எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மிருகவதைத் தடுப்புச் சட்டம் (1960) என்ன கூறுகிறது?

கன்கரண்ட் பட்டியல் என்பதற்குப் பொதுப் பட்டியல் என்று பொருளல்ல!

மாநில அரசின் இசைவைப் பெற்று மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே அதன் உட்பொருள்!

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

- நமது சிறப்பு செய்தியாளர்

மிருகவதைத் தடுப்புச் சட்டம் (1960) என்பது பொதுப் பட்டியலில் உள்ளது என்றால், அதன் ஆங்கில வடிவமான கன்கரண்ட் என்பதற்குப் பொருள் மாநில அரசின் கன்கரண்ட் - அதாவது இசைவினைப் பெற்றுதான் செயல்படவேண்டுமே தவிர, தன்னிச்சையாக மத்திய அரசு செயல்பட முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று (30.5.2017) மாலை ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாக திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘‘மாட்டுக்கறி உணவைத் தடை செய்யும் மத்திய பா.ஜ.க. மதவாத அரசியலைக் கண்டித்து'' நடை பெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

இது தந்தை பெரியார் மண்! அண்ணல் அம்பேத்கரின் கொள்கை பரவிய மண்! மதவாதத் தீயை, பார்ப்பன ஆதிக்கத் தீயை அணைத்திட அரசியலுக்கு அப்பால் நின்று இங்கு நாம் கூடியிருக்கிறோம்.

பாசிசப் பார்ப்பனப் பாம்பு அடிக்கடி தலையை நீட்டு வதும்,நாம்தடியைஎடுத்தால்பொந்துக்குள்புகுந்து கொள் வதும் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

குத்தகைக்குப் போன

தமிழக அரசு

தமிழ்நாட்டின் ஆட்சியைக் குத்தகை எடுத்துக் கொண்ட தைரியத்தில் கொஞ்சம் விளையாடிப் பார்க்க  ஆசைப்படுகிறது மத்திய அரசு.

இந்தச் சிறப்புக் கூட்டத்தின் சிறப்பு என்ன? தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு மாலை நேர வகுப்புபோல் செறிவாக நடந்துகொண்டுள்ளது.

ஒரு திசை திருப்பும் வேலையில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது என்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சொன்னது சரியான கருத்தே.

இங்குப் பேசப்பட்ட கருத்துகளை தகவல்களை திண் ணைப் பிரச்சாரமாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்கி’யின் கார்ட்டூன்

 

கோயபல்சு

பிச்சை வாங்கவேண்டும்

கோயபல்சு தோற்கும் அளவுக்கு மோடி செயல்பட்டுக் கொண்டுள்ளார். அண்மையில் அசாமில் மிக நீண்டதோர் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துவிட்டு (26.5.2017) அதற்காக வாஜ்பேயிக்கு நன்றியும் கூறியிருக்கிறார். தோழர்களே, உண்மை என்பதுதான் என்ன?

2009 ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யின்போதுதான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்பொழுது அத்துறையின் அமைச்சராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள். 2011 ஆம் ஆண்டில் அந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் முடிந்திருக்க வேண்டும்; இரண்டாண்டு காலதாமதமாக இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதமர் வாஜ்பேயி எங்கிருந்து வந்தார்? (வாஜ்பேயி ஆட்சிக்காலம் 13.10.1999 முதல் 22.5.2004 வரைதான்) அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பார்கள் - இவர்களின் புளுகு ‘நவக்கிரக’ங்களையும் தாண்டிய பெரும் புளுகு!

(சீனாவில் குவாங் ஜோ நகரில் உள்ள பேருந்து நிலையம் மோடியின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரப் பேருந்து நிலையம் என்று அப்பட்டமாக கடந்த தேர்தலின்போது வலைத் தளத்தில் வெளியிட்டனர் என்றால், அவர்களின் அண்டப் புளுகைத் தெரிந்து கொள்ளலாமே!

அதேபோல், பா.ஜ.க.வின் பிரச்சாரக் கூட்டங்களின் செய்திகள் போட்டோஷாப் மூலமாக பிரம்மாண்டமாக மக்கள் திரள் உள்ளதாகக் காட்டி மக்களை மயக்கியது.

அதேபோல், கனடா நாட்டில் உள்ள ஒரு சாலையை குஜராத் சாலையாகக் காண்பித்து டில்லி மாநகராட்சி தேர்தலில் மக்களை ஏமாற்றியது போன்ற பொய்ப் பிரச் சாரங்கள் ஏராளம் பா.ஜ.க.வினரின் கைவசமுள்ளது).

பார்ப்பனர்களின் முன்னோர்கள் மாட்டிறைச்சி உண்ணவில்லையா?

இன்றைக்கு மாட்டிறைச்சிபற்றியும், பசுவதை பற்றியும் பார்ப்பனர்கள் பேசுகிறார்களே, இவர்களின் முன்னோர்கள் பசு மாமிசம் உண்ணவில்லையா? யாகத்தில் போடப்பட்ட பசு மாமிசத்தைப் புசிப்பது தேவகாலம் வாழலாம் - புசிக்க மறுப்பது ராட்சச காலம்தான் என்கிறதே மனுதர்மம்.

எண்ணும் உரிமை - உண்ணும் உரிமை!

உண்பது என்பது கலாச்சாரத்தைச் சார்ந்தது. அதில் தலையிடக் கூடாது என்பதுதான் அரசமைப்புச் சட்டத் தின் நிலைப்பாடு. மொழி எப்படி கலாச்சாரத்தைச் சார்ந் ததோ அதேபோன்றதுதான் உணவுப் பிரச்சினையும். எண்ணும் உரிமையும், உண்ணும் உரிமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கட்டுமானத்தைத் தகர்க்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்திய அரசமைப்புச் சட்டம் அதைத்தான் கூறுகிறது.

கன்கரண்ட் பட்டியலில் மிருகவதைத் தடுப்புச் சட்டம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். ‘கன்கரண்ட்’ என்ற சொல்லுக்குப் பொதுப் பட்டியல் என்று பொருள் கூறுவதே கூட தவறானது.

கன்கர் (concur) என்றால், ஏற்றுக்கொள்வது; இசைவு தெரி விப்பது. அப்படியென்றால், கன்கரண்ட் லிஸ்ட் என்றால், மத்திய அரசோ, மாநில அரசோ ஒன்றையொன்று ஒத்துப் போவது - இசைவு தெரிவிப்பது என்றுதானே பொருள். அப்படிப் பார்க்கப் போனால், இந்த சட்டத்தில் மாநில அரசின் கருத்துக் கேட்கப்பட்டதா?

மாநில அரசுகள் இசைவு தெரிவித்தனவா? இந்தக் கேள்விக்குப் பதில் தேவை. மாநில அரசின் கருத்தைக் கேட்காமலும், இசைவைப் பெறாமலும் இந்தச் சட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்?

தனியார் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு மத்திய அரசின் அறிவிக்கைக்கு நான்கு வாரம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வர வேற்கத்தக்கது.

சென்னை அய்.அய்.டி.யில்

மதக் கலவரத்தைத் தூண்டுவதா?

சென்னை அய்.அய்.டி.யில் மாட்டுக்கறி உணவை சாப்பிட்டதற்காக சூரஜ் என்ற மாணவரை ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியைச் சேர்ந்தவர்கள் தாக்கி இருக்கின்றனர். அவருக்கு கண்ணில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனமான சங்கரநேத்ராலயா மருத்துவமனையில் அந்த மாணவருக்கு மருத்துவம் பார்க்க மறுக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அய்.அய்.டி. மருத்துவமனைக்கே கொண்டு சென்றுள்ளனர்.

ஒரு பல்கலைக் கழகத்தில் மதவாத அரசியலைத் திணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆரிய - திராவிடப் போராட்டமாக, மதக்கலவரமாக மாற்றிட முயற்சிக்கின்றனர். அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது; காவல்துறையினர், மாணவர் சூரஜைத் தாக்கியவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் பேசினார்.

(இந்தியா முழுவதும் மாநில வாரியாக பார்ப்பனர்களின் மக்கள் தொகை; அதேநேரத்தில் பதவிகளில், ஆட்சிப் பொறுப்புகளில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள சதவிகிதம் அடங்கிய பட்டியலை இந்தச் சிறப்புக் கூட்டத்தில் வெளியிட்டார் தமிழர் தலைவர்.

Comments  

 
#1 Ajathasathru 2017-06-01 06:23
திருவாளர் மோடி அரசு . பெரு முதலாளிகளின் எடுபிடி அரசு என்பதை நிரூபித்து வருகிறது!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner