே ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக விவசாயிகள் வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் இந்தியாவின் தலைநகரமான டில்லிக்கே சென்று 41 நாள்கள் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தியும், அவர்களைச் சந்திக்க மறுத்ததன் மூலம், ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்ற தன்மைக்கு உகந்தவர் அல்லர் என்பதைப் பிரதமர் நரேந்திரமோடி தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டுவிட்டார். காவிரி மேலாண்மை வாரியம் இனித் தேவையில்லை. இந்தியா முழுமையும் உள்ள அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்ற முடிவு மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒற்றை ஆட்சித் தன்மை கொண்டதேயாகும்.

அதேபோல தமிழ்நாடு சட்டப் பேரவையின் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரதமரைச் சந்திக்க முறைப்படி தேதி கேட்டும், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

இதற்கு மேலும் காலம் கடத்தாமல், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக் குரலுக்குச் செவிமடுத்து குறைகளை நேரடியாகக் கேட்டு உரிய தீர்வுகளை எட்ட வேண்டும் என்று இந்தியப் பிரதமரை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி, தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதி போன்ற பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

பி.ஜே.பி.யின் பிரித்தாளும் தந்திரமும்- அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடும்

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெய லலிதா அவர்கள் மரணம் அடைந்த நிலையில், ஆளும் அ.இ.அ.தி.மு.க.விற்குள் பிளவை ஏற்படுத்தி, அதன் அரசியல் இலாபத்தைத் துய்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு மேற்கொண்டு வரும் நடிவடிக்கைகள் அரசியல் ஆரோக்கி யமற்றவை என்பது வெளிப்படையானது.

கட்சியில் அண்ணாவின் பெயரையும் ‘திராவிட’ இனச் சுட்டுப் பெயரையும் தாங்கியுள்ள அ.இ.அ.தி.மு.க.வின் இரு பிரிவினர்களும் இவ்விரு பெயர்களுக்குரிய அடையாளத்தைப் பறிகொடுத்து, மத்திய பி.ஜே.பி அரசு இழுக்கும் கயிறுக்கு ஏற்பப் பொம்மலாட்டம் ஆடுவது விரும்பத்தகுந்ததல்ல. அக்கட்சியில் உள்ள திராவிட இயக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த வகையில் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், வற்புறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

எந்தக் காரணத்தை முன்னிட்டும், பி.ஜே.பி.யுடன் தேர்தல் கூட்டணிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த அரசியல் கட்சியும் உடன்படக் கூடாது என்றும், அவ்வாறு உடன்படுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும், தற்கொலை ஒப்பந்தமுமாகும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் 6: மூன்றாண்டுக் கால பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் !

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது எல்லா வகைகளிலும் தோல்வியைச் சந்தித்ததே என்பதில் அய்யமில்லை.

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலை, கார்ப்பரேட்டு களையும், சாமியார்களையும் தூக்கி வளர்க்கும் போக்கு, சமூகநீதி, மதச் சார்பின்மைக்கு எதிரான செயல்பாடுகள், ஜனநாயகத் தன்மையற்ற எதேச்சதிகாரப் போக்குகள், மாநில அரசுகளைத் துச்சமாக மதித்தல், மாநில அரசு உரிமைகளைப் பறித்தல், பசு வதைத் தடுப்பு என்ற பெயரால் உண்ணும் உரிமையில் கூடத் தலையிடுதல், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது வன்முறைகளை ஏவுதல், ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுதல், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, கல்வியைத் காவி மயமாக்குதல், எதிலும் இந்துத்துவ அணுகுமுறை, ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் அலட்சிப் போக்கு மற்றும் வறட்சி நிதியாக தமிழ்நாடு அரசு 39,565 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், 1,748 கோடி ரூபாய் மட்டுமே வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாட்டின் முழுக் கடன் விடுதலை என்பது 86 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதி அளித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க, அதன் ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. நியூட்ரினே ஆய்வு மய்யம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கு விரோதமான செயல்களே! முக்கியமாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் உயர்கல்விக் கூடம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முந்தைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு பெருந்துறையை எய்ம்ஸ் அமைக்க சிறந்த இடமாக அறிவித்தும், ‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்க ஒரு இடம்கூட சரியாக இல்லை’ என்கிறது மத்திய பி.ஜே.பி. அரசு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி பொதுமக்களுக்குப் பெரும் துன்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய கோமாளித்தனம், அதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தோல்வி _ இப்படி எல்லா வகையிலும் தோல்வியை சந்தித்த ஆட்சிக்குப் பெயர்தான் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

குறிப்பாக மதச்சார்பின்மைக்கு, சமூகநீதிக்கு விரோதமான இந்த இந்து மதவெறி ஆட்சியை வீழ்த்தும் வகையில் சிறு சிறு வேறுபாடுகளை மறந்து அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து வியூகங்களை வகுத்து வெற்றிபெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 7:

காவிரி நதிநீர் மற்றும் தமிழக விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு தேவை!

திராவிடர் கழகத்தின் சார்பில் வாரா வாரம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இருபால் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன் அடைந்து வருகின்றனர். பயிற்சிப் பட்டறைகளை சிறப்பாக ஏற்பாடு செய்துவரும் கழகப் பொறுப்பாளர்களையும், கழக தோழர்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது. பயிற்சி பெற்ற அவ் விளைஞர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்து, கழகப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

புதிய பொறுப்பாளர்கள்

சிவகங்கை மாவட்டம்

மாவட்டத் தலைவர்: பெ. இராசாராம், மாவட்ட செயலாளர்: ஆனந்தவேல், பொதுக்குழு உறுப்பினர்கள்: ஜெ. தனபாலன், உ.. சுப்பையா.

கும்பகோணம் மாவட்டம்

மாவட்டத் தலைவர்: குடந்தை கவுதமன், மாவட்ட செயலாளர்: உள்ளிக்கடை துரைராஜன், மாவட்ட துணைச் செயலாளர்: வழக்குரைஞர் நிம்மதி, நகரத் தலைவர்: வழக்குரைஞர் ரமேஷ்.

தஞ்சை மாவட்டம்

பொதுக்குழு உறுப்பினர்: வ. ஸ்டாலின்

அரக்கோணம் மாவட்டம்

மாவட்ட அமைப்பாளர்: சொ. சீவன்தாசு, இராணிப் பேட்டை நகரத் தலைவர்: பொ. பெருமாள்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

அவர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள்

1. திருச்சி, 2. லால்குடி, 3. விருத்தாசலம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner