எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பிஜேபி அரசுக்குத்  தமிழர் தலைவர் வேண்டுகோள்

"பசு பாதுகாவலர்கள்" என்று கூறி பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடத்தப்படும் வன்முறைகள் கண்டு உலக நாடுகளும், ஏடுகளும் இந்தியாவைப் பற்றி தரக் குறைவாக விமர்சிக்கும் நிலையிலிருந்து விடுபட, மத்திய அரசு நிறைவேற்றிய பசுவதைத் தடையாணையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி அவர்கள் "பசுப் பாதுகாவலர்கள்" என்பவர்கள் அத்துமீறி நடந்து கொண்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காலந்தாழ்ந்தது - ஆனாலும் வரவேற்கிறோம்

இது காலந்தாழ்ந்த ஓர் எச்சரிக்கை என்ற போதிலும் நாம் இதனை வரவேற்கிறோம். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதைப் பொய்யாக்கும் வகையில் இப்போதாவது பிரதமர் வாய் திறந்து கண்டனம் தெரிவித்திருப்பது ஒரு வகையில் அவரது அரசு, உலகளாவிய நிலையில் பரவி வரும் அவப் பெயரைத் துடைப்பதற்காகவாவது இது பயன்படக் கூடும்.

வெளிநாட்டு ஏடுகளும் கண்டனம்

பிரிட்டிஷ் பிரபல ஆங்கில வார ஏடு 'தி எக்கனாமிஸ்ட்' (The Economist) ஏட்டிலும், அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்', 'வாஷிங்டன் போஸ்ட்' போன்ற நாளேடுகளின் கடும் விமர்சனங்கள் பெருமை தரத்தக்கதாக இல்லை.

பிரபல நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் அவர்களைப் பற்றிய ஒரு சிறுகுறு ஆவணப் படத்தில் அவர் கூறிய 'பசு' "ஹிந்துத்துவா" போன்ற சொற்களைக்கூட ஒலி கேட்க இயலாத சொற்களாக (Mute) தணிக்கையாளர்கள் ஆக்கி விட்டமை குறித்து அவரது வருத்தத்தை இந்தியாவின் பிரபல ஆங்கில மற்றும் வங்காள மொழி ஏடுகள், ஊடகங்கள் விமர்சித்திருப்பது பிரதமரின் கவனத்திற்குச் செல்லாமலா இருக்கும்?

நாம் எல்லோரும் "கோமாதா - பசுத் தாய் பிள்ளைகள்" என்று கூறுவதே எந்த அளவுக்கு அறிவுடைமை!

'கோமாதா'பற்றி விவேகானந்தர்

தனது உரையாடல்கள் தொகுப்பு நூலில், ஆர்.எஸ்.எஸ். தனது வழிகாட்டிகளில் ஒருவராகக் கருதும் விவேகானந்தர் (அவரது இயற்பெயர் நரேந்திரன் - அப்பெயரைத்தான் பிரதமர் மோடி சூட்டிக் கொண்டுள்ளார்) அவர்கள் கூற்று பசுவின் பிள்ளைகள் என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடியுள்ளார் என்பது பலருக்கு தெரியுமே!

இவ்வளவு கால மவுனத்தைப் பிரதமர் கலைத்து கண்டனம் செய்ததுகூட, நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் இப்பிரச்சினை தீயாய் எரியும் கொதி நிலை ஏற்படுமே என்பதைத் தணிக்க அல்லது தவிர்க்க ஒரு உத்தியாகவோ, வித்தையாகவோ அமைந்து விடக் கூடாது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில்...

செயலில் அவரது கட்சிகள் ஆட்சி செய்யும் உ.பி. ம.பி. ராஜஸ்தான், குஜராத், அரியானா, ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் தான் காவிக் குண்டர்கள் இப்படி உயிர்க் கொலைகளைப் பட்டாங்கமாகச் செய்து, சட்டத்தை செயலற்ற வேடிக்கைப் பொருள்களாக்கி விடும் அவல நிலை தொடர் கதையாகிறது.

பசுப் பாதுகாப்பு என்பதற்கான மிருகவதைத் தடை ஆணையைத் திடீரென்று பிறப்பித்து, நாட்டில் தேவையற்ற கொந்தளிப்பை - கொலை நிகழ்வுகளை உருவாக்கிய ஆணையை பிரதமர் மோடி அரசு உடனடியாக திரும்பப் பெறுவது அறிவுடைமை!
உச்சநீதிமன்றம் இதற்குத் தடையாணை வழங்கியுள்ளது!

தடையாணையை ரத்து செய்க!

அது செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்கு முன்னரே, சாதுர்யமாக இந்த ஆணையை ரத்து செய்வது, நாடாளுமன்றத்தில் கிளம்பவிருக்கும் புயலையும் வெளியில்  நடக்கும் விவசாயிகள் போராட்டத்தையும் தவிர்த்திடலாம். கிழட்டுப் பசு மாடுகளைச் சந்தைகளில் விற்று, புது மாடுகளை வாங்கிப் பால் தொழில், விவசாயம் முதலியவற்றை அமைதியாக நடத்திடவும் அவ்வாணை ரத்து, அவர்களை நிம்மதிப் பெரு மூச்சு விடச் செய்யுமே!

இடையில் உள்ள அதிகார வர்க்கம் இவ்வா ணையைத் தவறாகப் பயன்படுத்தி கையூட்டுகள் பெறும் ஊழல் படலத்திற்கும் முற்றுப் புள்ளிஏற்படும்.

'குறைந்த ஆட்சி நிறைந்த ஆளுமை' (Maximum Governance, With Minimum Government) என்று பிரதமர் மோடி அடிக்கடி செய்யும் உபதேசத்திற்கும் அர்த்தம் உண்டு என்று காட்டும் வாய்ப்பு ஏற்படும் அல்லவா!


சென்னை                                                                                    தலைவர்
18-7-2017                                                                              திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner