எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு சி.பி.எஸ்.இ. உரிய விளக்கம் தராத நிலையில்

உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிடச் சொல்வதா?

ஒடுக்கப்பட்ட மக்கள் அகில இந்திய அளவில் கிளர்ந்தெழுவர்!

ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கழகம் செயல்படும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதி அறிக்கை

கி.வீரமணி veeramani

‘நீட்’ தேர்வின் முடிவை வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய சமூகநீதி அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வின் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தது. அதன் காரணமாக இம்மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த ‘நீட்’ தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இத்தடையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் - மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தடையை ரத்து செய்து ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று இன்று (12.6.2017) ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சட்டம்

என்னாயிற்று?

‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்று தமிழ் நாடு அரசு சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தும், அதுகுறித்த எந்தவிதமான பதிலும் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடமிருந்து வராத நிலையில், அவசரமாக உச்சநீதிமன்றம் இப்படி ஓர் ஆணையைப் பிறப்பித்தது எந்த வகையில் சரியானது?

மத்திய அரசு - மாநில அரசை மதிக்கும் ‘‘தரம்‘’ இதுதானா? (குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் அ.தி.மு.க. அரசு இதனை ஒரு நிபந்தனையாகக்கூட வைக்க லாமே!)

கடந்த வெள்ளியன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்த விசாரணையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்கு நீதிபதிகள் ஆறு  முக்கியமான கேள்விகளை எழுப்பி, அதற்கான விடை யைக் கூறுமாறு அறிவுறுத்தினர். அந்த வினாக்கள் அடிப்ப டையானவை - அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையும்கூட!

ஆறு முக்கிய வினாக்கள்

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் ‘நீட்’ தேர்வு நடத்தாததற்கு காரணம் என்ன?

3. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் ‘நீட்’ தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ. தேர்வை எப்படி எதிர்க்கொள்ள முடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத்தாளுக்கும், இந்தி ஆங்கிலம் மொழியில் உள்ள வினாத்தாளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த அடிப்படை வினாக்களுக்கு உரிய பதில் பெறப்படுவதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் இப்படியொரு ஆணையைப் பிறப்பிப்பது சரியானதுதானா?

உச்சநீதிமன்றம் இழைத்த அநீதி!

கோடானு கோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக் கும், கிராமப்புற மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியை உச்சநீதிமன்றம் இழைத்துள்ளது என்று சொல்லுவது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் குற்றமாகாது.

உண்ணும் உணவில் கைவைப்பு - கல்வித் திட்டத்தில் கைவைப்பு - இவற்றைத் தொடர்ந்து சமூகநீதியிலும் கைவைப்பு - இதற்குத் தீர்வுதான் என்ன?

தமிழ்நாடு மட்டுமல்ல - அகில இந்தியாவே பொங்கி எழவேண்டிய வாழ்வாதார பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணைக் குத்தும் - கொத்தும்  கொடுமையை அனுமதிக்கலாமா?

சமூகநீதிக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டுவரப்பட தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு பொங்கி எழுந்து எப்படி வெற்றி பெற்றதோ, அதற்குச் சற்றும் குறையாத முக்கிய பிரச்சினை இது - நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்!

விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து கழகம் உரிய முயற்சிகளில் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது கட்சிப் பிரச்சினையல்ல - ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களின்  ஜீவாதாரப் பிரச்சினை!

தமிழ்நாடு அரசின் சட்டம் என்னாயிற்று?

தமிழ்நாடு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?

அமைதியாக இருப்பதும் - அநீதிக்குத் துணை போவதாகவே கருதப்படும் - விழிக்கட்டும் தமிழ்நாடு அரசு!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

Comments  

 
#1 Ravitv 2017-06-13 20:16
உச்சநீதிமன்றத்த ின் அயோக்கியத்தனங்க ளில் இதுவும் ஒன்று.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner