எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லிணக்கம் இன்மை - பொருளாதார வீழ்ச்சி

உண்ணும் உணவிலும் தலையீடு - வன்முறைகள்

ஆட்சிக்கு நெருக்கமானவர்களின் செல்வப் பெருக்கு!

இதுதான் மூன்றாண்டு பி.ஜே.பி. ஆட்சி!

புதுடில்லி, ஜூன் 7 மூன்றாண்டு பி.ஜே.பி. ஆட்சி குழப்பம், பொருளாதார வீழ்ச்சி, சகிப்பின்மை, வன்முறைகளுக்கு வித்திட்டுள்ளது. இதனை வரும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் செயற்குழுவில் வீறுகொண்டு பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் நேற்று (6.6.2017) நடந் தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல், துணை குடியரசுத் தலைவர் தேர்தல், காங்கிரஸ் கட்சியின் அமைப்புத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில் கூறியதாவது:-

மத்தியில் மோடி அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகள் சமீபத்தில் முடிந்திருக்கிறது. நாட்டில் நல்லிணக்கம் இருக்கிறதா? மாறாக, குழப்பம் இருக்கிறது; பேதம் உள்ளது. சகிப்புத்தன்மை எங்கே போனது? காஷ்மீரில் மோதல்கள் அதிகரித்துள்ளன.

அடித்துக் கொல்லப்படும்

கொடுமை!

பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பிற ஒடுக்கப்பட்ட மக்கள் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரமும், பல்வேறுதரப்பட்ட கோட் பாடுகளை கொண்ட, மதங்களை பின்பற்றி வருகிற மக்களின் உணவுப்பழக்க வழக்கமும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

அரசியல்வாதிகளா, அமைப்புகளா, மனித சமூகமா, ஊடகமா எல்லாவற்றிலும் சகிப்புத்தன்மையின்மை வளர்கிறது. அடித்துக்கொல்லப்படுகிற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

ஓடியவர்கள் யார்?

சேவகர்களும், ஆட்சியாளர் களுக்கு நெருக்க மான தனி நபர்க ளும் கடந்த 3 ஆண்டுகளில் தங்களின் செல் வத்திலும், செல் வாக்கிலும் ஆச் சரியப்படத் தக்க அளவில் பெருகி இருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இருக்கிறார்கள். நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், இந்த அரசின் மகத்தான தோல்வியைக் காட்டுவதாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகரித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். மத்திய, மாநில அரசுகளின் உணர்ச்சியற்ற கையாளுதல், காஷ்மீர் மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் திட்டமிட்டு அன்னியப்படுத்தி, விரோதித்துக்கொண்டிருக்கிறது.

படை வீரர்களும், அப்பாவி மக்களும் தங்கள் உயிர்களை இழக்கின்றனர். படுகாயம் அடைகின்றனர். அங்கு அரசு தனது குறைபாடுடைய அணுகுமுறையை சரி செய்ய வேண்டும். மக்களுடைய நம்பிக்கையை மீட்பதற்கு, சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.

முக்கியமான பாடம்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் நமக்கு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. எழுச்சிமிக்க தொண்டர்களுடனும், வலிமைவாய்ந்த தலைமையுடனும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருந்த பா.ஜனதா கூட்டணி அரசை நாம் வீழ்த்த முடிந்தது.

மணிப்பூர், கோவாவில் வெற்றி பெற்ற இடங்களைக் கொண்டு அரசு அமைப்பதில் நாம் தோற்றுப்போய் விட்டோம். இது, பாரதீய ஜனதா தனது மிகப்பெரிய வளங்களை, ஆட்பலத்தை பயன்படுத்தி மக்கள் நமக்கு அளித்த உத்தரவை பறிப்பார்கள் என்பதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இதைத்தான் அருணாசலபிரதேசத்திலும், முன்னர் உத்தரகாண்டிலும் செய்தனர். இது, இனியும் தொடர நாம் அனுமதிக்க முடியாது.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால்...

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்று டாக்டர் மன்மோகன் சிங் கணித்தார். இதை அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள வளர்ச்சி புள்ளி விவரங்கள் நிரூபணம் செய்கின்றன.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் உண்மையிலேயே வங்கிகளுக்கு திரும்பி இருப்பது எவ்வளவு என்பதை இன்று வரை அரசு தெரிவிக்க மறுத்துக்கொண்டிருக்கிறது. இந்த திட்டம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட திட்டம் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிப்போம் என்று அறிவித்த திட்டமும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளைப் பெறவும் தவறிவிட்டது.

குடியரசுத் தலைவர் எத்தகையவராக இருக்கவேண்டும்?

அடுத்த சில வாரங்களில் நமது நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம். இத்தகைய தருணத்தில், இந்த உயர்வான பதவியில் அமருகிறவர்கள், நமது அரசியல் சாசனத்தை காக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

டாக்டர் மன்மோகன் சிங், ராகுல் உள்ளிட்ட தலைவர்களும், நானும் இந்த உயர்ந்த பதவிகளுக்கு எல்லோராலும் ஏற்கப்படுகிற பொது வேட்பாளரை கண்டறிய ஒத்த கருத்துடைய தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறோம். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு பிரதிநிதிகள் அடங்கிய துணைக்குழுவை ஏற்படுத்தி உள்ளோம்.

2019 ஆ-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் வெகுதொலைவில் நாம் இல்லை. நாம் இந்தியாவின் சாரத்தையும், எண்ணத்தையும் காப்பதற்கு தயார் ஆக வேண்டும். பிற்போக்கு ஆட்சியை வீழ்த்தவேண்டும். இதற்காக நாம் நமது கட்சி அமைப்பை பலப்படுத்த வேண்டும். நடந்து கொண்டிருக்கிற அமைப்புத் தேர்தல்கள் வேகமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner