எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்
கழகத் தலைவர் அறிவிப்பு

சென்னையில் இன்று (20.7.2017) நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 'நீட்' தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்குத் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அனைத்துக் கட்சிகளும், 'சமுதாய அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை திராவிடர் கழகம் முழு மனதோடு வரவேற்கிறது. திராவிடர் கழகத்தின் சார்பிலும், அது ஒருங்கிணைத்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பிலும் (தி.மு.க. உள்பட) பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கால கட்டத்தில் அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பாகப் பங்கேற்கும்.

ஜெர்மனியில் நடைபெறவிருக்கும் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்க நானும், சில முக்கிய கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் செல்லவிருப்பதால், சென்னையில் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் கழகத் தோழர்கள் பங்கேற்பார்கள்; மற்ற மாவட்டங்களிலும் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கான முயற்சிகளை கழகப் பொறுப்பாளர்கள் இன்று முதற் கொண்டே மேற்கொள்ளவும் வேண்டுகிறோம்.

சென்னை                                                                                                                   தலைவர்
20-7-2017                                                                                                              திராவிடர் கழகம்


சென்னை, ஜூலை 20 'நீட்' தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும், குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 27ஆம் தேதி மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற வேண்டும் என்றும் அதில் அனைத்துக் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும், மாணவ, மாணவிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் கோரும் தீர்மானம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (20.7.2017) காலை நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து இன்றைக்கு கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 21.12.2010இல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த போது திராவிட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச் சராக இருந்த திரு. குலாம்நபி ஆசாத் அவர்களுக்குக் கடிதம் எழுதி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் உடனடியாக வழக்குத் தொடர்ந்து நீட் தேர்வுக்குத் தடை பெற்று, தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அன்றைக்கு கழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த  வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டு, நீட் தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த வரையிலும், மத்தியில் தி.மு.க.  பங் கேற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரையிலும், மருத்துவப் படிப்பு களுக்கு நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விட வில்லை.

ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வும் கூட் டணி அமைத்துக் கொண்டு இடஒதுக்கீட்டுக் கொள் கையை வேரறுக்கவும், மாநில உரிமைகளில் சமா தானம் செய்து கொள்ளவும், கிராமப்புற மற்றும் நகர் புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்க்கவும் இந்த நீட் நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நுழைத்துள்ளன.  இந்த நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக1.2.2017 அன்றே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் அதிமுக அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது.  22.6.2017 அன்று தமிழக மாணவர்களின் நலனை காக்கப் போகிறோம் என்று கபட நாடகம் போட்டு ஒரு அரசாணையை வெளியிட்டு, அந்த அரசாணையும் இப்போது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் மாநிலப் பாடதிட்டத்தில் பிளஸ் டூ படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85 சதவீத இடங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பறி போயிருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 4,675 மாணவர்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதுடன் மாண வர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவேதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கே அனுப்பாமல் மாநிலத்தின் ஜனநாயகப் பொறுப்பைச் சிறிதும் மதிக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் ஈவு இரக்கமற்ற முறையில் விபரீத விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித் தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 27.-7.-2017, வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது என்று இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது. இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும்,சமுதாய அமைப்புகளும், மாணவ- மாணவியரும் பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழகத்தின் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner