எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நீட்’ தேர்வு முடிவு அறிவிப்பு - தமிழ் நாட்டுக்குப் பேரிடி!

தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால்

குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க முன்வரட்டும் அதிமுக அரசு!

ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்து கழகம் களம் காணும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கி.வீரமணி veeramani

‘நீட்’ தேர்வின் முடிவுகள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பேரிடியாக அமைந் துள்ளதால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு விதி விலக்குக் கோரும் சட்டத்தை நிறை வேற்றிக் கொடுக்காவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு

38 விழுக்காடு இடங்கள்

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ளன. தமிழ்நாட்டின் மீது பேரிடியாக விழுந்துள்ளது. நாம் எச்சரித்தபடியே முடிவுகள் அமைந் துள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 38 விழுக்காடு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பல்வேறு கல்வித் திட்டங்கள் இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு நடத்தினால் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கே சாதகமாக இருக்கும். மாநிலக் கல்வித் திட்டத்தின்கீழ் படித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கிராமப் புற மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தோம். நாம் எச்சரித்தபடியே முடிவுகள் வெளி வந்துள்ளன.

5 சதவீத சி.பி.எஸ்.இ.

மாணவர்களின் நலனுக்காக...

5 சதவீத சி.பி.எஸ்.இ. மாணவர்களின் சாதகத் துக்காக, நலனுக்காக 95 சதவீத மற்ற மாநில கல்வி வழிபடிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவது நியாயம்தானா? சமூக அநீதி அல்லவா!

இந்தப் பாதிப்புக்கான பொறுப்பை மத்திய - மாநில அரசுகளும், இந்திய மெடிக்கல் கவுன்சிலும், நீதிமன்றங்களும், பெற்றோர்களும்தான் ஏற்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாகவே தெளிவுபடுத்தி இருந்தோம் முன்பு!

அறிக்கைகளின் வாயிலாகவும், பொதுக் கூட்டங்களின் வாயிலாகவும், மாநாடுகள் வாயிலாகவும் ‘கரடியாக’க் கத்தினோம் - அனைத்துக் கட்சிகளைக் கூட்டி தீர்மானங் களையும் நிறைவேற்றினோம்.

ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந் துரையாடலை நடத்தினோம் - கருத்தரங்கையும் நடத்தினோம். நாடு முழுவதும் அலைந்தோம்! அலைகிறோம்!!

குதிரை காணாமல் போனபின்

லாயத்தை இழுத்துப் பூட்டலாமா?

பாதிக்கப்படும் பெற்றோர்கள் எந்த அளவு ஒத்துழைப்புக் கொடுத்தனர். எழுதுவதற்கே வெட்கமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும் பிரச்சி னையில் பெரிய அளவு ஆதரவு காட்டியிருக்க வேண்டாமா? குதிரை காணாமல் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டலாமா?

மாநிலக் கல்வி திட்டத்தின்கீழ் படித்தவர் களுக்கு 85 சதவீத இடங்களை அளிப்போம். சி.பி.எஸ்.இ. பாடத்தின்கீழ் படித்தவர்களுக்கு 15 சதவீத இடங்கள் அளிப்போம் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று அறிவித்துள்ளார். சமூக நீதியில் எதிர் மாறாகவே தொடர்ந்து நடந்து வரும் நீதிமன்றங்கள் இதனை ஏற்குமா என்பது கேள்விக் குறியே!

‘நீட்’ தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் அதனைக் குடியரசுத் தலைவருக்கே அனுப்பாத மத்திய அரசின்மீது ஒரு கண்டன வார்த்தை உண்டா? போதுமான அழுத்தம் தான் கொடுக்கப்பட்டதா? மயிலிற கால் தானே வருடியது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு

ஒப்புதல் அளிக்காவிட்டால்...

இப்பொழுதுகூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் குடியரசுத் தலை வர் தேர்தலை அதிமுக அரசு புறக்கணிக்கும் என்று சொல்லட்டுமே! தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை - தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதியின் மீது மதிப்பு இருந்தால் அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் - அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இன்னொரு முக்கியப் பிரச்சினையை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘நீட்’ தேர்வு முடிவு அறிவிப்பில்,

OTHERS,
OBC,
SC,
ST
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

OBC, SC, ST    என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சட்டத்தில் எங்கும் இடம் இல்லாத OTHERS    என்பது எங்கிருந்து வந்தது?

GENERAL / UR - UN RESERVED, OPEN COMPETION    என்றுதானே இருக்கவேண்டும். திறந்த போட்டியல்லவா அது?

அதிக மதிப்பெண்கள் பெறும் SC, ST, OBC    மாணவர்களும் இடம் பெறுவதுதான் அந்தத் திறந்த போட்டி - பொது இடம்.

தேர்வு முடிவுக்குப் பின் அது

‘‘OTHERS' என்று மாற்றப்பட்டது ஏன்?

இப்பொழுது அறிவிக்கப்பட்ட முறையைப் பார்த்தால் திறந்த போட்டிக்குரிய 51 சதவீத இடங்களும் உயர் ஜாதியினருக்கு (FORWARD COMMUNITY) மட்டும் தாரை வார்ப்பதாக அல்லவா இருக்கிறது! அதாவது சட்டப்படி இட ஒதுக்கீடு சதவீதம் அறிவிக்கப்படாதவர்களுக்கு 51 சதவீதத்தைத் தூக்கிக் கொடுக்கும் சதி யல்லவா இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் - இதே ‘நீட்’ தேர்வு அறிவிப்பில் GENERAL    என்றுதான் இருந்தது. தேர்வு முடிவுக்குப் பின் அது OTHERS என்று மாற்றப்பட்டது ஏன்?

அறிவு நாணயமல்ல!

இதற்குள் கண்டிப்பாக ஒரு மோசடி இருக்கிறது. இதற்கு முன்பே கூட இதுபோன்ற விஷமத்தை மத்திய தேர்வு ஆணையம் செய்ததுண்டு! ஓங்கி அடித்தபின் சரி செய்திருக்கிறது. உடனடியாக இது திருத் தப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று உரிய பரிகாரம் காணப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கல்வித் தரம் சரியில்லாததே நீட் தேர்வில் இடங்கள் குறைந்ததற்கு காரணம் என்று கல்வியாளர்கள் என்ற போர்வையில் உள்ள சமூக அநீதி யாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி திட்டங்கள் இங்கு இருக்கும் போது சி.பி.எஸ்.இ. அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தியதை மறைத்து விட்டு இப்படி ஒரு திசை திருப்பும் வாதத்தை முன் வைப்பது அறிவு நாணயமல்ல!

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்...

மேல்தட்டு மக்களுக்கு துணைபோகும் போக்குதானே இது! பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆனவர் எல்லாம் தகுதியற்றவர்களா? இது ஏற்கெனவே டாக்டர்கள் ஆனவர்களை இழிவுபடுத்துவதும், கண்டனத்துக்குரியதும் ஆகும்.

போராடிப் போராடிப் பெற்ற சமூக நீதிக்கு ஏற்பட இருக்கும் இந்த ஆபத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை - ஒத்த கட்சியினரை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமூக நீதிக்காக எந்த விலையையும் கொடுக்க தமிழர்களே தயாராவீர்.

 

கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.


முகாம்: குன்னூர்

25.6.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner