எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றி எழுதுவதற்கு இறைவனால் கூட முடியாது - எப்படி திமுக மாற்றி எழுதினார்கள்?

- மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்

"உண்மைதான்! தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறதே அந்தத் தமிழ் ஆண்டுகளைப் பெற்றெடுத்ததே இரண்டு இறைவன்கள் (கடவுள்கள்தான்). நாரதர் என்ற ஆண் கடவுளும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளும் புணர்ந்து பெற்றெடுத்தது தான். (நாம் சொல்லவில்லை புராண அகராதியான "அபிதான சிந்தாமணி"யைப் படித்து அமைச்சர் பெருமான் தெரிந்து கொள்ளட்டும்).

அதுசரி தமிழ் ஆண்டு என்று சொல்லப்படு கிறதே, அதில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயர் உண்டா?

பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியும் அந்த அறுபதாண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள்தானே!

ஆங்கில ஆண்டு என்றால் ஆங்கிலத்தில் பெயர் இருக்கும். உருது ஆண்டு என்றால் அந்த மொழியில் இருக்கிறது.

தமிழ் ஆண்டு என்றால் மட்டும் சமஸ்கிருதத்தில் இருக்க வேண்டுமா?

சமஸ்கிருதம்தான் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். மொழிப் பிரச்சினைக்கு அதுதான் தீர்வு என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வாக்கர் (Bunch of Thoughts)  எழுதியுள்ளாரே அந்த ஆரிய அடிச்சுவடு பிறழாமல் ஏறு நடை போடும் பொன். இராதா கிருஷ்ணர்களால் வேறு எப்படித்தான் பேச முடியும்?

மற்றொரு கருத்தையும் திருவாயால் பொன்னார் உதிர்த்துள்ளார். வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்றே திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதில்கூட 'ஆஷாட பூதித்'தனம் தான். 1921இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள், கா. சுப்பிரமணியம் பிள்ளை, திரு.வி.க., சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் கூடி ஆய்வு செய்துதான் திருவள்ளுவர்நாள் என்று தைத் திருநாளைத் தேர்வு செய்தனர். இந்த அறிஞர்கள் எல்லாம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களா?

இப்படியே தமிழ் உணர்வுக்கும், இனவுணர்வுக் கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் எதிராக எதையாவது பேசிக் கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் உங்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கேயே நிறுத்துவார்கள் தமிழர்கள். (டெப்பாசிட் கிடைத்தால் போதுமல்லவா!).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner