எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நீர்ப் பிரச்சினை - ‘நீட்’ உள்ளிட்ட தமிழகப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டை வஞ்சித்த  பா.ஜ.க.வை

அதன் வேட்பாளரை ஆதரிக்கலாமா அ.தி.மு.க.?

பழி நீங்க, மனசாட்சிப்படி வாக்களிப்பீர் அ.தி.மு.க.வினரே!

தமிழர் தலைவர் ஆசிரியரின் காலங்கருதிய கருத்தூன்றும் அறிக்கை

கி.வீரமணி veeramani

நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் - ஆர்.எஸ்.எஸ். கொள்கை உடைய தமிழகத்தினை வஞ் சிக்கும்  பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல், சமூகநீதி, மதச்சார்பின்மைக் கொள்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் அவர்களை மனசாட்சிப்படி ஆதரிப்பீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) கூட்டணி (என்.டி.ஏ.) வேட்பாளராக, பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பு வகித்தவரும், பீகாரில் ஆளுநராக இருந்த ‘ராம்நாத் கோவிந்த்’ என்ற உ.பி.யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் ஒருவரை பிரதமர் மோடி - அமித்ஷா (கூட்டு) அறிவித்து விட்டனர்!

பி.ஜே.பி.யின் ‘ஓரங்க நாடகம்(?)’

(அவர்கள் கட்சி சார்பில் இதற்கென உரு வாக்கப்பட்ட மூவர் குழுவான ராஜ்நாத்சிங் - அருண்ஜெட்லி - வெங்கைய்யா நாயுடு ஆகி யோருக்கும்கூட முதலில் அறியாத, ‘‘பாதுகாக் கப்பட்ட பரம ரகசியமாகவே'' வைக்கப்பட்டிருந் தது).

பொது வேட்பாளர், எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசிக்கும் கருத்திணக்கம் என்ற பா.ஜ.க. - பிரதமர் மோடி அறிவித்த  ஓரங்க நாடகம்கூட நடைபெறாமல் உடனே முடிந்து விட்டது!

கொள்கை அடிப்படையில் எதிர்க்கட்சியின் சிறந்த வேட்பாளர்

இதை எதிர்த்து மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயக மாண்பு - இவைகளைக் காக்கவே - வெற்றி - தோல்வி என்பதைவிட, கொள்கை, லட்சியம், கூட்டு ஒற்றுமை - இவைகளை எண்ணி நேற்று (22.6.2017) புதுடில்லியில் காங் கிரசு தலைவர் திருமதி. சோனியா தலைமையில் கூடிய 17 கட்சிகள் - கூட்டணியின் வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான திருமதி.மீரா குமார் அவர்களை எதிர்க்கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

பலிகடாவா?

இதனை பா.ஜ.க., ஏதோ அந்த அம்மையாரை ‘பலிகடாவாக்கி’ விட்டார்கள் என்று கூறியுள்ளது - எவ்வளவு வேதனை!

ஆளுங்கட்சி வேட்பாளருக்கு எதிராக கொள்கை அடிப்படையில் ஒரு வேட்பாளராக திருமதி மீராகுமாரை நிறுத்தினால், அது எப்படி ‘பலிகடா’ ஆகும்? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி களின் கடமைதான் என்ன? பைரவ் சிங் ஷெகாவத்தை குடியரசுத் தலைவராக பா.ஜ.க. நிறுத்தியதும் பலிகடா அடிப்படையில்தானா?

தங்களுடைய வேட்பாளரைவிட தகுதி அதிகம் உள்ள அதுவும் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்திவிட்டார்களே என்ற ஆத்திரம் காரணமாகத்தானே இப்படி அபத்த மாக உளறுகிறது பா.ஜ.க.?

வெற்றியும் - தோல்வியும்

வீரனுக்கு அழகு!

வெற்றியும் - தோல்வியும் வீரனுக்கு அழகு என்பது மட்டுமல்ல; தங்கள் சுய பலத்தால் வெற்றி பெற முடியாது என்பதால்தானே, அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம், ஆந்திராவில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - இத்தியாதி கட்சி களின் துணையோடுதானே அவர்களை ஒரு புறம் தங்களது கையில் உள்ள வருமான வரித் துறை, சி.பி.அய். போன்ற ஆயுதப் பிரயோகம் செய்துகொண்டே மறுபுறம் ஆதரவு வாங்குவது எந்த வகையைச் சார்ந்தது என்பது நாடறிந்த சேதி அல்லவா?

சட்டப் பாதுகாப்புக்காக எதிரிகளிடம் சரணாகதியா?

அது ஒருபுறம் இருக்கட்டும்; தமிழ்நாட்டில் உள்ள ஆளும் அ.தி.மு.க.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியும், பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் கோஷ்டியும், பொதுச்செயலாளர் திருமதி.சசிகலா பிரிவும் (இன்னொரு புதுக் காளானும் உண்டு) இப்படி எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பது - தங் களைப் பல்வகை சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள கொடுக்கும் ‘‘பண்ட மாற்றுப் பணி’’ என்பதைத் தவிர, அதில் ஏதாவது கட்சி நலனோ, தமிழ்நாட்டு மக்கள் நலனோ, வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதி நலனோ அல்லது  மூச்சுக்கு முன்னூறு தடவைக் கூறும் அவர்களது ‘அம்மா’ வழியோ - ஏதாவது ஒன்றாவது உள்ளதா?

வாக்களிக்கவிருக்கும் அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களே உங்கள் மனச்சாட்சியை புறந் தள்ளாமல், சற்றுநேரம் யோசித்துப் பாருங்கள்!

காவிரிப் பிரச்சினையைக் காட்டிக் கொடுப்பதா?

1. காவிரிப் பிரச்சினையில் - தமிழக விவசாயி கள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் கேடாக, நீண்ட கால சட்டப் போராட்டம் எல்லாம் நடத்தி உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க ஆணையிட்டதை அப்பட்டமாகவே ஏற்காமல், வேறு கோணல் வழித் திட்டம் என்று கூறி, கருநாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்நாட்டு நியாயத்தை ‘பலிகடாவாக்கி’யுள்ள தற்குப் பாராட்டும் பரிசும் பா.ஜ.க.வுக்கு அளிப்பதற்காக நீங்கள் வரிசையாக நின்று வாக்களிக்கப் போகிறீர்களா?

2. ‘நீட்’ என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க - பொதுப் பட்டிய லில் உள்ள அரசியல் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள சட்டப்படி, எதிர்க்கட்சி தி.மு.க.வும், அதற்கு ஆதரவு தந்து - ஏகமனதாக எதிர்ப்பின்றி நிறைவேற்றி, அனுப் பப்பட்ட சட்ட வரைவுக்குக் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பாமல் - கடந்த 4, 5 மாதங்களாக கிடப்பில் போட்டு, எந்தக் காரணமும் சொல்லாது - தமிழ்நாட்டுக் கிராமப் புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பில் மண்ணைப் போட்டதற்கு கைம்மாறாக நீங்கள் பா.ஜ.க. - மோடி நிறுத்தி யுள்ள வேட்பாளரை, தமிழ்நாட்டின் நலனை அடகு வைத்துவிட்டு வாக்களித்து ஆதரவுக் கரம் நீட்ட முன்வரிசையில் நிற்கப் போகிறீர் களா?

அண்ணாவின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைப்பதா?

3. அண்ணாவின் அரசு 1967 இல் நிறைவேற்றிய இருமொழிக் கொள்கைத் திட்டத்தை குழிதோண்டிப் புதைக்க முன்னுரை எழுதிடும், இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக் கம், பண்பாட்டுப் படையெடுப்பு இவைகளை நீங்கள் ஏற்று - லட்சியங்களைப் புதை குழிக்கு அனுப்பிடும் நிலையில், வாக்களிக்கப் போகி றீர்களா?

தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு - உங்கள் ஊழல்களுக்காக மட்டுமல்லாது - தமிழ்நாடு நலன்களையும் இப்படி டில்லியிலும் அடகு வைக்கும் ‘‘பிணைக் கைதிகளைப்போல்’’ ஆகிவிட்ட பரிதாப நிலையை மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்!

மனச்சாட்சி துளியளவு இருந்தாலும், கொள்கை உணர்வு எள்மூக்கு முனையளவு இருந்தாலும், நீங்கள் மனசாட்சிப்படி வாக்கெடுப் பில் நடந்துகொள்ளுங்கள் - பழி நீங்கும்!

ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களை மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதா இருந்தால்கூட, இவ்வளவு பெரிய விபீடண சரணாகதிப் படலத்தையா நடத்தத் துணிவார்? அதையும் சற்று யோசியுங்கள்!

மனசாட்சிக்கு மதிப்பளித்து வாக்களிப்பீர்!

மனசாட்சிக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டு நலன்காக்க குடியரசுத் தலைவர் - வாக்கெடுப்பு ஒரு நல்வாய்ப்பு - அதனை நழுவ விடாதீர்! சரித்திரப் பழிதான் பின் மிஞ்சும்!

தனிப்பட்ட விருப்பு - வெறுப்பால் அல்ல - தமிழர்களின் திராவிடர் இயக்க ஆட்சியே இல்லாமல் - ‘கழகம் இல்லா ஆட்சி’ என்று பகிரங்கமாகப் பேசுபவர்களின் உதைத்த காலுக்கா இப்படி முத்தம் தருவது?

வெட்கம்! வெட்கம்!! வேதனை, தாங்க முடியாத வேதனை!

சிந்தியுங்கள்!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner