எழுத்துரு அளவு Larger Font Smaller Font

80 சதவீத மக்களின் மாட்டிறைச்சி உணவைத் தடை செய்வதா?

பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து

மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்

ஜூன் முதல் தேதி மாலை வள்ளுவர் கோட்டமுன் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதவெறி மாய்த்திடுவோம் வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவரின் அன்பு வேண்டுகோள்!

 

சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?  - கி.வீரமணி அறிக்கை

மதவாதக் கண்ணோட்டத்தோடு மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைக்கும் மத்திய பிஜேபி அரசை எதிர்த்து மே 30ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், ஜூன் முதல் தேதி மாலை வள்ளுவர் கோட்டத்தின் முன் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பெருந் திரளாகப் பங்கேற்குமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பசு, காளை, எருமை, ஒட்டகம் இவை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படக் கூடாது என்ற சட்டத்தை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிறப்பித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பார்த்து உலகம் முழுவதும் உள்ளவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

குடிமக்கள் மூன்று வேளை உணவு சாப்பிடுகிறார்களா, அதற்கு உத்திரவாதம் உண்டா? என்பதில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தனது மதவாதப் புத்தியில் சிக்கி இப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இரவு உணவு இல்லாமல் தூங்கச் செல்பவர்கள் இந்தியாவில் 20 கோடிப் பேர் என்று வெட்கமில்லாமல் ஒருபக்கத்தில் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது அறிவுடைமையா?

இதில் பல்வேறு பிரச்சினைகளும், சிக்கல்களும் உண்டு. அதைப்பற்றியெல்லாம் சீர் தூக்கிப் பார்க்காமல், இந்து மதவாதப் போதைக்கு ஆளாகி இப்படியொரு கண் மூடித்தனமான வேலையில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் இறைச்சி உணவு உண்போர் 80%

உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 68 விழுக்காடு மக்கள் இறைச்சி உணவை வழக்கமாக கொண்டவர்கள் ஆவார்கள். இந்தியாவிலோ 80 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்பவர்கள் - அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்பவர்கள் 47 விழுக்காடாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலும் அன்றாட உணவு மாட்டிறைச்சியே! மேகாலயா 80.74%, லட்சத்தீவு 77.29%. ஒரு சட்டத்தின் மூலம் இதனை மாற்றி அமைக்க முடியும் என்று கருதுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடைந்தெடுத்த கோமாளிகள் என்றுதான் கருதப்பட வேண்டும்.

பிஜேபி ஆளும் கோவா, இதற்கு முன்பே எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து விட்டதே!

ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவு மாட்டுக்கறியே! 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 80 விழுக்காடு மக்கள் புரதச் சத்து குறைபாடு உடையவர்கள்; புரதச்சத்து நிறைந்த உணவு ஒன்று உண்டென்றால் அது மாட்டு மாமிசமே!

மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் லினோலிக், டால்மி டோலிக் ஆசிடுகள் உள்ளன. இவை புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உண்டு - மாட்டிறைச்சியில் அதிக சத்து இருந்தாலும் குறைந்த அளவு கலோரிகள் என்பதுதான் இதில் உள்ள தனித்துவம் ஆகும்.

உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளைப் பார்த்தால் அதில் இறைச்சி உணவே முதலிடம் வகிக்கிறது. ஹார்மோன்கள் நலனுக்கும் இவ்வுணவு அவசியமாகும்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடம் இந்தியாவே!

உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதலிடத்தில் இருந்தது; கடந்த ஈராண்டுகளில் அதனை கீழே தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2.4 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்து  சாதனை படைத்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.13,275 கோடி மதிப்புள்ள மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பசு மாட்டு மாமிசம் மட்டுமே 40 விழுக்காடாகும் (கோமாதா பேசும் இந்துத்துவா வாதிகளுக்கு "அர்ப்பணம்!")

பாரதீய ஜனதாவோ, சங்பரிவார்களோ பசு மாதாவைக் கொல்லுவதா - பசு தெய்வம் அல்லவா என்று மூக்கைச் சிந்தக் கூடியவர்கள்பற்றி நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஒன்று உண்டு. இந்தக் குலமாதா - கோமாதா இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மிகப் பெரிய முதல் அய்ந்து நிறுவனங்களை நடத்துபவர்கள் யார் தெரியுமா? பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!! பார்ப்பனர்களே!!!

ஊருக்குத்தான் உபதேசமா? முதலில் இந்த எரிவதை இழுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். இந்தியாவில் தடை செய்து விட்டு ஏற்றுமதி வியாபாரம் செய்து கல்லா கட்டும் இந்தப் பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில்

முதல் அய்ந்து இடத்தில் இருப்போர் பார்ப்பனரே!

அல் கபீர் எனும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் திமில் இல்லாத பசுக்கள், திமிலுடன் கூடிய காளைகள் கொல்லப்பட்டு,  இறைச்சிப் பாக்கெட்டுகளின் மேலே அம்புக்குறி இடப்பட்டிருக்கும். பார்ப்பனர்களால் நடத்தப்படுகின்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில் நிறுவனங்களின் பட்டியல் வருமாறு: 1. அல் கபீர் எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் சதீஷ் (மும்பை) பார்ப்பனர் 2. அரேபியன் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் சுனில் கபூர் (மும்பை) பார்ப்பனர் 3. எம்.கே.ஆர். ஃபுரோசன் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரை வேட் லிமிடெட், உரிமையாளர் மதன் அபோட் (டில்லி) பார்ப்பனர் 4. பி.எம்.எல். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், உரிமையாளர் ஏ.எஸ்.பிந்த்ரா (சண்டிகர்) பார்ப்பனர் 5. இந்திரா நூயி (தமிழ்நாடு) பார்ப்பனப் பெண்மணி.  உலகின் மிகப்பெரிய பசு மாட்டிறைச்சி விற்பனை நிறு வனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளார். 6. பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம், மாட்டிறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான அல் துவா நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

எதிலும் அறிவு நாணயம்  இல்லாத ஒரு கூட்டம் உலகில் உண்டு என்றால்,  அவர்கள் இந்த  இந்துத்துவாவாதிகளும், பார்ப்பனர்களும் தான்.

22 கோடி பேர் வேலை இழப்பர்

மாட்டிறைச்சி தடையால் அந்தத் தொழிலை நம்பி வாழும் 22 கோடி மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்! 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போகிறோம் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார்களே -  செயல்படுத்தினார்களா? குதிரை குப்புறத் தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையாக ஏற்கெனவே பணியாற்றும் 2.2 கோடி மக்களையும் நடு வீதியில் நிற்க வைக்கும் பேராபத்து இதில் பதுங்கி இருக்கிறதே!

இதன் விளைவு - இந்தியாவை உள்நாட்டு யுத்தப் பூமியாக மாற்றியமைக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி! உறுதி!!

மாட்டுச் சந்தையில் ஒரு லட்சம் கோடி  ரூபாய் புழக்கம் - 90 சதவீத வியாபாரம் சந்தையில்தான். அதில் கை வைப்பதன் மூலம் பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்திடப்படுகிறது.

எதிலும் மதவாதக் கண்ணோட்டம் என்பது ஆபத்தானது என்பதற்கு மோடி அரசின் இந்த முடிவு ஒன்றே போதுமானது.

இந்து சாத்திரங்கள் சொல்லுவது என்ன?

கோமாதா பற்றிப் பேசும் புத்திரர்கள் - இந்து மத சாத்திர நூல்களில் பசு மாமிசம் பற்றிப் பேசப்படவில்லையா? பசுவைக் கொலை செய்து 36 பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந்தவன் சுவர்க்கத்தை அடைகிறான் என்கிறதே அய்தரேய ப்ராஹ் மண பஞ்சிகா காண்டம். எப்படியெல்லாம பசுவை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற வழி முறையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதே. சிரார்த்தத்தில் விதிப்படி விதிக்கப்பட்ட பிராமணன்  மாமிசத்தைத் தோஷம் என்று புசியா விட்டால் அவன் 21 ஜனனமும் பசுவாகப் பிறப்பான் (மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 38).

இதற்கெல்லாம் இந்துத்துவாவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்?

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக்கு இணங்கி செயல்பட்டே தீர வேண்டும்; இப்பொழுது இல்லை என்றால் வேறு எப்பொழுது (Now or Never) என்ற வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

மதம் - தனி மனிதன் பிரச்சினை. உணவுப் பழக்கமும் அத்தகையதே! அதனைப் பொது வெளியில் நிறுத்தி ஆணை பிறப்பது என்பது - காட்டு ராஜாக்களின் காலம்! காட்டுத் தர்பார் நடத்தும் என்.டி.ஏ. ஆட்சியை வெளியேற்ற இதுதான் சரியான தருணம்.

மதசார்பற்ற சக்திகளே திரள்வீர்!

மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும்; அவர்கள் சொல்லும் முறையிலே சொல்ல வேண்டுமென்றால் இப்பொழுது இல்லை என்றால் நாம் வேறு எப்பொழுது?

ஒன்று திரண்டு வாருங்கள்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!! அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையை நிலை நிறுத்துவோம்!!!

நாளை (30.5.2017) மாலை சரியாக ஆறு மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்திலும் (அனைத்துக் கட்சி முக்கிய தலைவர்களும் பங்கேற்பர்)?

ஜூன் முதல் தேதியன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தின்முன் நடைபெற உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கடல் போல் திரள்க! திரள்க!! என்று அழைக்கிறோம் - அழைக்கிறோம்!

இப்பிரச்சினையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்பதை மறவாதீர்! மறவாதிர்!!

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
29-5-2017 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner