எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12 ஊர்களில் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை ஒத்துழைப்புக் கொடுத்றீதவர்கள் அனைவருக்கும் பாராட்டு நன்றி!

பிப்ரவரி தொடங்கி ஜூலை வரை 12 ஊர்களில் சிறப்பாக நடைபெற்ற பெரியாரியப் பயிற்சிப் பட்டறையின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி, ஜூலை 9 வரையில், பல வார விடுமுறை நாட்களில், பெரிதும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், தமிழ்நாடு முழுவதிலும் பல மாவட்டங்களில் நமது இளைஞர்கள், மாணவர்களுக்குப் "பெரியாரியப்" பயிற்சிப் பட்டறையை  நடத்துவது என்று தலைமைச் செயற்குழு முடிவின்படி -

நெய்வேலி, ஏலகிரி, சென்னை (பெரியார் திடல்), நெமிலி, லால்குடி, திண்டிவனம், திருத்துறைப்பூண்டி, மருங்குளம், சுருளி (தேனி மாவட்டம்), காரைக்குடி, குன்னூர், குற்றாலம் ஆகிய 12 ஊர்களில் நடத்தினோம். (நாமக்கல் மட்டும்தான் பாக்கி).

1200 இளைஞர்கள்

இதுவரை அருமையான இருபால் இளைஞர்கள், மாணவமணிகள் - பட்டதாரிகள், பட்டயதாரர்கள், பல வகை படிப்பாளிகள் உட்பட சுமார் 1200 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்!

நம்பிக்கை

நல்ல கொள்கையாளர்களாக அவர்களில் பலரும் 'செதுக்கப்பட்டு'ள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. (கட்டுப்பாடு காத்தவர்கள் அனைவரும்) ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள்.
40 ஆண்டு குற்றாலப் பயிற்சிப் பட்டறையும் பாடுபட்டவர்களும்

குற்றாலத்தில்  தொடர்ந்து (இடையில் ஓரிரு ஆண்டுகள் தவிர) நடைபெற்று வந்து இப்பெரியாரியப் பயிற்சி பட்டறை 40ஆவது ஆண்டு ஆகும்!
இதனைத் துவக்கக் காரணமான  பெரியார் பெரும் தொண்டர்கள் தி.ஆர். தியாகஅரசன், சிவனணைந்த பெருமாள், கீழப்பாவூர் வழக்குரைஞர் பாண்டிவளவன், பேராசிரியர் அறிவரசன், டேவிட் செல்லதுரை, டாக்டர் கவுதமன், டாக்டர் பிறைநுதல் செல்வி, பொறியாளர் சி. மனோகரன், மதுரை பே. தேவசகாயம், கோவில்பட்டி செல்லதுரை, தூத்துக்குடி தோழர்கள் காளிமுத்து, பெரியாரடியான்,  பால். ராசேந்திரம், சாமி. திராவிடமணி, நெல்லை திருமலை, நெல்லை சங்கரலிங்கம் என்று எண்ணற்றோர் உண்டு. சிலர் விடுபட்டிருக்கவும் கூடும்! (மன்னிக்க).

வரலாறான பேராசிரியர்கள்

வகுப்பெடுத்து இன்று வரலாறாகியுள்ள நமது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் பெரும் புலவர் பேராசிரியர் ந. இராமநாதன், கு.வெ.கி. ஆசான், பெரியார் பேருரையாளர் இறையன், மு.நீ. சிவராசன், வழக்குரைஞர் கோ. சாமிதுரை போன்றோரை மறக்கவே முடியாது.

துவக்கத்திலிருந்து உதவிய திராவிட முன்னேற்றக் கழக குற்றாலம் பிரமுகர் பண்பாளர் திரு. இராஜராஜம் உட்பட பலரின் உதவியோடு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

வள்ளல் வீகேயென் அவர்களை மறக்க முடியுமா?

வள்ளல் 'வீகேயென்' கண்ணப்பனாரின் அளப்பரிய கொடை - இடம், உணவு, உபசரிப்பு எல்லாம் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத பேருதவிகள்!

இவ்வாண்டு அவரை படமாகப் பார்த்த நிலையில் நம் கண்கள் குளமாகின! என்ன செய்வது இயற்கையின் இயல்பை ஏற்பதுதானே பகுத்தறிவாளர் கடமை.

இவ்வாண்டு அவரது படத்திறப்பை - அவரது மூத்த மகன் கேப்டன் 'வீகேயென்' ராஜா அவர்கள் அனுப்பி வைத்த படத்தை - திறந்து வீர வணக்கம் 'வீகேயெனு'க்குத் தெரிவித்து நான் எனது நிகழ்ச்சியைத் துவக்கினேன்.

இவ்வாண்டு கேப்டன் 'வீகேயென்' இராஜா அவர்கள் தந்தையைப் போல தனது கடமையைச் செய்தார். அவருக்கு நமது இயக்கச் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி

மற்றும் நமக்கு எல்லா வகையிலும் இந்த பெரியாரியப் பயிற்சி (Training on Periyarism) வெற்றிகரமாகக் கடுமையாக உழைத்த நமது அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், பால். இராசேந்திரம், த. திருப்பதி மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்து மகிழ்கிறோம். (பட்டியல் 3ஆம் பக்கம் காண்க)
பயணங்கள் முடிவதில்லை!


சென்னை      தலைவர்
14-7-2017       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner