எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிமீதான தாக்குதலைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுடில்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) கட்சி யின் அலுவலகத்தில் புகுந்து, கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்மீது சங் பரிவாரைச் சேர்ந்த இருவர் தாக்குதல் தொடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

தாக்குதலுக்கு ஆளான தோழர் யெச்சூரி அவர்கள் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளதுபோல, ‘‘வன்முறை, தீவிரவாதம் இல்லாமல் தனது அரசியல் செல்வாக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அதிகரிக்க முடியாது’’ என்பது சரியான கணிப்பும், உண்மையுமாகும்.

வன்முறைதான் இந்த இந்துத்துவா காவிகளின் கைகண்ட ஆயுத அணுகுமுறை என்பது உலகுக்கே தெரிந்த ஒன்றே! மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும், அதன் மூர்க்கத்தனம் கொம்பு முளைத்து, தங்களுக்கு எதிரானவர்களை முட்டி சாய்க்க முற்பட்டுள்ளது.

உ.பி.யில் என்ன நடந்துகொண்டுள்ளது? கோமாதா பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு, லத்திகளை, கொம்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு திரிகிறார்கள். உ.பி.யில் காவல்துறையின் வாகனத்திலேயே வந்து தாக்குகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். வன்முறை - பயிற்சிகள் பொது இடங்களிலேயே தங்குத் தடையின்றி நடக்க ஆரம்பித்துள்ளன.

அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டும் உள்ளன. சென்னையில் பொதுப் பூங்காக்களில் இத்தகு பயிற்சிகள் நடந்துகொண்டும் உள்ளன. காவல்துறை அதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்று தெரியவில்லை.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி யில் இருக்கிறது. அதன் பரிவாரங்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரிந்து கொண்டுள்ளன. பிஜேபி ஆட்சியின் கடைக்கண் பார்வையல்ல - நேரடியான ஆசியே அமர்க்களமாகக் கிடைத்துக் கொண்டுள்ளது. அதன் விளைவு பி.ஜே.பி.,க்கே எதிர்விளைவை ஏற்படுத்தப் போகிறது. பொதுமக்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் உண்மையான பேருருவம் அம்பலமாகப் போகிறது.

இப்பொழுதெல்லாம் பொதுமக்களே நேரிடையாகவே களத்துக்கு வர ஆரம்பித்து விட்டனர். பி.ஜே.பி.,க்கு எதிரான மக்கள் புரட்சி வெடிப்பதற்குமுன், பி.ஜே.பி.யும், சங் பரிவார்களும் தங்கள் வாலைப் பத்திரமாக சுருட்டி வைத்துக் கொள்வது நல்லது.

தோழர் சீதாராம் யெச்சூரிமீது வன்முறையை மேற்கொண்ட வர்களை சட்டத்தின் முன்னிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் அக்கறை எடுத்துக் கொள்வதன்மூலம் மத்திய பி.ஜே.பி. அரசின் போக்கில், சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையாவது காட்டிக் கொள்ளுமா என்று பார்ப்போம்.

 

கி.வீரமணி

தலைவர் , திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner