எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தனியார்த் துறைக்கு தாரை வார்ப்பதில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சூழ்ச்சியும் இருக்கிறது

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

கி.வீரமணி veeramani

ஏர் இந்தியா, எண்ணூர் காமராசர் துறைமுகம் முதலியவற்றை தனியாருக்கு விற்றுத் தீர்ப்பதுதான் மூன்றாண்டு மத்திய பி.ஜே.பி. அரசின் சாதனையா? தனியார்த் துறைக்குத் தாரை வார்ப்பதில், இட ஒதுக்கீடு ஒழிப்பும் உள்ளே பதுங்கி இருக்கிறது என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு:

‘ஏர் இந்தியா’ என்ற விமானக் கம்பெனி போக்கு வரத்தில் இந்திய அரசின் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும். நீண்ட காலமாக பணியாற்றிவரும் அந்த நிறுவனத்தை அதில் நட்டம் வருகிறது என்று காரணங்காட்டி, தனியாருக்கு (அநேகமாக டாட்டா வுக்கு) விற்பதற்கு வேண்டிய பச்சைக் கொடியை மத்திய மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (28.6.2017) முடிவு செய்துவிட்டார்கள்.

தனியாருக்கு விற்று,

அரசை நடத்தும் அவலம்!

2014-2015 இல் ஏர் இந்தியாவின் நட்டம் (விமானத் துறை அமைச்சர் அலுவலகக் கணக்குப்படி)

5,859.91 கோடி ரூபாய்.

நிகர நட்டம் 2015-2016 இல், (நட்டம் குறையும் நிலையிலும் விற்பனையா!)

2,636 கோடி ரூபாய்.

இதன் கடன் 50,000 கோடி ரூபாய்.

எனவே, இதைத் தனியாருக்குத் தாரை வார்த்து அந்த முதலீட்டை வைத்து அரசு நடத்தவேண்டும் என்பது திட்டம். இதுபோல, விமான நிலையங்கள் பலவும், தொடர்வண்டி நிலையங்கள்பலவும் தனி யாருக்கு வாடகைக்கு விடப்படவும் உள்ளன!

கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) காங்கிரசு தலைமையிலான ஆட்சி சரியாக நடைபெறவில்லை; நாங்கள் வந்தால் சிறப்பாக ஆட்சி புரிவோம் என்று வாக்குறுதி கொடுத்து, பதவிக்கு வந் தது மோடி தலைமையிலான (என்.டி.ஏ.) ஆர்.எஸ்.எஸ். ஆட்சி!

அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்னாயிற்று?

இப்படி பொதுத் துறை நிறுவனங்களை - திட்ட மிட்டே தனியாருக்கு - பெருமுதலாளிகளுக்கு முழுமையாக விற்று விடுவதுதான் மூன்றாண்டுச் சாதனையா?

முந்தைய ஆட்சி திறமையற்றது என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மோடி அரசு, இப்படிப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வந்த பிறகு நட்டத்தைப் போக்கி, கடனை அடைத்து, இலாபகரமாக நடத்து வோம் என்றது என்னாயிற்று? பாருங்கள், அரசியல் சட்ட பீடிகையில் உள்ள ‘‘சோசலிச’’ - ‘‘சமதர்மத்தை’’ நாங்கள் எப்படி ஒழித்து வருகிறோம் என்று காட்டுவ தாக இல்லையா இதுபோன்ற முயற்சிகள்?

நட்டம் வரும் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு - பெரும் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கனதனவான்களுக்கு விற்கிறோம்; வேறு வழியில்லை எங்களுக்கு என்றால், அவர்களுக்கு நியாயமாக மூன்று கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்.

சிறிய நாடான சிங்கப்பூரைப் பாரீர்!

தகுதி, திறமை, ஊழலற்ற நிர்வாகம் என்று தம்பட் டம் அடித்து உலக நாடுகளுக்குச் சென்று திரும்பும் மோடி ஆட்சியின் திறமையின்மையைத் தானே இந்த தொடர் நட்டங்களும், கடனை அடைக்க முடி யாமையும் காட்டுகிறது?

1. வெகுசிறிய நாடான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA.) அதன் அரசால் ஆரம்பிக்கப்பட்டு, 70 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி; எவ்வளவு பயண நம்பகத்தன்மையில் தனித்த சாதனை (ரேட்டிங்) - அந்தத் திறமை நம் நாட்டில் பஞ்சமா? சிக்கல் எங்கே உள்ளது? திட்டமிட்டே இந்த விமானக் கம்பெனி நட்டத்தில் நனைகிறது!

2.இரண்டாவதுகேள்வி,தனியாருக்கு-கார்ப்பரேட் திமிங்கலங்களுக்கு பொதுத் துறையை விற்றாக வேகண்டும் என்ற முடிவுதான் இதற்கு அடிநீரோட்டமா?

மற்றொரு முக்கிய நோக்கம்

இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே!

3. மற்றொரு முக்கிய உள்நோக்கமும் உண்டு - பொதுத் துறை நிறுவனங்கள் இப்படி தனியாருக்கு விற்க இந்த மத்திய அரசு முன்வருவதில்...

அது என்ன தெரியுமா?

இட ஒதுக்கீடு, சமூகநீதியை ஒழித்துவிடலாம்.  இவற்றை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று அடித்து வீழ்த்திடவும் திட்டமாகும்!

தனியார் மயம் என்றால் இட ஒதுக்கீடு தற்போது இல்லையே!

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட எந்த சமூகத்தினைச் சார்ந்தவரும் இம்மாதிரி நிறு வனங்களில் நுழைய முடியாத நிலைதானே (தனியார் மயமாகும்போது) ஏற்படும்?

இலாபத்தில் நடக்கும் பொதுத் துறை நிறுவனங்களையும் விற்பது ஏன்?

நட்டத்தில் நடைபெறும் பொதுத் துறை நிறுவனங் களை மட்டுமா மத்திய அரசு விற்கிறது? லாபத்தில் நடக்கக்கூடிய நவரத்தினங்களைக்கூட அவற் றின் பங்குகளை விற்று வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ‘பெல்’ - திருவெறும்பூர் கனரகத் தொழிற் சாலையின் பங்குகளையும் மெல்ல மெல்ல  விற்று வருகின்றனவே!

சென்னை அருகே - எண்ணூரில் காமராசர் பெயரில் உள்ள பிரபலமான பெரிய கப்பல் துறை முகத்தினையும் தனியாருக்கு விற்க பல்வேறு ஆயத்தங்களைச் செய்து வருகின்றனரே! சேலம் இரும்பாலை என்னாயிற்று?

அம்பானிகளும், அதானிகளும்தான் இவை போன்ற வற்றை வாங்கிடும் தனி நபர்களாக இருப்பார்கள்!

இலாபம் ஈட்டும் எண்ணூர் துறைமுகத்தையும் விற்பதா?

ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் லாபம் வரும் கல்வி வள்ளல் காமராசர் பெயரில் உள்ள எண்ணூர் கப்பல் துறைமுகத்தை ஏன் விற்கவேண்டும்? பொன் முட்டையிடும் வாத்தினை ஒரே தடவையில் கொன்றுவிட ஏன் துடியாய்த் துடிக்கிறார்கள்?

நட்டத்திற்காகவும் விற்பாளர்களாம் - லாபம் வந்தாலும் விற்பாளர்களாம் - இதன் நோக்கம்தான் என்ன?

சோசலிசம் என்று முகவுரையில் அரசியல் சட்டத் தில் குறிப்பிட்டிருப்பதை செயல்படுத்தும் முறையா இது?

ஏழை, எளிய மக்களின் வரிப் பணம் எப்படியெல் லாம் பெரு முதலாளிகளுக்குச் செல்லுகிறது என்பதும், சமூகநீதி, இட ஒதுக்கீடு இனி இந்த விற்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.

பெருமுதலாளிகளின் மகிழ்ச்சிதான்

மூன்றாண்டு சாதனையா?

இந்த ஆட்சியின் மூன்றாண்டு கால சாதனை பெருமுதலாளிகளுக்குத்தான் மகிழ்ச்சி; ஒடுக்கப்பட் டோர் தம் வேலை வாய்ப்பில் தொடர் துன்பம். விவ சாயிகள் வேதனையோ நாளும் பெருகும் அவலம்!

மூன்றாண்டு மோடி ஆட்சியின் மகத்தான சாதனைகள் இவைதான்!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.

 

சென்னை

29.6.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner