எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூலை 21 சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அவரின் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மனிதநேய மிக்க மனிதர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழாரம் சூட்டினார்.

சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை நடத்திய மணவழகர் மன்றத்தின் 61ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், மணவழகர் மன்றத்தின் முன்னாள் காப்பாளர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவும் நேற்று (20.7.2017) மாலை சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மணவழகர் மன்றத்தின் காப்பாளரும், முன்னாள் தலைமை நீதிபதியுமான பு.ரா. கோகுல கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். வள்ளல் எம்.ஜி.ஆரின் சிறப்புகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு. திருநாவுக்கரசர், சென்னை வானொலி நிலையத்தின் மேனாள் உதவி இயக்குநர் வே. நல்லதம்பி ஆகியோர் எடுத்துரைத்து உரையாற்றினர்.

இறுதியாக வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் படத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றுகையில்:

மனிதநேயமிக்க ஒரு வள்ளலின் உருவப்படத்தை திறக்கும் வாய்ப்பு தந்தை பெரியாரின் தொண்டனாகிய  எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வராக வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்த காலத்தில் பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடினார். பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை அரசு ஆணையின் மூலம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். தந்தை பெரியாரின் பொன் மொழிகள் நூலுக்கு இருந்த தடையை நீக்கினார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்த 31 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்திக் கொடுத்தார். பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்கினார். இன்னும் எவ்வளவோ தொண்டறங்களை செய்த மனிதநேயமிக்க மனிதர் வள்ளல் எம்.ஜி.ஆர். என அவருக்கு புகழாரம் சூட்டினார்.
முன்னதாக இவ்விழாவில் பங்கேற்ற வர்களை சென்னை மணவழகர் மன்றத்தின் செயலாளர் கே. கன்னியப்பன் வரவேற்றார். நிறைவாக மன்றத்தின் துணைச் செயலாளர் சு. கருணாநிதி நன்றி கூறினார்.

இச்சிறப்புமிக்க விழாவில் நீதிபதி பாஸ்கரன், நீதிபதி சவுந்திரபாண்டியன், பெரியார் பல்கலைக் கழக முன் னாள் துணைவேந்தர் தங்கராஜ், பெருங்கவிக்கோ. வா.மு. சேதுராமன், சென்னை முன்னாள் மேயர் சா. கணேசன், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், தரமணி மஞ்சுநாதன், புரசை அன்புச்செல்வன், பெரியார் திடல் சுரேஷ், மகேஷ், சக்திவேல், விமல், அசோக், தொழிலாளரணி ராஜு மற்றும் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner