எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏழை எளிய மக்களின் சத்துணவான மாட்டிறைச்சிக்கு தடைபோடுவதை கைவிடுக!

மாட்டிறைச்சி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண் மையில் பிறப்பித்த ஆணையை ஏற்று, ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கு கிடைக்கும் சத்துணவான மாட்டிறைச்சிக்குத் தடை செய்வதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி அவர்கள், 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற  'வளர்ச்சி'  - 'குஜராத் மாடல்' என்றெல்லாம் தேர்தலின் போது தம்பட்டம் அடித்து, - ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் மீது இருந்த அதிருப்தியை மூலதனமாக்கிக் கொண்டு, ஆட்சியைப் பிடித்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன!

"2 கோடி பேருக்கு வேலை கொடுத்து வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவேன்" - "60ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை -  60 நாள்களில் நிறைவேற்றிக் காட்டுவேன்" என்று தேர்தலில் முழங்கினார் மோடி.

கறுப்புப் பணம் மீட்பு நீர்மேல் எழுத்தாகி விட்டது

18 வயது புதிய வாக்காளர்களும் - பழைய வரலாறு அறியாத வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் இளைஞர்களும் நம்பி வாக்களித்தனர்.
ஆனால் நடந்ததென்ன? "கறுப்புப் பணத்தை மீட்டு உங்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாயைப் போடுவோம்" என்று கூறியது நீர்மேல் எழுத்துகளாகியது!

விவசாயிகளின் வறுமையைப் போக்கி, அவர்களை வாழ வைப்போம் என்று கூறிய தேர்தல் வாக்குறுதி காற்றில் பறந்து சென்று விட்டதோடு அல்லாமல், சுமார் 11,400 விவசாயிகள் வறுமை, கடன் தொல்லை,  வறட்சியின் கொடுமை - காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்ததோடு, இப்பட்டியல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நீண்டு கொண்டே இருக்கிறது!


ஒற்றை ஆட்சி முறை ஒத்திகை

மாநிலங்களின் பல உரிமைகள் - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பறிக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி முறைக்கு ஒத்திகை பார்ப்பது போல் உள்ளது.

"கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை" என்கிற கிராமிய பழமொழிபோல, ஆர்.எஸ்.எஸ். .... அஜெண்டாவான பசுப்பாதுகாப்பு - 'கோமாதா - குலமாதா பாதுகாப்பு' - மாட்டுக்கறி விற்பனைக்கெதிராக பசுமாடுகளை சந்தைகளில் விற்பதற்குத் தடை என்பதும், அரசின் விமான சேவையில், உள்நாட்டில் வெறும் காய்கறிகளில் சமைத்தவைகள் தான் பரிமாறப்படும் என்று தன்னிச்சையான உண்ணுதலுக்குத் தடைப்போடும் விசித்திர ஒற்றை-  ஒருமைப்பாடு ஆணைகளை - மனம் போன போக்கில் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் பிறப்பிப்பது, எவ்வகையில் ஜனநாயக ஆட்சியின் அம்சங்களாகும்?

உணவில் எதற்குப் பாசிசம்?

மாட்டிறைச்சி என்ற ஏழை - எளிய மக்களுக்குக் கிடைக்கும் சத்தான மலிவு உணவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. விரும்பாதவர்கள் உண்ண வேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லையே;  உணவுப் பிரச்சினையில்  எதற்குப் பாசிசம்? அதற்குப் பசுப் பாதுகாப்பு என்று பெயர் சூட்டுவது அசல் கேலிக்கூத்து!

அதை செயல்படுத்துவது என்பது கூட அரசின் காவல் துறையின் - சட்டத்தின் கடமையாகத்தான் இருக்க முடியுமே தவிர, தனியாக ஆர்.எஸ்.எஸ்., காவி குண்டர் படை மற்றவர்களை, கொலை செய்வது, தாக்குவது, நாடு தழுவிய அச்சுறுத்தல் அலங்கோல ஆளுமையாக்குவது எவ்வகையில் நியாயமாகும்?

பசுப்பாதுகாப்பு படையினரின் தாக்குதல்

அண்மையில் மத்திய ஆர்எஸ்.எஸ், பா.ஜ.க. அரசின் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடைபோட்டுள்ளது.  பசுப் பாதுகாப்புப் படையினர் என்ற பெயரால் தனி நபர்கள், வன்முறை வெறியர்கள், கொலைச் செயல்களில், தாக்குதல்கள் நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஆணையில் கூறியிருப்பதற்குப் பிறகாவது, மத்திய - மாநில அரசுகள் இந்த சர்ச்சையின் ஆணிவேரான ஆணைகளை ரத்து செய்து குப்பைக் கூடைக்கு அனுப்பிட முன் வரவேண்டும்!

எதேச்சதிகார ஆட்சியாக மாற்றிட...

மக்களாட்சியை தாங்கள் விரும்பும் எதேச்சதிகார ஆட்சியாக மாற்றிட இவர்கள் பிரமாணம் எடுத்த இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது!

உலகம் முழுவதும் பலரும், பல பிரபல ஏடுகளும் இந்த மாட்டிறைச்சித் தடைப் பிரச்சினையை வெகுவாக கண்டித்து கேலி செய்கின்றன.
பிரதமர் மோடி, அவருடைய குஜராத்தில் அதிகமான தோல் ஏற்றுமதி வருமானம் மூலம் அந்நிய செலவாணி பல கோடிகள் கிடைப்பதை அவரால் கூட மறுத்து விட முடியாதே!

பின் ஏன் இந்த இரட்டை நாடக வித்தை? மக்கள் உணவு பழக்கம் என்பது உணர்ச்சி பூர்வப் பிரச்சினை; தலித்கள், இஸ்லாமியர்கள், ஏழை பாட்டாளிகளின் உணவில் கை வைத்து அவர்களின்  வயிற்றில் அடிப்பது நல்லதா? மறு பரிசீலனை உடனே தேவை!

சென்னை    தலைவர்
22.7.2017    திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner