எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளுக்கும் எதிரானது

உடனடியாக அவர்களை விடுதலை செய்க!

தமிழக அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்

பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து  மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுசரித்த திருமுருகன் உள்ளிட்ட தோழர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற் குரியது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கும் விரோதமானது; விமர்சனம் செய்தாலே குற்றம் என்பதெல் லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு உடனடி யாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் களை விடுதலை செய்யவேண்டும் என்று வற்புறுத்தி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவு நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி,  வணக்கம் தெரிவித்த மே 17 இயக்கத்தின் தலைவரான தோழர் திருமுருகனையும், அவரது சக அறப்போராளிகளான தோழர்கள் டைசன், இளவழகன், அருண்குமார் ஆகியவர் களையும் தமிழ் நாடு அரசு குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அடக்குமுறைப் பிரயோகத்தின் உச்சமாகும்!  இது கண்டனத்திற்குரியது. கடந்த பல ஆண்டுகளில் இத்தகு நிகழ்ச்சிகள் நடத்தப்பட அனுமதி தந்தது எப்படி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

எப்படி நடந்துகொண்டார்?

ஈழத் தமிழர்களுக்காக கசிந்து, கண்ணீர் சிந்தி, பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மறைந்த முதலமைச்சரும், அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதாவின் (‘‘அம்மாவின்’’) அரசு என்று கூறிக்கொண்டுள்ள இந்த தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு இப்படி ஒரு யதேச்சதிகாரமான தோரணையில் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல.

எதற்கெடுத்தாலும்

‘குண்டர் சட்டமா?'

அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள்மீதும் இதுபோன்ற அறப்போராளிகள்மீதும் குண்டர் சட்டம் ஏவுவது சட்ட துஷ்பிரயோகம் என்பதில் அய்யமில்லை.

சட்டத்தின் தலைப்பே ‘குண்டர் சட்டம்.’ அப்படி இருக்கையில் இப்படி அதீதமாகப் பயன்படுத்துவது தவறான நடவடிக்கை. உச்சநீதிமன்றம் இதுபற்றி சில முக்கிய தீர்ப்புகளைத் தந்து, குண்டர் சட்டம் என்ற ரவுடிகளை அடக்கப் போடப்பட்ட சட்டத்தை ஒரு அரசு தனக்கு எதிராக அரசியல் விமர்சனம் செய்பவர்களையும், போராளிகளையும் இச்சட்டத்தின்கீழ் தண்டிப்பது எவ்வகையிலும் சட்டப்படியும், நீதிப்படியும் உரியதல்ல.

சட்டம் மீறுபவர்களை உரிய சட்டத்தின்கீழ்  நடவடிக்கை எடுக்க முன்வரட்டும், அதை விடுத்து, நாட்டில் எத்தனையோ சமூக விரோதிகள் ‘சுதந்திரமாக’ திரிவதும், அதேநேரத்தில் இப்படிப்பட்ட அறப்போராளிகள்மீது அச்சட்டம் பாய்வதும் நியாயப்படுத்த முடியாத அநியாயம்!

உடனடியாக

விடுதலை செய்யவேண்டும்

எனவே, நீதிமன்றங்கள் அரசின் இச்செயலைக் கண்டித்து ஆணைகளையும், தீர்ப்புகளையும் வழங்குவதற்கு முன்பே, விடுதலை செய்தால் தமிழக அ.தி.மு.க. தனது கவுரவத்தை நிலைநாட்டிட உதவும்.

எனவே, அவர்களை உடனே விடுதலை செய்வதே சாலச் சிறந்தது; அவர்கள் ‘‘சமூக விரோதிகளோ, குண்டர்களோ'' அல்ல!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
30.5.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner