எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ம.தி.மு.க. பொதுச் செயலாளர்  சகோதரர் வைகோ அவர்கள் முறைப்படி விசா பெற்று, மலேசியாவில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்றும், மலேசிய அரசுக்கு ஆபத்தாளர் பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது என்றும் காரணம் சொல்லப்பட்டுள்ளது. மேலும்  வைகோ அவர்கள் அங்கு நடத்தப்பட்ட விதம் கண்ணியமற்றது, கண்டிக்கத்தக்கது!  இவ்வளவுக்கும் வைகோ அவர்கள் பங்கேற்கச் சென்றது பினாங்கு மாநிலத் துணை முதல்வர் வீட்டுத் திருமண நிகழ்ச்சி; அரசியல் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செல்லவில்லை. பினாங்கு துணை முதல்வர் தலையிட்டும், அதிகாரிகள் இசைந்து கொடுக்கவில்லை. வைகோமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் திடீரென்று 'ஞானோதயமாகப்' புலப்பட்டதா? 'விசா' கொடுக்கும்போது - அந்நாட்டின் தூதரகம் இங்கு என்ன செய்து கொண்டு இருந்தது?

வைகோ அவர்கள் பயங்கரவாதப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறாரா? அது உண்மை என்றால் அதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டாமா? விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளா? அப்படியென்றால் தமிழ்நாட்டையே அந்தப் பட்டியலில் சேர்க்கப் போகிறார்களா!

எந்த வகையில் பார்த்தாலும் மலேசிய அரசு வைகோ பிரச்சினையில் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதே!

ஓர் இந்தியக் குடி மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவமானத்துக்கும் பொறுப்பேற்று இந்திய அரசாங்கம் துரிதமாக மலேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.  தனிப்பட்ட வைகோ அவர்களுக்கு ஏற்பட்டது என்று இதனைக் கருதக் கூடாது; கட்சிமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும்.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner