எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பதிலடி கொடுக்க எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரை அறிவித்திடுக!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி veeramani

நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. அறிவித்திருக்கும் வேட்பாளர் என்பது - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம் என்றும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்கான ஓரங்க நாடகம் முடிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாள்களிலேயே கருத்திணக்க ‘‘சீன்களும்‘’ முடிந்து, அறிவிப்பு வந்துவிட்டது!

கருத்திணக்க முறை, பொது வேட்பாளர் - எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு வேட்பாளர் என்றால், ஆளுங் கட்சி உண்மையில் எப்படி நடந்திருக்க வேண்டும்?

சடங்காச்சாரமான அணுகுமுறை

பெயர்ப் பட்டியலில் இரண்டு அல்லது மூன்று பெயர்களைத் தேர்வு செய்து, ‘இதில் உங்களில் யாருக்கு உடன்பாடு அதனை நாங்கள் (ஆளுங்கட்சி) ஏற்கிறோம்‘ என்றல்லவா உரிய நடைமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டும்?

அப்படிச் செய்யாமல், ஏதோ ஒரு ‘‘சடங் காச்சாரமாக’’ எதிர்க்கட்சிகளிடம் பேசிவிட்டு, உடனடியாகத் தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டனர்!

இது வழக்கமான மோடி வித்தைகளில் ஒன்றுதான்! அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றி அடுத்தடுத்து வரும் தேர்தல் களில் தங்களின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடு இது!!

மத யானைக்கு

‘‘தலித்’’ முகபடாம்!

பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்குமேல் அங்கே உள்ள இவர், ஏற் கெனவே மாயாவதியின் கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவிருந்தார் - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட ‘‘தலித்’’ முகபடாம்  இந்தத் தேர்வு!

பா.ஜ.க. உயர்ஜாதி - பார்ப்பனர் மற்றும் பெரு வணிகர்களின் கட்சி என்ற உண்மை முகத்தின்மீது போடப்பட்ட ஒப்பனை இது!

அதுவும் உத்தரப்பிரதேசத்து ‘‘தலித்’’ இவர் என்ற நிலையில்,  இவர்களின் இரட்டை வேடத் திற்கு உ.பி. அரசியல் நிகழ்வே சரியான சாட்சிய மாகும்.

உ.பி.யில் தீண்டாமை

ஒழிப்பு நாடகம்!

அங்கே உள்ள புதிய ‘‘சாமியார் முதல்வரான’’ ஆதித்யநாத் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் - பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்கப்பட்டு கலவரங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், அவர்களில் சிலரை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய லட்சணம்தான் என்ன?

அம்மக்கள் எல்லோருக்கும் சோப்பு கொடுக் கப்பட்டு - குளித்து ‘சுத்தமாக்கி’ - பிறகு சந்திப்பு!

அந்த சந்திப்பில்கூட, அவர்களை நாற்காலி யில் உட்கார வைத்து முதல்வருக்குக் கைகொடுத்துவிடாமல் இருக்கும்படி பின்னே நின்ற ஒவ்வொரு போலீசும் ஒவ்வொரு நபரின் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டது எங்கும் காண முடியாத விசித்திரக் காட்சி!

2019 தேர்தலுக்கு

ஒரு பாதுகாப்பு அரண்

இந்தக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் பெறப்பட்டே அறி விக்கப்பட்ட வேட்பாளர்.

இரண்டாவது, தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கியைப் பலப்படுத்த, இது ஒரு பிரச்சார புதிய அரசியல் மூலதனம்.

மூன்றாவதாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையு டன் சேராமல் இருக்க, பிரித்தாளும் தந்திர வியூகம்!

இப்போதே பீகார் முதல்வரின் ஆதரவு - தொனியில் மாற்றம்; மாயாவதியின் குரலுக்கு ஒரு வேகத்தடை!

2019 தேர்தல் அரசியல், பின்வரும் இந்துத் துவ அரசியல் நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு பாதுகாப்பு அரண்!

இத்தனையையும் மனதிற்கொண்டே செய் யப்பட்ட ஏற்பாடு இது!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை குடியரசுத் தலைவராக்கி அமர வைத்தது முந்தைய காங் கிரசு ஆட்சி (கேரளத்து வைக்கம் தொகுதியி லிருந்தே திரு.கே.ஆர்.நாராயணன் அவர்கள்) எனவே, முதல் தடவை அல்ல!

எதிர்க்கட்சிகள்

செய்யவேண்டியது என்ன?

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைந்து விடாமல், இதற்குச் சரியான பதிலடியாக அது நிறுத்தும் வேட்பாளர் தேர்வு அமைதல் அவசி யம்; அவசரம்!

இதற்கிடையில் நடந்த மற்றொரு பதவி யாசைக் கூத்தும்  வேடிக்கையான பார்ப்பன பதவியாசை கடைசி நேரக் கூத்து!

வங்கத்துப் பார்ப்பனரான தற்போதுள்ள குடியரசுத் தலைவர் - தனது மாளிகைக்கே ஆர்.எஸ்.எஸ். தலைவரை அழைத்து தேநீர் விருந்து உபச்சாரம் செய்தது எதற்கு என்பது யூகிக்க முடிகிறதல்லவா?

அதுமட்டுமா? கொலைக்குற்றம் சுமத்தப் பட்டு,  பிறழ் சாட்சியத்தாலும், மேல் அப்பீல் இதுவரை செய்யாததாலும் தப்பித்துக் கொண் டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கண்டு ஆசி - (பரிந்துரையாகவும் இருக்கலாமோ) காஞ்சிபுரம் வந்து சென்ற கேலிக்கூத்து; ஆசை வெட்கமறியாது - பதவி ஆசை எதையுமே அறியாது அல்லவா!

அரசியல் என்றால் இப்படி செப்படி வித்தைகளின் அரங்கேற்ற நாடகம்தானா?

அந்தோ ஜனநாயகமே!

இந்நாட்டில் நீ படும்பாடு விநோதம்தான் என்ன? என்ன?

 

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
20.6.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner