எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 19- 'நீட்' பிரச்சினை முடிந்துவிட்டது என்று யாரும் முடிவுக்கு வர வேண்டாம். நல்ல முடிவு காணும் வரை மக்கள் போராட்டம் தொடரும் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற விழாவின்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழர் தலைவர்.

நீட் தேர்வை எதிர்த்து ஒரு சமூகநீதி போராட்டம் நாடெங்கும் வெடித்திடும். இதுவரையில் தொடர்ந்து ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பாக அத்துணை கட்சிகளையும் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களையும், மாநாடு, கருத்தரங்குகளையும் நடத்தியது. மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சியினாலும் ஒரு கோடி அஞ்சலட்டைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தத்திலே கையெழுத்திட்டு...

நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ரத்தத்திலே கையெழுத்திட்டு, தங்கள் நெஞ்சத்தில் வடியக்கூடிய ரத்தக் கண்ணீரையும் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள். எங்களையும் சந்தித்தனர்.

இதையெல்லாம் பார்த்தும் தமிழ்நாடு அரசு இன்னமும் மவுனம் சாதிக்கக் கூடாது தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற் புறுத்தி, தங்களுடைய மாநில உரிமையை நிலை நிறுத்தவேண்டும்.

இந்திய அரசியல் சட்டப்படி, தமிழ்நாடு அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கோருவது என்பது பிச் சையோ, சலுகையோ அல்ல.

மாறாக, அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கிற மகத்தான உரிமை. அந்த உரிமையை மாநில அரசு வலியுறுத்திப் பெறவேண்டும்.
அடுத்ததாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் தமிழக உறுப்பினர்கள் - குறைந்தபட்சம் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நிபந்தனை வைக்கலாமே!

இவ்வளவு நாள் இதுவரையில் இல்லாது மத்திய இணையமைச்சர் மதிப்பிற்குரிய பொன்.ராதா கிருஷ்ணன் அவர்கள், இப்பொழுதுதான்  நாங்கள் கல்வி அமைச்சரிடம் நீட் தேர்வுபற்றி பேசவிருக் கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் இது வரையில் இப்படி சொன்னதில்லை.

இதன்மூலமாக தமிழ்நாட்டில் சுவரெழுத்து என்னவென்று ஓரளவிற்கு பி.ஜே.பி. புரிந்துகொண்டு வருகிறது என்று நாம் நினைக்கிறோம். அந்த வகை யில், நிச்சயமாக நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்.

ஏற்கெனவே நீட் தேர்வு பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில்,  எந்த மாநிலம் தங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - நாங்கள் நீட் தேர்வு எழுத விரும்பவில்லை என்று கோருகிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு உரிமை உண்டு என்று அந்தப் பரிந்துரையில் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி என்பதும் நிறைவேற்றப்படவேண்டும். அரசியல் சட்ட கடமையையும் அவர்கள் செய்ய வேண்டும். எனவேதான், இதில் தமிழக அரசு, தமிழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தவேண்டும். இல்லையானால், பெருந்திரள் போராட்டம் - மக்கள் சமுத்திரம் பொங்கி எழும்.

தி.மு.க.வோடு...

செய்தியாளர்: நீட் தேர்வு தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் உங்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அது தொடர்பாக நாளைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களைக் கூட்டியுள்ளார். திராவிடர் கழகத்தோடு இணைந்து எந்த மாதிரியான போராட்டத்தை தி.மு.க. முன் னெடுத்துச் செல்ல உள்ளார்கள்?

தமிழர் தலைவர்: நாளைக்கு அதைத்தான் முடிவு செய்ய உள்ளார்கள். நாங்கள் அதனை யூகத்தினால் சொல்ல முடியாது. நாளைக்கு அவர்கள் முன்னெடுத்து செல்வார்கள். நீட் தேர்வு நடந்து விட்டது - முடிந்து விட்டது என்று யாரும் நினைக்கவேண்டாம்.

நீட் தேர்வு ஒழிக்கப்படுகிற வரையில், தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படுகின்ற வரையில் போராட்டம் தொடரும் - தமிழகத்தில் 22 அரசு மருத் துவக் கல்லூரிகள் இருக்கின்றன. கரையான் புற் றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது போல, பிற மாநிலங் களில் தமிழகத்தில் உள்ளது போன்ற கல்லூரிகள் கிடையாது. ஆகவே, இங்கே உள்ள கல்லூரிகளில் எளிதாக நுழைந்துவிடலாம் என்று நினைப்பதற்கு இடமே கிடையாது. ஆகவே, அதற்குரிய திட்டங்களை தி.மு.க. வகுக்கின்றபொழுது, திராவிடர் கழகம், ஒத்தக் கருத்துள்ள அத்துணைப் பேரும் அவர்களோடு இணைந்து போராடுவோம்.

- இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.


அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!

செய்தியாளர்: நடிகர் கமலகாசன் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறாரே, அவர் அரசி யலுக்கு வருவது தமிழக அரசியலுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களா? கமல் - ரஜினி அவர்களை ஒப் பிடும் பொழுது யார் சிறப்பாக அரசியலில் செயல் படுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அத்தைகளுக்கு மீசை முளைக் கட்டும் - பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner