எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கவுகாத்தி ஜூன் 24 அசாம் காமாக்யா கோவிலுக்கு நிர்வாணமாக வரும் சாமியார்களை எதிர்த்துப் பொதுமக்கள் கிளர்ந்ததால், நிர்வாண சாமியார்கள் அடிபணிந்தனர்.

அசாம்  மாநிலம், கவுகாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு அசாதா எனப்படும் இந்து மாதத்தில் வரும் அமாவாசையன்று அகோரி எனப்படும் அம்மணச்சாமியார்கள் உடலில் துணியில்லாமல் நகரை வலம் வந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாம். இவர்கள் இவ்வாறு அம்மணமாக நகரத்தில் சுற்றுவதால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் முதல் பெண்கள் வரை முகம் சுளிக்க நேரிடுகிறது. மேலும் தெருவில் செல்லும் இவர்கள், பெண்களைப் பார்த்து ஆபாச சைககளை செய்வதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தவண்ணம் இருந்தனர்.

இந்த ஆண்டும் அசாதா அமாவாசை அன்று அம்பச்சே விழா விமரிசையாக துவங்கியது. நான்கு நாள்கள் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்க பல லட்சம் பேர் வருகை தந்து கொண்டிருக்கின்றனராம்.  இந்த நிலையில் அகோரிகள் நகரத்தின் எல்லையில் குவிய ஆரம்பித்தனராம்.

நகர நிர்வாகத்தின் சார்பில் இவர்களிடம் சென்று நகரத்திற்கு வருவதென்றால் நீங்கள் ஆடைகளை அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதற்கு அகோரிகள் ஒப்புக்கொள்ளவில்லை, ‘‘நாங்கள் பிரம்மச்சாரிகள், இல்லறத்திற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை, இதை வலியுறுத்தும் விதமாக நாங்கள் அம்மணமாகவே ஊர்வலம் வருவோம்'' என்று கூறிவிட்டனர்.

ஆனால், மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அம்மணமாக வந்தால், நாங்கள் சாமியார்களைத் தாக்கவும் தயங்கமாட்டோம் என்று உள்ளூரில் சிலர் கூறியதால், பதட்டம் அதிகரித்தது.

இதற்குப் பதில் கூறிய அகோரிகள், நாங்கள் அம்மணமாக பேரணி வருவோம், யார் எங்களைத் தாக்குவார்கள் என்றும், நாங்கள் அவர்களை சமாளித்துக் கொள்வோம் என்றும், காவல்துறையினர் இதில் தலையிடவேண்டாம் என்றும் கூறியதை அடுத்து நகரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.  ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் (ஜூன் 22) நகரத்திற்கு வந்த சாமியார்கள் இடுப்பில் சிறிய ஆடையை மட்டும் அணிந்துகொண்டு வந்தனர். மேலும் அவர்கள் மாலையில் கூட்டமாக வராமல் தனித்தனியே வந்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சில அகோரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் பயப்படவில்லை; அமாவசை துவங்கும் முன்பு நாங்கள் கோவிலில் வழிபட்டுவிட்டு நகரத்தை விட்டு திரும்பிவிடவேண்டும். ஆகவே, நாங்கள் இம்முறை வழிபட்டுவிட்டுத் திரும்பிவிட்டோம். ஆனால், இது நிரந்தரமல்ல; எங்களை அரசோ, சட்டமோ, மக்களோ, கோவில் நிர்வாகமோ ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆண்டு அக்டோபரில் துர்கா பூசை அன்று நாங்கள் மீண்டும் வருவோம்; அப்போது நாங்கள் அகோரிகளாகத்தான் நகர்வலம் வருவோம். அப்போது எங்களை யார் தடுக்கிறார்கள்? என்று பார்க்கலாம்'' என்றுகூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அசாதா அமாவாசை அன்றும், கும்பமேளாக் களின்போதும் அகோரிகள்தான் முதலில் சென்று வழிபடவும், குளிக்கவும் உரிமை உள்ளது. அவர்கள் சென்ற பிறகுதான் பிறர் செல்வார்கள்.

அகோரி போர்வையில்

தங்கியிருக்கும் குற்றவாளிகள்

இந்த விழாவில் அகோரிகளைப்போல் வேடமிட்டு மகாராட்டிரா காவல்துறையினரும் சென்றுள்ளனர். இவர்கள் சாமி கும்பிடச் செல்லவில்லை. சைலால் ஹிராலால் ஜெதியா என்ற அகோரி சாமியார் மகாராட்டிராவின் ஷீரடியைச் சேர்ந்தவர். இவர் பல வெளிநாட்டுப் பெண்களை ஜெர்மன் சுற்றுலா, ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதைக் காணொலியாக எடுத்து விற்று பணம் பார்த்திருக்கிறார். இதுகுறித்து பல வெளிநாட்டுப் பயணிகள் புகார் அளித்ததை அடுத்து மும்பை காவல்துறையினர் தற்போது அசாமில் முகாமிட்டு, அந்த அகோரி சாமியாரைத் தேடி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து அகோரிகளும் கூடும் இந்தத் திருவிழாவில் அந்தப் பாலியல் வன்கொடுமை செய்த அகோரியும் கலந்துகொள்ளக் கூடும் என்ற நிலையில், அவரை மடக்கிப் பிடிக்க மும்பை காவல்துறையினர் அகோரி வேடமிட்டு கவுகாத்தியில் காத்திருக்கின்றனர்.

இதேபோல், 2015 ஆம் ஆண்டு உஜ்ஜையினியில் நடைபெற்ற கும்பமேளாவின்போது நீண்ட நாள் கொலைக் குற்றவாளியான ஒரு அகோரியை மத்தியப் பிரதேச காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்திருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner