எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 6- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பன்றி இறைச்சியை அஞ்சல் வழியாக அனுப்பி வைத்தவர்மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கொடுத்த புகார் வருமாறு:

பெறுநர்:     5.6.2017

ஆய்வாளர்,

காவல் நிலையம்,

வேப்பேரி, சென்னை - 600 007.

 

அன்புடையீர்,

பொருள்: புகார் - திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணிஅவர்களுக்கு பன்றிக்கறி  அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாக புகார் மனு:-

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த (அஞ்சல் குறியீடு 638455) திரு.க.அ.சிவசக்தி என்பவர் (மாவட்டத் துணைத் தலைவர், இந்து முன்னணி) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அஞ்சல் மூலம் பன்றிக் கறியை அனுப்பி வைத்துள்ளார். அது இன்றைக்குக் கிடைக்கப் பெற்றது.

கெட்ட நோக்கத்தோடும், சதியோடும், இழிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடும், இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாள் கழிந்த இந்தப் பன்றிக் கறியைச் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே இதனை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று பன்றிக் கறியை அனுப்பியவர்கள், நாளை வெடிகுண்டைக்கூட அனுப்ப மாட்டார்கள் என்று சொல்லமுடியாது.

இது தொடர்பாக கோவைப் பதிப்பு ‘தினத்தந்தி’ (3.6.2017 - பக்கம் 20) யில் வெளிவந்துள்ள தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால்நிலையம் முன்பு மாநகர இந்து முன்னணி சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பன்றிக்கறி அனுப்பும் போராட்டம் என்று படத்துடன் வெளிவந்துள்ளது. (நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

பன்றிக் கறியை திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பி வைத்த திரு.க.அ.சிவசக்தி மற்றும் இதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்று புகார் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner