எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடவுள் 'கருணையே வடிவானவன்', 'ஆபாத் பாந்தவன்', 'அனாதை ரட்சகன்' - 'ஜீவாத்மாக்களைக் காப்பாற்றும் பரமாத்மா' என்பதெல்லாம் எப்படிப்பட்ட இட்டுக் கட்டிய மூடநம்பிக்கைகளின் உச்சி - புரட்டு என்பதை கடுகளவு பகுத்தறிவைப் பயன்படுத்துவோரும் கண்டறியலாம். அன்றாட நிகழ்ச்சிகள் அவலங்களாக நடைபெறுவதே போதிய சாட்சியங்களாகும்!

திருப்பதிக்குச் சென்று, ஏழுமலையான் உண்டியலுக்குக் காணிக்கை செலுத்தி, காரை "அவனிடம்" காட்டி  (அவனை ஏதோ பிரேக் இன்ஸ்பெக்டர் போல் நினைத்து), திரும்பும் போது ஏற்பட்ட விபத்தினால் காரும், உரிமையாளரும், சென்ற பக்தர்களும்கூட பலியான சோகம் - நம்மைப் போன்ற மனிதநேயர்களான நாத்திகர்களுக்கும்கூட இதய வலியை உண்டாக்குகிறது.

கருணையே வடிவானவனாக அக்கடவுள் இருந்தால்,  தன்னைக் காண வந்தவர்களுக்கு இப்படி ஒரு பலி நிகழ்வதைத்  தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா?

நாளும் இத்தகைய விபத்துச் செய்திகள் வருவது வழமையாகவும், வாடிக்கையாகவும் ஆகி வருகின்றனவே!

சக்தி வாய்ந்த ஜோதிடர்களோ, 'பிரசன்னம் நம்பூதிரிகளோ' எவராவது இத்தனை மணிக்கு, இந்த நேரத்தில் இங்கே என்று சுட்டிக் காட்டி விபத்து நடக்கும் என்று கூறி விட்டால் எவ்வளவு உயிர்களை நாம் - எச்சரிக்கை செய்து காப்பாற்றி விடலாமே!

ஜோதிடர்களே திடீர் மாரடைப்பாலும், விபத்துக் களாலும் சாகின்றனரே! தந்தை பெரியார் கேட்பார்,

"தன்னைக் காக்கத் தெரியாதவன் (கடவுள்) உன்னை எப்படிக் காப்பான்?  யோசித்தாயா?" என்று!

'இது கடவுளுக்கு மட்டுமா? ஜோதிடர்களுக்கும் பொருந்த வேண்டுமே! நடந்ததுள்ளதா? இல்லை; காரணம் ஜோதிடம் ஒரு போலி விஞ்ஞானம் (றிsமீuபீஷீ ஷிநீவீமீஸீநீமீ) அது!

அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்கவென்று பக்தர்களை - அரசு விளம்பரப்படுத்தி அழைத்துச் செல்வது வருடா வருடம் செய்யும் "திருப்பனிக் கூத்து!" (மதச் சார்பின்மையைக் கேலிக் கூத்தாக்கும் செயல்!)

இவ்வாண்டு பக்தர்கள்  ஒரு பஸ்ஸில் சென்றபோது தீவிரவாதிகள் சுட்டதில் சுமார் 7,8 பேருக்கு மேல் உயிர் இழந்தனர்; பலர் காயமுற்றார்கள்.

'கருணையே வடிவான கடவுள்', 'அவனில்லாத இடமே இல்லை' என்ற கடவுள் வகையறாக்கள் யாரும் அந்த பக்தர்களை இத்தீவிரவாதிகளினான மனிதநேயமற்ற கொலைகாரர்களின் குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்கு வழி செய்யவில்லையே!
பின் என்ன கடவுள் சக்தி - பக்தி? - "வெங்காயம்?"

இது மட்டுமல்ல; வேறு சில அமர்நாத் யாத்திரை  பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் உருண்டு சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளார்களே!
நம் இதயங்களில் ரத்தம் கசிகிறது! நாம் நாத்திகர்களாக இருந்தபோதும்  - காரணம் நமது மனிதநேய உணர்வே.

பக்தர்களாயினும் அவர்களும் மனிதர்கள் அல்லவா? என்ற சிந்தனை நம்மை இரக்கப்பட வைக்கிறது! (நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும் சங்கராச்சாரியார் போல மனிதநேயமற்றவர்கள் அல்லவே நாம்) கடவுள்கள் கருணாமூர்த்திகள்... அப்படி யாரும் இல்லை; இல்லவே இல்லை என்பது இப்போதாவது புரிகிறதா! நம்பிக்கையாளர்களே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner