எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த இந்நாளில் ‘நீட்’டை ஒழிக்க சூளுரை ஏற்போம் என காமராசர் சிலைக்கு இன்று (ஜூலை 15) மாலை அணிவித்தவுடன் அங்கிருந்த செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பச்சைத் தமிழர், தமிழ்நாட்டின் கல்வி வள்ளல், தமிழ்நாட்டின் இரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலே போற்றிப் புகழப்பெற்ற பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய பிறந்தநாளான இன்று (15.7.2017) அவரால் உருவாக்கப்பெற்ற கல்வி நீரோடையில் முதலைகள் உள்ளே புகுந்து, மீண்டும் நம்முடைய பிள்ளைகளுடைய கல்விக்கு ஊறு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, மருத்துவக் கல்வியிலே கிராமத்துப் பிள்ளைகளும், ஏழை எளிய பிள்ளைகளும் படிக்க இயலாத வண்ணம், நீட் என்னும் மிகப்பெரிய தடையை ஏற்படுத்தி, கண்ணி வெடியை இங்கே புதைத்திருக்கிறார்கள். காமராசர் பிறந்த நாளில் அந்த நீட்டை ஒழித்து, காமராசர் சுட்டிக் காட்டிய தகுதி, திறமை மோசடி என்பதை, அடையாளம் கண்டு பெரியார் வழியில் வெல்லுவோம். இதுதான் காமராசர் அவர்களுடைய இந்த பிறந்த நாளிலே தமிழகம் எடுத்துக்கொள்ளுகிற ஒரு சூளுரை.

தமிழ்மண்ணிலே பிறந்த காமராசர் அனைத்திந்திய தலைவராக பெருமையோடு இருந்த காலத்திலே, அவரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டம் காவிக்கூட்டம். பசு வதைத் தடுப்பு என்ற பெயராலே  அவரை உயிரோடு எரிக்க முயன்ற கூட்டம், இன்றைக்கு காமராசர் பெயரையும் முகமூடிபோல பயன்படுத்துவதை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம்.

தமிழர்கள், தமிழ் மண் ஏமாறாது. இது பெரியார் பிறந்த மண். காமராசர் ஆண்ட மண். அண்ணா ஆண்ட மண். கலைஞர் ஆண்ட மண். திராவிட இயக்கத்தின் மண் என்ற முறையிலே மிகத்தெளிவாக இதனை நிரூபிப்போம்!
காமராசருடைய பிறந்தநாளிலே இதையே சூளுரை யாகவும் ஏற்கிறோம்.

வாழ்க காமராசர், வாழ்க தந்தை பெரியார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner